அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி அதிகம் கொடுக்க கூடிய முதன்மைத் திட்டங்கள்.
முதியோர்களுக்கான சேமிப்பு திட்டம்:
இத்திட்டம் 60 வயது அதற்கும் மேல் உள்ள மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். வயது முதிர்வு காரணமாக அவர்களது உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுக்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு வாழ்க்கையில் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த திட்டம் உருவாக்கும். மத்திய அரசு ஓய்வு வயதை 60 ஆகவும், மாநில அரசு 58 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. சிலர் பணி முடிவடையும் முன்னமே விருப்ப ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் பயனை அனுபவிக்கும் வகையில், அவர்களுக்கும் இந்த கணக்கை தொடங்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதில், ஒரு நிபந்தனை. அதாவது, விருப்ப ஓய்வு பெறுபவர்கள் தங்களது ஓய்வு பயன் பணத்தொகையை பெற்ற ஒரு மாதத்திற்குள் அஞ்சலகத்தில் இந்த திட்டத்தில் முதலீடு செய்துவிடவேண்டும்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களிலேயே அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இதுதான். இந்த கணக்கில் குறைத்த பட்ச முதலீட்டு தொகையாக ரூபாய் 1000/-செலுத்த வேண்டும். அதன் பிறகு, ரூபாய் 1000/- மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு தொகையாக 15லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் எத்தணை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். ஆனால், தொடங்கும் கணக்குகளின் மொத்த தொகை 15 லட்சத்திற்கு மேல் போக கூடாது. வட்டி விகிதம் தொடங்கும்போது என்ன சதவீதம் நிர்ணயிக்கின்றார்களோ, அதுதான் கணக்கு முடியும் வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடரும். இந்த கணக்கில் முதலீட்டு செய்பவர்களுக்கு நடப்பாண்டு அக்டோபர் 1 முதல் 8.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி வீதம் நாட்டின் பொருளாதாரத்தை மையமாக வைத்து மாறக்கூடியது. கணக்கு தொடங்கியதில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதாவது, மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, மற்றும் டிசம்பர் 31 தேதிகளில் வட்டி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. வட்டி தொகையானது முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்கில் வட்டி கணக்கிடப்பட்டு மாதங்களின் கடைசிதேதி அன்றே செலுத்தப்படும். இந்த திட்டத்தில் வாரிசு நியமித்துக் கொள்ளும் வசதி உண்டு. கணக்கைத் தொடங்கி முடியும் வரை வாரிசாக யாரை வேண்டு\மானாலும் நியமித்துக் கொள்ளலாம்.
இந்த கணக்கை அஞ்சலகம் மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட வங்கிகளிலும் தொடங்கலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டு, இடையில் விலகினால் அபராதம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால் 1.5 சதவீதம் முதலீட்டு தொகையில் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் 1 சதவீதம் செலுத்த வேண்டும். மூன்றாண்டுகளுக்கு நீடித்த நிலையில் ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஐந்து வருடங்கள் முடிவுற்றபின் விரும்பினால், மேலும் மூன்று வருடங்களுக்கு நீடித்துக் கொள்ளலாம். தற்போதைய வட்டி விகிதத்தின் படி மொத்தமாக 15 லட்சம் செலுத்தினால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 32,250/- ஐந்து வருடங்களுக்கு கிடைக்கும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா. இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக்கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் தொடங்கலாம்.
கணக்கைத் திறக்கும் முறை :
ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு .10 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம்.
இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்த பெண் குழந்தை இந்திய குடியுரிமை பெற்று இருக்க வேண்டும். ஒருவேளை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது. மற்றும் முடிவடையும் காலத்திற்கு முன்னதாகவே கணக்கை முடித்து கொள்ளவேண்டும்.
காலம்:
கணக்கை திறந்ததில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இத்திட்டம் அறிமுகம் செய்யப்படபோது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது.
பணம் செலுத்தும் முறை:
பணம் அல்லது காசோலை வாயிலாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் நாம் கணக்கு தொடங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கி தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.
