சிறு வணிகர்களுக்கு பயனிக்கும் வகையில் காம்போசிஷன் முறையில் வரி செலுத்தும் முறை ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 10 படி நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறையில் வரி செலுத்துவதை தொகுப்பு வரி, இணக்க வரி, கலவை திட்டத்தில் வரி செலுத்துதல் என்றும் கூறுவார்கள். முந்தைய நிதி ஆண்டில் ஒரு கோடிக்கு குறைவாக வருமானம் (வருமான உச்ச வரம்பு 1.50 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது – அறிவிப்பு விரைவில் வர உள்ளது) உள்ள வணிகர் இத்திட்டத்தில் வரி செலுத்தலாம்.
இந்தியாவில் உள்ள அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிஜோராம், சிக்கிம், நாகலாந்து திருபுரா, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வணிகர்களுக்கு இந்த உச்ச வரம்பு 13/10/2017 ரூ. 50 லட்சமாக இருந்து பின்பு ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
காம்பொசிஷன் முறையில் வரி செலுத்த விரும்பும் நபர் நிரந்தர கணக்கு எண் (Pan) கொண்ட அவருடைய எல்லா நிறுவனங்களுக்கும் இதே முறையில்தான் வரி செலுத்த வேண்டும். இது வெவ்வேறு மாநிலத்தில் (அ) வெவ்வேறு வணிகம் புரிந்தாலும் பொருந்தும்.
வரி விகிதம்
இத்திட்டத்தில் செலுத்த வேண்டிய வரி விகிதம் கீழ் வருமாறு –
அ) பொருள் தயாரிப்பவர்கள் (Manufacturers) செலுத்த வேண்டிய வரி 0.05% சிஜிஎஸ்டி + 0.50% எஸ்ஜிஎஸ்டி (மொத்தம் 1%) 01-01-2018 முன்பு இந்த வரி 1% + 1% (மொத்தம் 2%) ஆக இருந்தது. இந்த வரி ஐஸ் கிரீம், பான் மசாலா, புகையிலை போன்ற அரசால் அறிவிக்கப்பட்ட பொருள்களுக்கு பொருந்தாது.
ஆ) உணவக சேவை புரியும் வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி 2.5% சிஜிஎஸ்டி + 2.5% எஸ்ஜிஎஸ்டி (மொத்தம் 5%)
இ) வர்த்தகர்கள் 0.50% சிஜிஎஸ்டி + 0.50% எஸ்ஜிஎஸ்டி (மொத்தம் 1%) வரி செலுத்த வேண்டும். 31-12-2017 முன்பு மொத்த விற்பனை மீது 1% வரி விதிக்கப் பட்டு வந்தது (வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் உட்பட).
இந்த முறையில் வரி செலுத்துபவர், தான் வெளியே சப்ளை செய்யும் பொருள் மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கக் கூடாது. அதே போல் உள்வரும் அனைத்து பொருள் மற்றும் சேவைகள் மீது உள்ளீட்டு வரி வரவு பெற முடியாது. காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர் அவர் வழங்கும் விற்பனை பட்டியல், பெயர்ப் பலகை, வணிக இடம் ஆகிய அனைத்திலும் அதை குறிப்பிட வேண்டும்.
வரிப் படிவங்கள்
காம்பொசிஷன் முறையில் வரி செலுத்தும் வணிகர் ஒவ்வொரு மாதமும் வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காலாண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்தால் போதும். அவை பற்றிய விவரம் பின் வருமாறு,
படிவம் ஜிஎஸ்டிஆர் – 4ஏ
பொருள் வழங்கல் செய்யும் வணிகர் தாக்கல் செய்யும் ஜிஎஸ்டிஆர் – 1 படிவம் அடிப்படையில் காம்போசிஷன் திட்டத்தில் வரி செலுத்தும் வணிகருக்கு கிடைக்கப் பெற்ற உள்வரும் பொருள்களின் விவரம் தானாக இந்த படிவத்தில் கிடைக்கப் பெறும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் – 4
படிவம் ஜிஎஸ்டிஆர் – 4ஏ இல் இருந்து வெளி செல்லும் அனைத்து பொருள்கள் உட்பட தானாக நிரப்பப்பட்ட விவரங்கள் மற்றும் செலுத்த வேண்டிய வரி குறித்த விவரங்கள், 4ஏ இல் மேற் கொள்ளப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் (அ) மாறுதல்கள் குறித்த விவரங்கள் படிவம் ஜிஎஸ்டிஆர் 4 இல் காலாண்டுக்கு ஒரு முறை வழங்க வேண்டும். காலாண்டு முடிவில் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் – 9ஏ
வரி செலுத்திய விவரங்களுடன் காலாண்டு தாக்கல்களின் தொகுப்பு விவரத்தை இந்தப் படிவத்தில் ஒரு முழு நிதி ஆண்டுக்கு வழங்க வேண்டும். இதற்கான காலக்கெடு அடுத்த நிதி ஆண்டின் டிசம்பர் 31. இந்த நிதி ஆண்டுக்கு இது 31-03-2018 வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
சில நிபந்தனைகள்
கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு காம்போசிஷன் முறையில் வரி செலுத்த வேண்டும்.
