உலகத் தமிழர் பொருளாதார மய்யம் சார்பில் தொடர்ந்து உலகத் தமிழர் பொருளாதார மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கிறார், திரு. விஆர்எஸ். சம்பத். வழக்கறிஞரான இவர் சட்டக்கதிர் என்னும் சட்ட விழிப்புணர்வு மாத இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருக்கிறார். இது வரை நான்கு உலகப் பொருளாதார மாநாடுகளை இவர் நடத்தி இருக்கிறார். வரும் அக்டோபர், 11 முதல் 15 வரை புதுச்சேரியில் நடைபெற இருக்கும் ஐந்தாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது பற்றி திரு. சம்பத் கூறியபோது,
“தொழில் துறையில் உள்ள தமிழர்களிடையே வணிகத் தொடர்புகள் ஏற்படவும், தொழில் வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளவும், தொழில் முனைப்பு தொடர்பான சிந்தனைகளை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்பதையும் முதன்மையான நோக்கங்களாகக் கொண்டு உலகத் தமிழர் பொருளாதார மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதுவரை நான்கு மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. 2009 – ம் ஆண்டு சென்னையிலும், 2011 – ம் ஆண்டு துபாயிலும், 2016 – ம் ஆண்டு மீண்டும் சென்னையிலும், 2017 – ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பனிலும் நடைபெற்றன. இந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெறுகிறது.
தமிழர்கள் தொழில்களைத் தொடங்க வேண்டும், தற்போது தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் மேலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்களுடன் தமிழ்நாட்டில் பலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களும் இந்த மாநாடு நடைபெறுவதில் ஆர்வம் காட்டுவதோடு தங்களால் முடிந்த ஒத்துழைப்புகளையும் தந்து வருகின்றனர்.
தமிழகத்தில் படித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமே நிறைய மாணவர்களிடம் காண முடிகிறது. அவர்களிடம் ஓரளவுக்காவது தொழில் தொடங்கி வளர வேண்டும் என்ற எண்ணங்களை விதைப்பதற்கு இத்தகைய மாநாடுகள் உதவும் என்று எண்ணுகிறோம். குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்தியர்கள் தொழிலில், வணிகத்தில் ஈடுபடுவதை ஆர்வமாகச் செய்கிறார்கள். அதைப்போல தமிழர்களிடையேயும் வணிக எண்ணங்களைத் தூண்ட வேண்டும்.
இதற்கு தொடர்ந்து தொழில் தொடர்பான விழிப்புணர்ச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள், பயிற்சிகள் நடைபெற வேண்டும். தொழில் தொடர்பான விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று, தொடக்கத்தில் பல தொழில் கருத்தரங்குகளை நடத்தினோம். அந்த கருத்துரங்குகளில் நிறைய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதன் தொடர்ச்சியாகவே இப்படிப்பட்ட மாநாடுகளைத் திட்டமிட்டு நடத்துகிறோம்.
புதுச்சேரியில் நடைபெறும் மாநாட்டில், மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி, டாக்டர். பரமசிவம் பிள்ளை, திரு. வையாபுரி, புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி, ஆளுநர் செல்வி. கிரண்பேடி, தமிழகத்தின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் திரு. க .பாண்டியராஜன் மற்றும் தொழில் அதிபர்கள், மற்றும் வெளிநாட்டு பொருளாதார அமைச்சர்கள், பொருளியல் வல்லுநர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்கள்.
விருதுகள் வழங்குதல், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், பொருளாதார ஆய்வு அறிக்கைகள் வழங்கல் போன்றவையும் நடைபெறுகின்றன. மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்கள் தொழில் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும் திட்டம் உள்ளது. புதுச்சேரிக்கு அருகில் சென்னை உள்ளது என்பதால், சென்னையில் உள்ள தொழில் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்ல போக்குவரத்துத் துறைகளிடம் பேசி வருகிறோம்.
மாநாட்டில் நடைபெற இருக்கும் சிறப்பு கருத்தரங்குகளில் இந்தியா-சீனா பொருளாதார வளர்ச்சி, பணமதிப்பு இழப்பால் ஏற்பட்டு உள்ள பொருளாதார மாற்றங்கள், சரக்கு மற்றும் சேவை வரியால் தொழிலில், வணிகத்தில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், உலக அளவில் உள்ள பொருளாதார வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகள் பெற உள்ள பிற வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனைகள் கிடைக்கும். எங்கள் இணைய முகவரி – economicconference.in ” என்றார், திரு. விஆர்எஸ். சம்பத்.
– செழியன். ஜா