பணிபுரிவோர், பி.எஃப் பிடிக்கும் ஒரு நிறுவனத்தில் இருந்து பி.எஃப் பிடிக்கும் இன்னொரு நிறுவனத்திற்கு மாறும் போது, இணையத்தின் வாயிலாக முந்தைய நிறுவனத்தின் கணக்கில் இருந்து தொகையை புதிய பி.எஃப் கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறை பின்வருமாறு;
முதலில் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் members.epfoservices.in/ home.php எனும் இணையப் பக்கத்திற்கு செல்லவும். அங்கு ஒருங்குறியீட்டு எண் (UAN) அடிப்படையிலான யூசர் நேம் மற்றும் கடவுச் சொற்களை உருவாக்கி கொண்டு லாகின் செய்யவும். உடன் நம்முடைய வருங்கால வைப்பு நிதியின் ஒருங்குறியீட்டு எண்ணுடன் (UAN) கூடிய கணக்கு பக்கத்திற்கு செல்லும்.
பின்னர், நாம் எந்த நிறுவனத்தில் இருந்து நம்முடைய கணக்கினை மாற்றி கொண்டு வர விரும்புகிறோமோ, அந்த நிறுவனத்தின் பெயர், குறியீட்டு எண் போன்ற விவரங்களை கீழிறங்கு பட்டியலின் வாயிலாக நிறைவு செய்து கொண்டு Check Eligibility என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
கணக்கினை மாற்றுவதற்கு இயலும் அல்லது இயலாது என்ற செய்தி திரையில் தோன்றும். இயலும் என்ற செய்தி தோன்றினால் அங்கீகரிக்கப்பட்ட நம்முடைய வருமானவரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்றினை கொடுக்க வேண்டும். பின்னர் நமக்கு பின் (PIN) எண் ஒன்று நம்முடைய செல்பேசிக்கு வரும். அதனை உள்ளீடு செய்துவிட்டால் அதனை ஏற்று கொண்டதற்கான செய்தியும், நம்முடைய பணியை தொடரும்படியும் அறிவிப்பு வரும்.
அதனை தொடர்ந்து EPFO Member Claims Portal எனும் இணைய பக்கத்திற்கு அழைத்து செல்லும். அங்கு பணியாளரின் ஆவணத்தின் சுட்டிஎண், செல்பேசி எண் போன்ற விவரங்களை உள்ளீடு செய்யவும். பிறகு தோன்றும் திரையின் மேல்பகுதியில் Request for transfer of account என்பதைக் கிளிக் செய்யவும். உடன் PF transfer என்ற படிவம் திரையில் தோன்றும். அதன் முதல் பகுதியில் பணியாளரின் சொந்த தகவல்களை உள்ளீடு செய்யவும். இரண்டாவது பகுதியில் பழைய நிறுவனத்தில் நமக்கு வழங்கப்பட்ட வருங்கால வைப்புநிதி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யவும்.
மூன்றாவது பகுதியில் நடப்பு நிறுவனத்தின் வருங்கால வைப்புநிதி கணக்கின் விவரங்களை உள்ளீடு செய்யவும். நாம் நிரப்பிய தகவல்கள் சரியாக உள்ளனவா என சரிபார்க்கவும். சரி எனில், திரையில் தோன்றும் கேப்சா (captcha) எண்ணை உள்ளீடு செய்யவும். உடன் பின் (Pin) எண் ஒன்று நம் செல்பேசிக்கு வரும்.
அதனை உள்ளீடு செய்து விட்டால் போதும் நம்முடைய கணக்கு ஒருங்கிணைக்கும் பணி செயல்படத் துவங்கும். இது சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் நம்முடைய இந்த கோரிக்கையை பழைய நிறுவனம் சரிபார்த்து ஆமோதிக்க வேண்டும். அதுவரையில் நம்முடைய கோரிக்கையின் நிலையை இணையத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் சிக்கல் எனில் EPFO இணையத்தினை நேரடியாக அணுகி சரி செய்து கொள்ளலாம்.
-வசந்த குமார்