சேவை வழங்குபவர்களுக்கு பொருந்தாது, உணவக சேவை வழங்குபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மின்னணு வணிகர்கள் (இ – காமர்ஸ் ஆப்பரேட்டர்) மூலம் வணிகம் புரிபவராக இருக்க வேண்டும்.
வெளி மாநிலத்தில் வரி உள்ள வெளி வழங்கல் செய்யக் கூடாது. வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்பவராக இருக்க கூடாது. உள் வழங்கலில் பெறப்பட்ட பொருள் மற்றும் சேவைகளுக்கு பிரிவு 9(3)/9(4) படி, எதிரிடைக் கட்டணம் (RCM) செலுத்தி இருக்க வேண்டும்.
01-07-2017 அன்று இருப்பில் உள்ள பொருள்கள் வெளி மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டதாகவோ, பதிவு பெறாத வணிகர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகவோ இருக்கக் கூடாது.
காம்போசிஷன் முறையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
காம்போசிஷன் முறையில் வரி செலுத்தாத ஒருவர், காம்போசிஷன் முறையில் வரி செலுத்த விரும்பினால், அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே அதை தேர்வு செய்ய முடியும். அதற்கான விண்ணப்பத்தை முந்தைய நிதி ஆண்டின் மார்ச் 31 ஆம் நாளுக்கு முன்னரே தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டில் அதற்கான வரிப் படிவத்தை சரியாக வழங்க முடியும்.
காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர் சாதாரண முறையில் வரி செலுத்துபவராக ஒரு நிதி ஆண்டின் நடுவில் மாற முடியும். ஆனால் மீண்டும் அவர் அதே நிதி ஆண்டில் காம்பொசிஷன் முறையில் செலுத்துபவராக மாற முடியாது.
காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர் சாதாரண முறையில் வரி செலுத்துபவராக மாறும் போது காம்போசிஷன் முறையில் வரி செலுத்தாமல், சாதாரண முறையிலேயே வரி செலுத்தலாம். அவ்வாறு மாறும் நாளின் முந்தைய நாளில் அவரிடம் உள்ள இருப்பு பொருள் மீதான உள்ளீட்டு வரியை அவர் செலுத்த வேண்டிய வரியில் நேர் செய்து கொள்ளலாம்.
காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர்களுக்கான படிவங்கள்
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-01: காம்போசிஷன் திட்டத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-02: காம்போசிஷன் முறையில் வரி செலுத்த விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பம்.
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-03: பதிவு பெறாத வணிகர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களின் விவரம்.
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-04: காம்போசிஷன் முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலகுவதற்காக தெரிவிக்கும் விண்ணப்பம்.
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-05: ஜிஎஸ்டி சட்டத்தில் ஏதேனும் பிரிவு (அ) விதியை மீறும் போது அனுப்பப்படும் அறிக்கை.
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-06: அறிக்கை ஜிஎஸ்டி சிஎம்பி – 05 படி வழங்கப் படும் அறிக்கைக்கான பதில்.
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-07: அறிக்கையின் மீதான ஆணை.
01-04-2019 முதல் என்ன மாற்றம்?
ஜனவரி 10, 2019 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 01-04-2019 முதல் கீழ்கண்ட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர்களின் வருமான உச்ச வரம்பு ரூபாய் ஒரு கோடியில் இருந்து ரூ. 1.50 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். ஆனால் வரிப் படிவம் ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்தால் போதும். இது பொருள் மற்றும் சேவை புரிவோர் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.
காம்போசிஷன் முறையில் வரி செலுத்தும் திட்டம், சேவை புரிபவர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் ரூ. 50,000 வரை வருமானம் உடைய சேவைகள் மட்டும் புரிபவர் மற்றும் சேவையோடு மிக்ஸ்டு சப்ளையும் (Mixed Supply) இணைந்து செய்பவர்களுக்கு இந்த புதிய திட்டம் பொருந்தும். இதற்கான
வரி விகிதம் 6% (3% சிஜிஎஸ்டி + 3% எஸ்ஜிஎஸ்டி).
மேற்கண்ட மாற்றங்கள் சிறு பொருள் விற்பனையாளர்களுக்கு சேவையாகவும், தொழில் புரிபவர்களுக்கும் பயன் உள்ளதாகவும் இருக்கும்.
– சு. செந்தமிழ்ச் செல்வன்