நாடு விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் விரைந்தோடி விட்டன. நம்மை நாமே வழி நடத்திக் கொள்கின்றோம். ஆளும் கட்சிகள் மாறி இருக்கின்றன. ஆள்பவர்கள் மாறி உள்ளனர். ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சியைக் காண முயன்றோம். இப்பொழுது நிதி ஆலோசனை வழிகாட்டும் குழு அந்த பணியைச் செய்கின்றது. வளர்ந்திருக்கும் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி சிக்கல்களுக்குத் தீர்வு காண முயல்கின்றோம்.
நமது நாட்டில் இருக்கின்ற நிலம், பிற இயற்கை வளங்கள், மனித வளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழில்களை வளர்க்க வேண்டும் என்பது நமது மத்திய, மாநில அரசுகளின் நோக்கம். இதற்கு வேண்டிய மூலதனம்தான் நம்மிடம் பற்றாக் குறையாக இருப்பதாக கருதுகின்றனர். தேவையான அளவு மூலதனத்தைப் பெற இரண்டு வழிகள். ஒன்று உள்நாட்டு மூலதனத்தைப் பயன்படுத்துதல், அடுத்து வெளிநாட்டு மூலதனத்தைப் பயன்படுத்துதல்.
வெளிநாட்டு மூலதனம்: உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் விரைந்த வளர்ச்சி பெற வெளிநாட்டு முதலீட்டிற்கு நமது நாட்டின் கதவுகளைத் திறந்து வைத்து இருக்கின்றோம். வெளிநாட்டு மூலதனம் வருகின்ற பொழுது தொடர்ந்து தொழில் நுட்பங்களும் வரும் என்று நம்புகின்றனர். இதனால் நமது நாட்டுத் தலைவர்கள் வெளிநாடு செல்கின்ற பொழுதும், இங்கிருந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வேண்டி, விரும்பி அழைக்கின்றனர். அன்னிய முதலீட்டாளர்களுக்கு எல்லா வசதிகளும் சலுகைகளும் செய்து தருகின்றனர் அவர்களுக்கு அரச மரியாதை தருகின்றனர்.
தொழில் நுட்பத் துறைகளில், செய்தித் தொடர்பு துறைகளில், குளிர் பானங்கள் போன்று சில நுகர் பொருள் உற்பத்தியில் அவர்களின் முதலீடு வந்து குவிந்து இருக்கின்றது. இதனால் தொழில்நுட்பக் கல்வி பெற்ற வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்து இருக்கின்றது. இந்த வாய்ப்புகள் பெங்களூர், கல்கத்தா, டெல்லி, பம்பாய் சென்னை நகரங்களில் பெரிய அளவில் வளர்ந்து உள்ளன.
வெளிநாட்டின் மூலதனத்தின் மூலம் நமது நாட்டில் வேலை வாய்ப்பைப் பெருக்கக் கூடிய வேளாண்மை, சிறு நடுத்தரத் தொழில்கள், அத்தியாவசிய தேவைகளுக்கானப் பொருட்களை உருவாக்கும் தொழில்கள் எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கின்றன என்பது கேள்விக்குறி? நமது இறக்குமதி பெரும்பாலும் நுகர் பொருட்களாகவும், ஆடம்பர பொருட்களாகவும் இருக்கின்றன. எற்றுமதி பெரும்பாலும் மூலப் பொருட்களாக உள்ளன. இந்த ஏற்றுமதி இறக்குமதி கட்டமைப்பும் நமது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை.
எங்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொழில்களைத் தொடங்கி உள்ளனவோ அங்கு நீண்ட நிலப்பரப்பையும் அது சார்ந்த நீர் வளத்தையும் ஒதுக்கித் தந்துள்ளனர். குடிநீர் பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆற்று நீரையே தானமாக வார்த்துக் கொடுத்தனர். இதனால் நமது மக்களின் வேளாண்மை போன்ற வாழ்க்கை ஆதாரங்கள் பாதிக்கப் படுகின்றன. தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்ற நடத்திய போராட்டத்தை நாடறியும்.
