Be an encourager. When you encourage others,you boost their self-esteem,enhance their self confidence,make them successful in their endeavors.Be an encourager, ALWAYS – Roy.T.Benett
பிறரை ஊக்கப்படுத்துதலும் உற்சாகப்படுத்துதலும் ஒரு நேர்மறை அணுகுமுறை எனலாம். குறைகளை சுட்டிக் காட்டுவதோ விமர்சனம் செய்வதோ பெரிய விஷயமில்லை. நிறைகளை மனமார பாராட்டுதலும் குறைகள் இருப்பின் பிறர் மனம் புண்படாதவாறு நாசுக்காக சுட்டுவதும், அதனைக் களைய என்ன செய்யலாம் என சொல்வதுமே தலைமைப் பண்பு. சொற்களால், செயல்களால் மனதால் எப்போதும் நம்பிக்கையும் ஊக்கமும் தருபவராக இருங்கள்.
“அட சரியாக செய்தாய்” என்று ஒரு புன்னகை, ஒரு தலை அசைப்பு, முதுகில் ஒரு செல்லத் தட்டு – இவை நிகழ்த்தும் மாற்றங்கள் அளப்பரியது. உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், முகம் அறியாதோர் என யாராகிலும் அவர்களைப் பார்க்கும் போது அவர்களிடம் இருக்கும் ஒரு நேர்மறை விஷயத்தைப் பற்றி உண்மையாக பாராட்டுங்கள்.
அது அவர்களுக்கு மட்டில்லாத மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, உங்களைப் பற்றி ஒரு பாசிட்டிவ் இமேஜையும் (positive image) உருவாக்கும். இடியும் மின்னலும் ஒரு செடியை வளர்க்காது. இதமான பருவ நிலையும், நல்ல நீர் வளமும் பக்குவமான மண்ணுமே வளர்க்கும். கோபம் கொண்டு இடியைப் போல் சத்தம் போடுவதால் எந்த வேலையும் நடக்காது. பண்பான இதமான பேச்சால்தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.
சொற்பொழிவாளர்களைப் பார்த்தி ருப்பீர்கள். சில பேச்சாளர்கள் பேசும்போது, மக்கள் அப்பேச்சுகளில் கட்டுண்டுக் கிடப்பார்கள். அதில் உண்மை இருக்கின்றதா, அறிவார்ந்ததாகப் பேசுகிறார்களா என்றெல்லாம் பெரும் பாலானவர்கள் பகுத்தறிந்து பார்ப் பதில்லை. ஏனெனில் கேட்பதற்கு இனிமையாக, நேர்மறை சொற்களால் கோர்வையாகக் கட்டமைக்கப்பட்டு பேசும் அவர்களின் திறன் மக்களுக்குப் பிடிக்கும்.
மனிதர்கள் எப்போதும் அன்புக்கு ஏங்குபவர்கள். தன்னை மற்றவர்கள் அங்கீகாரம் செய்ய மாட்டார்களா எனத் தவித்துக் கிடப்பவர்கள். இது சரியில்லை என்று சொல்வதைக் காட்டிலும் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று சொல்லுதல் நலம் பயக்கும். வெற்று விமர்சனங்களால் ஒன்றும் விளைவது இல்லை.
ஒரு உரையாடலுக்குப் பிறகு நம்முடன் பேசியவருக்கு நாம் என்ன மாதிரியான உணர்வை விட்டு வைக்கிறோம் என்பது முக்கியம். அவருக்கு நம் சொற்கள் மகிழ்வுறச் செய்ததா, சோர்ந்து இருந்த மனத்திற்கு நம்பிக்கைகளை அளித்ததா, குழம்பிய மனதை ஆற்றுப்படுத்தியதா, எதுவும் இல்லை எனினும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இறுதியில், சரி சரி சீக்கிரம் சரியாகும் என்று ஆறுதல் கொடுத்ததா? என்பவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நல்ல உரையாடல் என்பதை ஒரு அழகான கலை என்றே கூறலாம். சொல்ல வரும் கருத்தினை தெளிவாக, சரியான சொற்களைப் பொருத்தி எதிரில் இருப்பவருக்கு புரியும்படி பேசுகிறோமா என்பது முக்கியம். நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் மனதின் கண்ணாடி அல்லவா?
