கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ள மிகக் கடுமையான பொருளாதார (வருவாய்) ஏற்றத் தாழ்வு, ஏழைகள் உட்பட பெரும்பாலான மக்களின் நல்வாழ்வை நலிவு அடையச் செய்து விட்டது. இது இந்திய ஜனநாயத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ள சமூக நல உடன் படிக்கையையும் அச்சுறுத்துவதாக உள்ளது (Oxfam International)பொதுவாக நல்ல பொருளாதார முன்னேற்றம் என்பது, பொருள் உற்பத்தி வேகமாக உயர்வது (GDP Growth) என்றும், வேலை வாய்ப்பு அதிகப்படுவது என்றும் மற்றும் நாட்டில் வறுமையில் இருப்பவர் எண்ணிக்கைக் குறைந்து வருகின்ற நிலை என்றும் கருதப்படுகிறது.
சரியான பொருளாதார வளர்ச்சி. இவை பொருளாதார முன்னேற்றத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்ற போதிலும், பொருள் உற்பத்தி உயர்வு மூலமாக உண்டாகும் மக்களின் வருவாய் உயர்வும் நலனும் பரவலாக யாவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கும்) கிடைக்கும் நிலைமை தான் மிகச் சரியான, மக்கள் நலனை உறுதி செய்யும் பொருளாதார மேம்பாடு ஆகும்.
பொருளாதார நலன் மேம்படுவதற்கும், பரவலாக எல்லோரிடமும் போய்ச் சேருவதற்கும். அரசின் பொருளாதார கொள்கை எவ்வாறாக இருக்க வேண்டும்?
முதலாவது, பெரும்பாலான மக்கள் செய்கின்ற தொழில்களில் மூலதனத்தைப் பெருக்கி, உற்பத்தி உயர்வுக்கான வழிகளை உண்டாக்க வேண்டும். இந்தியாவில், 65% மக்கள் வாழ்கின்ற கிராமப்புற தொழில்கள் ஆன விவசாயம் மற்றும் ஊரகத் தொழில்களின் மூலதனத்தைப் பெருக்க வேண்டும்..
இரண்டாவது,. பொருள் உற்பத்தி உயர்வதன் மூலமாக உண்டாகும் மக்கள் நல மேம்பாட்டைத் தக்க வைப்பதற்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுக்குள் இருக்கச் செய்வது மிக அவசியமானது ஆகும். இதற்கு ஏதுகரமாகப் பொருளாதாரக் கொள்கைச் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஏனெனில், வருவாய் உயர்வின் மூலமாகக் கிடைக்கும் நன்மையை விலை உயர்வு விழுங்கி விடும். சான்றாக, ஒருவர் பெறும் மாத வருவாய் ஐந்து விழுக்காடு உயரும் பொழுது, விலை உயர்வு எட்டு விழுக்காடாக இருந்தால், அவரின் வருவாய் அதிகமானதால் உண்டாகும் பொருளாதார நலன் மூன்று விழுக்காடு குறைவடைகிறது.
மூலதனம் பெருக வேண்டுமானால் விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஏனெனில், விலை உயர்வு மக்களின் சேமிப்பை அதிகப்பட விடாமல் தடுக்கிறது. சரியான கொள்கையின் மூலமாக விலைவாசி கடுமையாக உயராமல் இருக்கச் செய்யும் பொழுது, அது சேமிப்பை அதிகப்படுத்தி, தொழில் மூலதனத்தைப் பெருக்கி, புதிய வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த ஏதுவாகும்.
மூன்றாவது, நாட்டின் 90 சதவீதமானோர், அமைப்பு சாராத துறை சார்ந்த வேலைகளில் பணி செய்கிறார்கள். அரசு நிதிக் கொள்கையின் மூலமாக இந்தத் துறையில் வேலை அல்லது தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
நான்காவது, மூலதன அதிகரிப்பின் மூலம் உண்டாகும் வருவாய் உயர்வு சென்று அடைய முடியாத கோடிக் கணக்கான அடித்தட்டு மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் படிப்பு அறிவு இல்லாதவர்கள். கிராமப்புற வாசிகள், மலைவாழ் மக்கள்
போன்றவர்களாவர். இவர்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே கோடிக் கணக்கானோர் இருப்பார்கள். இந்த மக்களுக்கு அரசு அத்தியாவசிய தேவைகளை நேரடியாக இலவசமாகவும், குறைந்த விலையிலும், மானியமாகவும் கொடுத்து உதவ வேண்டும்.
