பணம் சேர்ப்பது பாவச் செயல் என்றும், செல்வந்தர்கள் செல்வத்தால் அல்லல்படுகிறார்கள் என்ற பணம் சம்பாதிப்பதற்கு எதிரான ஒரு பார்வையை இன்றும் சிலர், குறிப்பாக மத போதகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இது ஒரு தவறான கருத்து ஆகும். .”ஏழை கால் வயிற்றுக் கஞ்சியைக் குடித்தாலும் நிம்மதியாய்த் தூங்குவான், கோடீஸ்வர்கள், பணக்காரகளுக்கு நிம்மதி என்பது இருக்காது. தூக்கம் வராது” என்று போலியான, பாசாங்கான கருத்துகளை தங்களுக்குத் தாங்களே சொல்லி சுகம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் நம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைபோடும் கருத்துகள்.
“செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்பார்கள். நன்னெறிகளை போதிப்பதாகக் கூறும் பெரும்பாலான அற நூல்கள், பொருளாதார முன்னேற்றம் குறித்தும், பொருள் ஈட்டும் வழிகள் குறித்தும் பேசுவது இல்லை.
பொருளின் பொருளை முழுமையாக உணர்ந்து, பொருள் ஈட்ட வேண்டும் என்று மிகவும் வலிமையாக வலியுறுத்திய பெருமை பெரும்புலவர் திருவள்ளுவருக்கே உண்டு. இதற்கென பொருள் செயல்வகை என்ற ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்
இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ற வகையில். பணம் குறித்தும், செல்வம் சேர்ப்பது குறித்தும் கோடிக் கணக்கான மக்கள் கொண்டு இருந்த தவறான, புராதன கால நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தவர் என்ற புகழ் ராபர்ட் கியோஷாகி-க்கு உண்டு.
இவர் எழுதிய “பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை” (Rich Dad Poor Dad) என்ற புத்தகம் இதுவரை வெளிவந்து உள்ள தனிநபர் வளர்ச்சி, நிதி நிர்வாகப் புத்தகங்களின் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்ததோடு மட்டும் அல்லாமல் உலகின் பல மொழிகளிலும் தமிழ் உட்பட மொழி பெயர்க்கப்பட்டு அந்த நூல்களும் விற்பனையில் சாதனை படைத்து உள்ளன. “நியூயார்க் டைம்ஸ்” இதழ் தொகுத்து வழங்கும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் இந்த புத்தகம் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து இடம் பெற்றது.
இந்தப் புத்தகத்தில் பணத்தின் முதன்மை குறித்து மட்டுமல்ல; பணத்தைப் பெருக்குவதற்கான நுணுக்கங்களை, அறிவியல் ரீதியாகச் சொல்லி இருக்கிறார்.. புத்தகம் முழுவதும் ஏராளமான இன்றியமையாத குறிப்புகள் மற்றும் பொருள் சேர்ப்பது பற்றிய வழிகாட்டல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவை நமக்குத் தேவையான உண்மைகளை உரக்கச் சொல்கின்றன. அந்த நூலில் இருந்து சில துளிகள்…
> பணம் என்பது ஒரு வகையான சக்தி, ஆனால் பொருளாதாரக் கல்வி அதைவிட சக்தி வாய்ந்தது.
> பணத்திற்க்காக வேலை செய்யாதீர்கள். பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும்.
> பணத்துடன் அதிக ஒட்டுதல் கொண்டுள்ளது எவ்வளவு பெரிய மனநோயோ, அதே போல் பணத்தைத் தவிர்ப்பதும் ஒரு நோயாகும்.
> ஏழ்மை அல்லது பொருளாதார சிக்கல்களுக்கான காரணம், பயமும், அறியாமையும்தானே தவிர, பொருளாதாரமோ, அரசாங்கமோ அல்லது பணக்காரர்களோ அல்ல.
> நிஜ உலகில் சாமர்த்தியமானவர்கள் முன்னேறுவதில்லை. துணிச்சல்கார்கள்தான் முன்னேறுகிறார்கள்.”
– எஸ். எஸ். ஜெயமோகன்