வெளிநாட்டு மூலதனம் கூட அந்த முதலீட்டாளர்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் நமது நாட்டு அரசியலிலும் இருக்கும் சட்ட மன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தினால் இங்கு புது வகையான அரசியல் அடிமைத்தனம் வரலாம். உலக அரசியல் மாற்றங்களால் நமது நாட்டிலிருந்து அன்னிய முதலீடு பெரும் அளவில் வெளியேறினால் என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உறுதியான உள்நாட்டு முதலீடு: நமது நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. மேல் நிலையில் உள்ள ஒரு சதவிகித மக்களிடம்தான் கூடுகின்ற நாட்டு வருவாயில் பெரும்பகுதி செல்கின்றது. உயர்நிலை, மேல்நிலை நடுத்தர மக்களிடம் சேமிப்பு இருக்கின்றது. வெளி நாடுகளில் சென்று வேலை செய்பவர்களின் குடும்பத்தினர், மருத்துவர்கள், பெரிய வணிகர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் என ஒரு சாராரிடம் எச்ச வருவாய் இருக்கின்றது.
நமது நாட்டுச் சேமிப்புகள் தெரிந்தும் தெரியாமலும் வெளிநாட்டு வங்கிகளிலும், தொழில்களிலும், முதலீடு செய்யப் பெறுவதை நாம் அறிவோம். இங்குள்ள லஞ்சப் பணத்திற்கும் கணக்கில்லை. தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்ற பணத்தை எல்லாம் முதலீடாக மாற்றினால் எவ்வளவு சேரும்? மதிப்பிடக் கூட முடியாத அளவிற்கு இருக்கும்.
தொலை நோக்குடைய அரசியல் சிந்தனையாளர்களும், நாட்டுப் பற்றை நமது பொருளியல் அறிஞர்களும், பெரும் தொழில் வாணிப வல்லுநர்களும் இணைந்து திட்டமிட வேண்டும் வறுமை ஒழிப்பும், வேலை வாய்ப்புப் பெருக்கமும், உண்மையான நாடு தழுவிய பொருளாதார வளர்ச்சியும் நமது நோக்கங்களாக இருக்க வேண்டும்.
பல நிலைகளிலும் அளவுகளிலும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும். அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிப்பதைப் போன்றே உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு, வசதிகளைப் பெருக்க வேண்டும். இந்த முதலீட்டுத் திட்டம், வேளாண்மை கால்நடைகள் வளர்ப்பு, பால் பண்ணைகள் சிறிய தொழிற் கூடங்கள் நிறுவி வேளாண் விளை பொருட்களை நுகர் பொருட்களாக அமைத்தல், சிறிய அளவில் உற்பத்தி விற்பனை நிறுவனங்களை உருவாக்குதல் என்று தனியார் முயற்சிகளை ஊக்குவிக்கலாம்.
பங்காளிகள் முறை, கூட்டுறவு அமைப்பு முறை, கூட்டுறவு அமைப்பு முறை, கூட்டுப் பங்கு நிறுவனங்கள் ஆகியவற்றை வளர்க்கலாம் நமது வங்கிகள் கோடிக் கணக்கில் பாதுகாப்பின்றி பெரும் முதலாளிகளுக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்த்து சொந்தமாக நிறைய முதலீடு செய்பவர்களை இனங்கண்டு கடன் வழங்கலாம். அரசு நிர்வாகம் லஞ்சம், ஊழல் இன்றி நேர்மையாகச் செயல்பட வேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு தொடக்க காலத்தில் தேவையான வரிக் குறைப்பும், வரிவிலக்குகளும் அளிக்க வேண்டும். நமது ஏற்றுமதி, இறக்குமதி உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நமது மத்திய மாநில அரசு, சுதேசி மனப்பான்மையோடு, சிறு, நடுத்தர தொழில் முயல்வோர்களையும் முதலீட்டர்களையும் மனதில் கொண்டு புதிய தொழில் கொள்கையை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
-டாக்டர்.மா.பா. குருசாமி