2014 – 2018
கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார நிலை சரிவடைந்து விட்டது. அரசின் கொள்கைகள் எல்லா மக்களின் நல மேம்பாட்டையும் உள்ளடக்கியதாக இல்லை. எனவே, ஏராளமான மக்களுக்கு நலன் மேம்படாமல் போனது மட்டும் அல்ல. இருக்கும் நலனையும் நலிவு அடையச் செய்து விட்டது.
கடுமையான வருவாய் ஏற்றத் தாழ்வு
இந்தியாவின் மொத்த வருவாய் உயர்வில் 79% வருவாய் உயர்வு, நாட்டின் ஒரு விழுக்காடு மக்களிடம் மாத்திரமே போய்ச் சேருகிறது என்று ஆக்ஸ்ஃபாம் இன்டர்னேஷனல் (Oxfam International)- (உலகின் வறுமை மற்றும் சமூக அநீதியை குறைக்கத் தாக்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு) 2018 இல் கணித்து இருக்கிறது. அதாவது, நாட்டின் மொத்த வருவாய் உயர்வில் 21% வருவாய் மட்டுமே 99% மக்களுக்கு, போய்ச் சேருகின்றது.
இது வருவாய் ஏற்றத் தாழ்வு எவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. தாராள மயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் எல்லா நாடுகளிலும் பொதுவாக, முதலில் ஏற்றத் தாழ்வு உண்டாவது தவிர்க்க முடியாததுதான். ஆனால், இந்தியாவில் தாராள மயமாக்கல் அறிமுகப்படுத்தி சுமார் முப்பது ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் கூட வருவாய் ஏற்றத் தாழ்வு மிகக் கடுமையாகிக் கொண்டு இருப்பது, எல்லோருக்கும் நலன் பெருகும் பொருளாதார கொள்கைகள் வகுத்துப் பின்பற்றப்பட வில்லை என்பதைத் தெளிவாகக் காண்பிக்கிறது.
அரசின் கொள்கைக் குழப்பம், இதுவரை பெரும்பாலான மக்கள் பெற்று வந்த பொருளாதார நலனைக் கூட மட்டுப்படுத்தி விட்டது. அரசின் செயல்பாடுகள், நாட்டில் கோடிக் கணக்கான மக்கள் தொடர்ந்து வறுமையில் சிக்கிக் கொண்டு இருப்பதற்கும் நடுத்தர மக்களின் நலன் கூட தொய்ந்து விட்டதற்கும் காரணங்கள் ஆகும்.
வேலைவாய்ப்பு கடும் வீழ்ச்சி
வேலை இல்லாத நிலை கடினமாகிக் கொண்டே இருக்கிறது. அசிம் ப்ரேம்ஜி பல்கலைக் கழகத்தில் (Azim Premji University) உள்ள தொடர் வேலை வாய்ப்பு மையத்தின் (Centre for Sustainable Employment) ஆராய்ச்சியாளர்களும், திட்ட வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் சேர்ந்து தயாரித்து இருக்கும் ஆய்வு அறிக்கையின் படி, வேலை வாய்ப்பின்மை பல ஆண்டுகளாக (மக்கள் தொகையில்) இரண்டு முதல் மூன்று விழுக்காடாக இருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து விழுக்காடாக கடுமையாக உயர்ந்து விட்டது.
இதில் இளைஞர்களிடையே வேலை இன்மை மிக அதிகமாக, பதினாறு விழுக்காடாக உள்ளது. பொருள் உற்பத்தி உயர்வுக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் உண்டாக வில்லை. அதாவது, பத்து விழுக்காடு பொருள் உற்பத்தி உயர்வு ஒரு விழுக்காடுக்கும் குறைவான புதிய வேலை வாய்ப்பையே உண்டாக்கி இருக்கிறது. மேலும், நடுவண் அரசின் தேசிய மாதிரி அளவீடு அமைப்பு (National Sample Survey Organisation) ஜனவரி 2019 வெளியிட்டு உள்ள வேலை வாய்ப்பு அறிக்கை, நாட்டின் இப்பொழுது உள்ள வேலை இன்மை நிலை, 45 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடுமையான வேலை இன்மை நிலைப்பாட்டு அளவுக்கு ஈடாக மிக மோசம் அடைந்து விட்டது என்று குறிப்பிடுகிறது. பண மதிப்பு இழப்புதான் இந்தக் கடுமையான வேலை வாய்ப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும்.
