மாற்று மணல்(M Sand) கட்டடத்திற்கு நல்லதா? கெடுதல் ஏதும் வராதா? வலு மிக்கதா? கான்கிரீட் கீழே விழுந்திடாதா? பூச்சுக்கு சரியா வருமா? ஆற்றுமணல் தரும் உறுதி அளவுக்கு உறுதி தருமா? – இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. அவற்றுக்கான பதில்களும், விளக்கமும்….
மணலின் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் வருகின்றனவே, இவற்றில் எது மாற்று மணல்?
பாறையின் மேல் அடுக்குகளில் கிடைக்கக் கூடிய வெளிர் நிற கற்களை அரைத்து வரக் கூடியது, மணல் நிறத்தில் இருக்கும். கீழ் அடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்தால் கிடைக்கக் கூடியது கருப்பு நிறத்தில் இருக்கும். இரண்டுமே மாற்று மணல்தான். இருந்த போதும் ஒப்பீட்டளவில் கருப்பு மணல்தான் வலு அதிகம் உள்ளது. வெளிர்நிற மாற்று மணல் சற்று வலு குறைந்தது. எனவே கான்கிரீட் போன்றவற்றுக்கு கருப்பு மணலே சிறந்தது. செங்கல்கட்டு போன்ற பணிகளுக்கு வெளிர்நிற மாற்று மணலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாற்று மணல் எங்கிருந்து வருகிறது?
மாற்றுமணல் என்பது கற்பாறைகளை கிரஷ்சர் எந்திரம் மூலம் அரைத்து பொடியாக்கி தயாரிக்கப் படுகிறது. ஏற்கனவே கற்களை எந்திரம் மூலம் உடைத்து 40mm, 20mm, 12mm, 6mm என பல அளவுகளில் ஜல்லிக் கற்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கப் பட்டு கட்டடப் பணியில் கான்கிரீட் போடவும் தாரோடு கலந்து சாலை அமைப்புப் பணிகளிலும் பயன்படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். இப்போது அதை விட சிறிதாக மணல் அளவில் உடைக்கப் படுவதே மாற்று மணல். எளிமையாக சொன்னால் குறு அளவு ஜல்லிக்கல்தான் மாற்று மணல்.
கிரஷ்சர் தூசி அல்லது கிரஷ்சர் டஸ்ட்-க்கும் எம் சாண்டுக்கும் என்ன வேறுபாடு?
கிரசர் தூசி என்பது ஜல்லி உடைக்கும் போது வரக்கூடிய கழிவுப் பொருள். அது கட்டட வேலைக்கு உகந்தது அல்ல. ஆனால் எம் சாண்ட் எனப்படும் மாற்று மணல் என்பது சிறிய ஜல்லி போல் உடைக்கப் பட்டு தண்ணீர் தொட்டியில் சுற்றும் சல்லடையின் மூலம் அலசப்பட்டு அதில் உள்ள கிரஷ்சர் தூசி நீக்கப் பட்டு சுத்தமான மணல் போல தயாரிக்கப் படுகிறது. இதனால் இதில் கிரஷ்சர் தூசி என்பதே இருக்காது.
மாற்று மணல், ஆற்று மணல் போல. கலவைக்கு உறுதி (Strength) தருமா?
நிச்சயமாக. மாற்று மணல் நல்ல உறுதி மிக்க கான்கிரீட் கலவையை தரக் கூடியது. ஆற்றுமணல் சேர்த்த கான்கிரீட்டை விட எம் சாண்ட் சேர்த்த கான்கிரீட் கூடுதல் உறுதி மிக்கது என்பது ஆய்வக சோதனைகளின் மூலம் உறுதிப் பட்டு உள்ளது. மேலும் ஆற்று மணலில் இயற்கையாகவே கலந்து வரக்கூடிய வேதி மாசுகள் (Chemical Impurities) மாற்று மணலில் இருக்காது. எனவே ஆற்று மணலை விட மாற்று மணல் தரம் மிக்க கலவையை தரக் கூடியது.
மாற்று மணலால் கட்டப்பட்ட கட்டடங்கள் நீடித்து நிற்குமா?
நிச்சயமாக நீடித்து நிற்கும். தமிழ்நாட்டிற்குத்தான் மாற்று மணல் புதிதே தவிர (கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கூட சில ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது). பல மாநிலங் களில் பத்தாண்டுகளுக்கு முன்பே புழக்கத் திற்கு வந்து விட்டது. வெளிநாடுகளில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. எனவே மாற்று மணல் பயன்படுத்தப் பட்ட கட்டடங்கள் பல ஆண்டுகளாக எந்த சேதமுமின்றி நீடித்து நிற்கிற தென்பது கண்கூடான உண்மை.
மாற்று மணலை பூச்சுக்கு பயன் படுத்த முடியுமா?
இயற்கை மணலில் இருக்கக் கூடிய வண்டல், களிமண் போன்றவை மாற்று மணலில் இருக்காது. இதனால் பூச்சுக் கலவையின் ஒட்டும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும். அந்த குறையை சரி செய்யும் வகையில் தற்போது நைஸ் மாற்று மணல், பிளாஸ்டரிங் மணல் (P Sand(Plastering Sand) ஆக தயாரிக்கப் படுகிறது. மேலும் சிறப்பான பூச்சை தரக்கூடிய சில சேர்மங்களும் (Additives) விற்பனைக்கு வந்து உள்ளன. வருங்காலத்தில் இன்னும் தரமான பூச்சினை உறுதி செய்யும் பொருட்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மாற்று மணலை கட்டுமானப் பணிகளுக்கு தாராளமாகப் பயன் படுத்தலாம்.
-பொறியாளர் அ. வீரஜோதிமணி