வழங்கப்படும் வட்டி விகிதம் :
சிறுசேமிப்பு திட்டம் போலவே செல்வமகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாறிக் கொண்டே வரும். தற்போதைய வட்டி விகிதம் அக்டோபர் மாதம் முதல் 8.4 சதவீதமாகும்.
செலுத்ததும் தவணைகளின் அளவு :
செல்வமகள் கணக்குகளை தொடங்கு பவர்கள் முதலில் ரூபாய் 250 செலுத்த வேண்டும்.அதிகபட்ச தொகை ரூபாய் 1.5 லட்சம் செலுத்தலாம். அதற்கும் மேல் செலுத்தினால் அந்தத் தொகைக்கு வட்டி எதுவும் கொடுக்க மாட்டார்கள். கூடுதலாக செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்ச தொகையான ரூபாய் 250 சரியாக செலுத்தவில்லை என்றால், 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தில் இயல்பாக வழங்கப்படும் வட்டியான 4 சதவீதம் மட்டுமே பெற இயலும்.
வட்டி தொகை சீராக கிடைக்க ஒவ்வொரு மாதமும் 10 தேதிக்குள் சந்தாதொகையை செலுத்த வேண்டும். காரணம், வட்டி கணக்கிடும் போது 11 தேதி முதல் மாத இறுதி தேதி 30 அல்லது 31 தேதி வரையிலான குறைந்த பட்ச தொகையைதான் கணக்கில் எடுத்து கொள்வார்கள்.
இடையில் கட்டாமல் விடுபட்ட கணக்கை மீண்டும் தொடங்குதல்:
கணக்கை சில காரணத்தால் தொடர்ந்து கட்ட இயலாது போது, அதாவது ஒரு வருடம் கட்டாமல் விட்டு விட்டால் ரூபாய் 50 அபராதம் செலுத்தி கணக்கை புதுபித்து மேலும் தொடரலாம்.
வருமான வரி விதி விலக்கு:
செல்வமகள் திட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு பிரிவு எண் 80சி இன் படி வரிவிலக்கு பெறலாம். அதாவது, கணக்கை தொடங்கிய பெற்றோர்கள் வருமானமாக அது கருதப்படும்.
முதிர்வு:
இந்த கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்து விடும். அதற்கு பிறகு, வட்டி எதுவும் அளிக்கப்பட்ட மாட்டாது. ஆனால், திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட போது கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.
கணக்கை மற்றொரு கிளைக்கு மாற்றிக்கொள்ளுதல்:
கணக்கை வேறு ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தின் கிளைகளுக்கு மாற்றிக் கொள்ள விரும்பினால் ரூபாய் 100 கட்டணமாக செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். அதற்கு கணக்கு தொடங்கிய அலுவலகம் அல்லது வங்கியை அணுகி விபரங்களை பெறலாம்.
செலுத்திய பணத்தை திரும்ப பெறுதல்:
ஒருவர் 50 சதவீதம் வரை கட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை வழங்கி அந்த தொகைகையை எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய விதிகளின் படி எவ்வளவு தொகை கட்டணமாகக் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டுமென்றால் ஐந்து தவணைகளாக எடுத்துக்கொள்ளலாம் .பெண்ணின் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு அல்லது திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு பின் மொத்த தொகையையும் எடுத்து கொள்ளலாம். ஆனால், இதற்கு 18 வயது பூர்த்தி அடைந்ததற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடித்துக் கொள்ளுதல் :
முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடித்து கொள்ளுதல் என்பது கணக்கு அறிமுகப் படுத்தப்பட்டபோது எப்போது வேண்டுமானாலும் முடித்துக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட விதிகளின் படி குறைத்தது ஜந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
சில நேரங்களில், ஏதேனும் மருத்துவ உதவி, காப்பாளர் போன்ற சில காரணங்களின் போது பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் அஞ்சல் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி கணக்கிடுவதைப் போல கணக்கிட்டு வழங்கப்படும். 18 வயது முடிந்து திருமணம் செய்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
– முனைவர் த. செந்தமிழ்ச் செல்வன்