பைகளில் பிளாஸ்டிக், பேப்பர், பருத்தி எதுவாக இருந்தாலும், அவை அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முதலில், நாம் புதியதாக ஒரு பையை வாங்கினாலே அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல் என்கின்றனர் நிபுணர்கள். பிளாஸ்டிக் பைகள்தானே சுற்றுச்சூழலுக்குக் கேடு, பேப்பர் பைகளும், பருத்தி பைகளும் பயன்படுத்தினால் என்ன தவறு? என்று சிந்தித்தால் அவை பிளாஸ்டிக் பைகளைக் காட்டிலும் மோசமானவை. பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்ய முடியும்.
ஒரு பை, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதா என்று சிந்திக்கும்போது அதன் ஆயுட்காலம் முடிந்தபின் அது என்னவாகும் என்பதை பொறுத்தே முடிவு செய்கிறோம். ஆனால், அந்த பையை தயாரிக்க ஆகும் செலவு குறித்தோ அல்லது ஆற்றல் குறித்தோ சிந்திப்பது இல்லை. ஒரு பை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதா இல்லையா என்பதை இந்த நான்கு விஷயங்களை கொண்டு நாம் கணிக்க முடியும்.
அந்த பையை தயாரிக்க எவ்வளவு ஆற்றல் தேவைப்படும்; அதை எத்தனை முறை மறுசுழற்சி செய்யலாம்; மறுசுழற்சி செய்வது எளிதானதா; அதன் ஆயுட்காலம் முடிந்தவுடன் எத்தனை சீக்கிரத்தில் மக்கும்; `நான்கு மடங்கு ஆற்றல் தேவை`
பேப்பர் அல்லது பருத்தி பைகளை தயாரிப்பதும் சுற்றுச்சூழலை பாதிக்கும்.
2011ஆம் ஆண்டு வட அயர்லாந்து சட்டசபை, வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், பிளாஸ்டிக் பையை தயாரிக்க தேவைப் படும் ஆற்றலைக் காட்டிலும் பேப்பர் பையைத் தயாரிக்க நான்கு மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேப்பர் பைகளை தயாரிக்க காடுகள் அழிக்கப்பட வேண்டும். ஆனால், எண்ணெய் சுத்திகரிப்பின் கழிவுகளால் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு. அந்த ஆய்வின்படி, பிளாஸ்டிக் பைகளைக் காட்டிலும் பேப்பர் பை தயாரிப்பு முறையில் நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தயாரிப்பதைக் காட்டிலும் அடர்த்தியான தீய ரசாயனங்கள் உற்பத்தியாகின்றன. “அது கணமாகவும் உள்ளது,” என்று நார்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் நீடித்த நிலைத்த கழிவு மேலாண்மையியல் பேராசிரியர் மார்கரெட் பேட்ஸ் தெரிவிக்கிறார். “எனவே அவற்றை எங்கு தயாரிக்கிறோம் என்பதைப் பொறுத்து அவற்றை எடுத்துச் செல்வதில் பல சுற்றுச்சூழல் விளைவுகளும் உள்ளன.”
அதில் சில சுற்றுச்சூழல் பாதிப்புகள், புதிய காடுகளை வளர்ப்பதன் மூலம் சரி செய்யப்படலாம். வளி மண்டலத்தில் வரக்கூடிய கார்பனை கட்டுபடுத்தி அது பருவநிலை மாற்றத்தை தடுக்க உதவும். அதிகளவிலான கார்பன் பேப்பர் பையை தொடர்ந்து பருத்தி பைகள். அதனை தயாரிக்க அதிகளவிலான கார்பன் மற்றும் நீர் தேவைப்படுகிறது.
“பருத்தி என்பது அதிகம் தண்ணீர் தேவைப்படுகிற பயிர். எனவே, இது பேஷன் துறையிலும் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.” என்கிறார் மார்கரெட்.