ஊக்கம் அளியுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கம் அளிக்கும் போது அவர்களின் சுயமதிப்பைப் பெருக்குகிறீர்கள், தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறீர்கள், அவர்களை உழைக்கத் தூண்டுகிறீர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கிறீர்கள். எனவே ஊக்கம் அளிப்பவராகவே இருங்கள், எப்போதும்! என்று அறிவுறுத்துகிறார் ராய்.டி.பென்னட் என்ற எழுத்தாளர்.
செயல்பாட்டை நோக்கி உந்தித் தள்ளும் பேரார்வம்
Money is not a motivating factor. Money doesn’t thrill me or make me play better because there are benefits to being wealthy. Iam just happy with a ball at my feet . My motivation comes from playing the game.. I love. If I was not paid to be a professional footballer I would willingly play for nothing.
-Lionel Messi
பேரார்வம், உணர்ச்சிகரமான விருப்பம் என்பதை ஆங்கிலத்தில் பேஷன் (Passion) என்று கூறுகிறார்கள். ஒருவரின் வெற்றியும் அவரின் பேரார்வமும் பின்னிப் பிணைந்தவை. ஆர்வம் இல்லை எனில் வெற்றி இல்லை என்றே சொல்லலாம்.
எது உங்களின் பேஷன் என்பதை நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். எது உங்களை மிகவும் ஈர்க்கின்றது? எதனைச் செய்யும் போது உங்கள் மனம் மலர்கின்றது? எது உங்களை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றது? எதில் வெல்ல முடியும் என்ற அசையா நம்பிக்கை தருகின்றது? எதனை எப்போதும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறது உங்கள் மனம்?
பிறர் கேலி செய்தாலும் உங்கள் பேஷன் மீது நீங்கள் எரியும் தணல் போல் பெரும் விருப்பத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம். உங்களுக்கு அந்த பேஷனில் இயல்பாகவே திறமை இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு வைரத்தைப் பட்டை தீட்டும் செயல்தான்.
நேரம் காலம் பார்க்காமல் அதில் ஈடுபட முடியும். ஆரம்ப கால தோல்விகள் நேர்ந்தாலும், மனம் சோர்வு அடையாமல் மீண்டும் உழைக்க முடியும். சொல்லப் போனால் நம் பேஷனைப் பின் தொடரும் போது அது வேலை என்ற சுமையாகத் தோன்றாது.
உங்கள் வேலை என்பது உங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை நிரப்பப் போகின்றது. உங்களுக்கு முழு நிறைவு வேண்டுமாயின் அது சிறந்த வேலை என்று நீங்கள் நம்ப வேண்டும். அதனை காதலித்து செய்தால்தான் அது சிறந்ததொரு வேலை என்று தோன்றும். அப்படியானதொரு வேலையை உங்கள் இதயம் கண்டு அடையும் வரை ஓயாதீர்கள் – இவை ஆப்பிள் நிறுவனர் திரு.ஸ்டீவ் ஜாப்சின் கருத்துரைகள்.
பெரும் வெற்றி பெறலாம் என்ற அளவிற்கு உங்கள் ஆர்வம் உங்களை வழி நடத்தும். உங்களின் படைப்பு, ஊக்கத்தின் அடிக்கல் இதுதான். எத்தனை இடர்கள், தடைகள் வந்தாலும் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் துணிவைத் தரும்.
அவர் ஒரு அறிஞர். சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார். இடைமறித்த ஒருவர், “ஐயா, நான் ஒரு ஓவியனாக வெற்றி பெற வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டேன். ஆனால் நடைமுறை வாழ்வின் சமரசங்களுக்குள் விழுந்து ஒரு சாதாரண வேலையில் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்” என்று குறைபட்டுக் கொண்டார்.
“அது வெறும் ஆசைதான். உன்னிடம் ஓவியத்தின் மீது பேஷன் இருந்து இருந்தால் நீ அவ்வாறே ஆகியிருப்பாய் ” என்று பதில் உரைத்தார் அந்த அறிஞர்.
வெற்றி அடைந்தவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தோம் எனில், அவர்களின் பேஷன்தான் அவர்களை வழி நடத்தி இருக்கும்.
-ஜான்சிராணி, போரூர்