தொடர்ந்து மூன்றாவது மாதமாக அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி சரிந்துள்ளது. பெட்ரோலியத் தயாரிப்புகள், தோல் தயாரிப்புகள், ஜவுளிப் பொருட்கள், தரை விரிப்புகள், பண்ணைப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி மதிப்பு 1.1 சதவீதம் குறைந்து 26.4 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் இறக்குமதி 16 சதவீதம் அளவில் குறைந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 37.4 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை சென்ற ஆண்டு இதே காலத்தில் 18 பில்லியன் டாலரில் இருந்த நிலையில், தற்போது 11 பில்லியன் டாலராக குறைந்து உள்ளது.
மொத்தமாக நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி மதிப்பு 2.4 சதவீதம் அளவில் சரிந்து 186 பில்லியன் டாலராக உள்ளது. இறக்குமதி 8.4 சதவீதம் அளவில் குறைந்து 281 பில்லியன் டாலராக உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 116 பில்லியன் டாலரில் இருந்து 95 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக தேவை குறைந்துள்ளது. அதன் விளைவாக ஏற்றுமதி குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மக்களின் நுகர்வு திறன் குறைந்து உள்ளது. விளைவாக நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து உள்ளன. இதன் காரணமாக உற்பத்திக்கு தேவையான கச்சாப் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளதாக இந்திய வர்த்தக மேம்பாட்டுக் குழுவின் தலைவர் மோஹித் சிங்லா தெரிவித்து உள்ளார். அதேசமயம், ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் ஆகிய பிரிவுகளில் ஏற்றுமதி சற்று உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 4.7 சதவீதம் உயர்ந்து 1.8 பில்லியன் டாலராக உள்ளது.