2006ஆம் ஆண்டு பிரிட்டனின் சுற்றுச்சூழல் முகமை பல பொருட்களால் ஆன பைகளை ஆராய்ந்தது. குறைந்த பருவநிலை மாற்றத் தாக்கம் ஏற்படுவதற்கு எத்தனைமுறை மறுபயன்பாட்டிற்கு அவை உட்படுத்தப்பட வேண்டும் என்று ஆராயப்பட்டது. அதில், பேப்பர் பைகள் குறைந்தது மூன்று முறையும், பிளாஸ்டிக் பைகள் நான்கு முறையும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அதே நேரம், பருத்தி பைகள் 131 முறை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டது.
பேப்பர் பைகள்தான் மிக குறைந்த முறையில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும்; பேப்பர் பைகள் என்பது அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பயன்படுத்தப்படும். அது கிழிந்து போகலாம். முடிவாக, சுற்றுச்சூழல் முகமை, பேப்பர் பைகளே குறைந்த முறையில் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. என்று கூறுகிறது. மாறாக பருத்திப் பைகள், அதிக நாட்களுக்கு உழைக்க கூடியதாக உள்ளது.
பேப்பர் பைகள் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தாக்குபிடிப்பதால், அது சீக்கிரத்தில் மட்க கூடும். எனவே, அது அதிக நாட்களுக்கு குப்பையாகவோ அல்லது வன உயிர்களுக்கு ஆபத்தாகவோ இருக்காது. பிளாஸ்டிக் பைகள் மட்க 400 -1000 வருடங்கள் ஆகும். மேலும், பிளாஸ்டிக் மாசுபாடுக்கான காரணமாகவும் உள்ளது.
ஆனால், பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்த ஸ்டென் கஸ்டஃப் துலினின் குடும்பத்தினர், “இந்த பைகள் நமது பூமியை காக்க உருவாக்கப்பட்டன. இது அவருக்கு தெரிந்தால் அவர் மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்.” என்கின்றனர். இந்த பையை மக்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி போடுவர் என்று எனது தந்தைக்கு தெரிந்திருந்தால் அவர் மிகவும் வித்தியாசமாக உணர்ந்திருப்பார் என்கிறார் ஸ்டெனின் மகன் ராயோல் துலின்.
ஸ்டென் ஸ்வீடனில் 1959ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் பலர் பேப்பர் பைகளை பயன்படுத்தி வந்தனர். அதனால் பல மரங்கள் வெட்டப்பட்டன. எனவே, அவர் அதிக நாட்கள் நீடிக்கக் கூடிய ஒரு பையை கண்டுபிடித்தார். அவரைப் பொறுத்தவரை அதை திரும்ப திரும்ப பயன்படுத்தவே இதை கண்டுபிடித்தார். எனவே, இதனால் குறைவான மரங்கள் வெட்டப்படும் என்றும் அவர் நினைத்தார். தற்போது நாம் ஏதாவது கடைக்கு சென்றால் நமது பையை கொண்டு போக வேண்டும் என்று சொல்கிறார்கள் அதைதான் அவர் 70 மற்றும் 80 களில் செய்தார், என்கிறார் ராயோல் துலின். ஆனால், மறு சுழற்சி பிளாஸ்டிக்கால் ஆன பையைக்கூட மக்கள் ஒரே ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுகின்றனர். எனவே, தற்போது இந்த உலகம் ப்ளாஸ்டிக் மாசுபாடால் தத்தளித்து வருகிறது. பையை அடிக்கடி மாற்றினாலும் சுற்றுச்சூழலில் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, எந்த பையாக இருந்தாலும் அது எதனால் ஆனதாக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதே சிறந்தது என்கிறார் மார்கரெட். பலர் தாங்கள் பல்பொருள் அங்காடிக்கு பொருட்களை வாங்க வரும்போது பைகளை எடுத்து வர மறந்துவிட்டு புதிய பைகளை வாங்குகின்றனர். இது சுற்றுச்சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.