விவசாய வீழ்ச்சி
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 60% மக்கள் வசிக்கின்ற கிராமப்புற வருவாய் மொத்த வருவாயில் 15% சதவீதம் மட்டுமே ஆகும். இந்த நிலைதான் தொடர் கதையாகி விட்ட கிராமப்புற வறுமைக்குக் காரணம் ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் நெல் உற்பத்தி சராசரியாக ஆண்டிற்கு 1.2% கூடி இருக்கிறது. (2010 முதல் 2014 வரை 4.7%).
கோதுமை உற்பத்தி உயர்வு 0.9% (2010-2014-ல் 4.4%). இதைப் போலவே சிறு தானியம், எண்ணைய் வித்துக்கள், கரும்பு, பஞ்சு ஆகிய விவசாயப் பொருட்கள் உற்பத்தி இந்த ஆண்டுகளில் மிக மந்த நிலையில் இருந்தன.
தொழில் துறைத் தொய்வு
தொழில் துறை உற்பத்தி 2013-14 இருந்து 2017-18 வரை சராசரியாக ஆண்டிற்கு நான்கு விழுக்காடு தான் உயர்ந்து உள்ளது. அரசின் பொருளாதாரக் கொள்கை நிலையாக இல்லாததால் தொழில் துறை உற்பத்திப் பெருக்கம் இப்படியாக மந்தமாகி விட்டது.
விலைவாசி உயர்வு
நுகர்வோர் விலைவாசி குறியீடு எண் (Consumer Price Index) நான்கு ஆண்டுகளில் (2013-14 இல் இருந்து) 22% உயர்ந்து இருக்கிறது. இது மக்களின் வருவாய் கூடினாலும் விலை ஏற்றத்தால் ஏற்படும் ரூபாயின் மதிப்பு குறைவு, மக்களின் நலன் மேம்பாட்டை மட்டுப்படுத்துகிறது என்பதைத்தான் காண்பிக்கிறது. பணப் புழக்கத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது மூலமாக விலைவாசி உயர்வை தடுப்பது தான் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையின் (Monetary Policy) முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
விலைவாசி உயர்வை (பணவீக்கம்) கட்டுக்குள் வைப்பதுதான் சிறந்த வறுமை ஒழிப்பு கொள்கை என ரிசர்வ் வங்கி உறுதி படக் கூறுகிறது. அரசின் கொள்கையும், செயல்பாடுகளும் ரிசர்வ் வங்கியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனத் தோன்றுகிறது.
பட்ஜெட் பற்றாக்குறை
மத்திய அரசின் பட்ஜெட்டில், 2014-15 இருந்து 2018-19 வரை செலவுக்கு எதிரான வரி வருவாய் பற்றாக் குறையை சரி செய்வதற்காக அரசு சுமார் ரூ.28 லட்சம் கோடிகள் கடன் வாங்கி இருக்கிறது. ஆனால் நிதியை கவனமாக, மக்கள் வருவாயை பெருக்கும் நோக்கத்திற்காக செலவு செய்யவில்லை.
இப்படியாக, அரசின் அண்மைய பொருளாதார கொள்கைச் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை மட்டுப்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காமலும், லட்சக் கணக்கான சிறு தொழில் நிறுவனங்களை நலிவு அடையச் செய்து ஏராளமானோருக்கு வேலை இழப்பு ஏற்படுத்தியும், பெரும்பான்மை மக்களின் நலனை ஒடுக்கி விட்டன.
– எஸ். ஜெ. எஸ். சுவாமிதாஸ், இயக்குநர், ரிசர்வ் வங்கி பொருளாதாரத்துறை (ஓய்வு)
9841024391