Latest Posts

வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் சோதிடம்

- Advertisement -

அறிவியல் பார்வை அற்றவர்கள் சில பல்கலைக்கழகங்களில் சோதிடக் கலையை ஒரு பாடமாகச் சேர்த்துள்ளார்கள். அனைத்துப் பல்கலைகழகங்களிலும், கல்லூரிகளிலும் இதை பாடமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு முறை பேசும் போது, ”நான் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு வானத்திலுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்நாட்டின் குழந்தைகளின் கண்களைப் பார்த்தால் போதும். அவர்கள் கண்களில் மகிழ்ச்சியும், பிரகாசமும் நிறைந்திருந்தால் அது இந்நாட்டின் வளமான எதிர்காலத்தைக் காட்டும். மாறாக அவர்கள் கண்களில் அழுகையும், சோகமும் நிறைந்திருந்தால் நாட்டின் எதிர்காலம் வெறுமை நிறைந்ததாக இருக்கும்” என்றார்.

”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மேன்மையடைந்திருப்பதற்கும், தாழ்ந்த நிலையில் இருப்பதற்கும் அவனது செயல்களே காரணம் என்றார். ஆனால், பெரும்பாலானவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. உயர்ந்தால் அதற்கு காரணம் ‘தான்’ என்றும், தாழ்வு வரும் போது இச்சமுதாயமும் காரணம் என்றும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்  வழக்கமுமே அதிகமுள்ளது.

பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற சோதிடர்கள் பெருகும் போது, மக்களை ஏமாற்றும் கூட்டம் தான் அதிகரிக்கும்.  பல்கலைகழகங்களில் உள்ள படிப்புகளெல்லாம் பல்லாண்டு காலமாக ஆராய்ந்து அவற்றின் உண்மைகளின் அடிப்படையிலும், சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு அது பயன்படும் என்பதைப் பொருத்தும் பாடங்களும், பாடத்திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

சோதிடக் கலை பயின்றவர்கள் எப்பிரிவில் சேர்க்கப்படுவர்? கலை அறிவியல் பயின்றவர்களா? தொழில் நுட்பக் கல்வி பயின்றவர்களா?  சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த சோதிடர்களை நம்பி உள்ளதையும் தொலைத்து விடுபவர்கள் நிறைய உண்டு. பல இளம்பெண்கள் இதற்கு இரையாகிறார்கள்.

வங்கிகளை எடுத்துக் கொள்வோம். இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வாரக்கடனாக உள்ளது. ஆனால், இப்போது அனைத்து வங்கிகளிலும் நிறையப் பணம் இருக்கிறது. ஆனால், அந்தப் பணத்தை இலாபகரமான தொழில்களின் முதலீடு செய்ய வகை தெரியாமல் தவிக்கிறார்கள் வங்கியாளர்கள்.

இந்தச் சிக்கல் ஒரு புறமிருக்க வங்கிகளின் நிர்வாகங்கள் அதிகாரிகள், அலுவலர்களின் பங்கு (Accountability) என்ற ஒன்றைப் புகுத்தியிருக்கிறார்கள். கொடுத்த கடன் வரவில்லை என்றால் வங்கி ஊழியர்கள், அலுவலர்களின் பங்கு அதிலென்ன என்று ஆராய்கிறார்கள்.

ஊழியர்களின் தவறு தான் கொடுத்த பணம் வராமைக்குக் காரணம் என்றறிந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் பதவி நீக்கம், தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளை மனதில் கொண்டும், கடன் கொடுப்பதற்கான முடிவை எடுப்பதற்கு காலதாமதம் செய்கிறார்கள் அல்லது முடிவெடுப்பதே இல்லை.

அறிவுப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதிலேயே இப்படி என்றால், சோதிடரை வைத்துக் கொண்டு பணம் கொடுப்பதற்கு முடிவெடுக்கும் முன் முதலில் வங்கியிலிருக்கும் சோதிடருக்கல்லவா கோப்புகளை அனுப்பி அவருடைய ஆருடத்தைக் கேட்டறிவார்கள். அவர் சொல்வது தான் இறுதி முடிவாக இருக்கும். கொடுக்கலாமென்றால் கொடுப்பார்கள், இல்லையென்றால் கிடைக்காது. சோதிடர் சொல்லி கொடுத்த கடன் திரும்ப வந்து விடும் என்பது என்ன நிச்சயம்?.

மனித சமுதாயம் இன்று அனுபவித்து வரும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் சோதிடம் பார்த்திருந்தால் கிடைத்திருக்குமா? மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் சோதிடம் பார்த்திருந்தால் இன்று நாம் எதை அனுபவிப்போம்?

இன்று தொலைக்காட்சிப் பெட்டி ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் அமர்ந்து கொண்டு உலகின் மூலை முடுக்குகளில் நடப்பவைகளை எல்லாம் தெரியப்படுத்துகிறது. தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் சோதிடம் பார்த்திருந்தால் தொலைக்காட்சி வந்திருக்குமா?

‘ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது ஞற்றுபவர்’ என்று உழைப்பின் பெருமையைச் சொன்னார் வள்ளுவர். முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் சிலர் கால நேரம் பார்க்காமல் உழைப்பிலேயே கவனம் கொண்டு முன்னேறுகிறார்கள். கொஞ்சம் வசதி சேர்ந்தவுடன் போதுமென்ற மனமும், மெத்தனப் போக்கும் நுழைந்து விடுகிறது, முன்னேற்றம் தடைப்படுகிறது. சோதிடர்களையும், சாமியார்களையும் தேடி அலைகிறார்கள். இவர்களின் பலவீனத்தை அவர்கள் முதலாக்கிக் கொள்கிறார்கள். சென்னை சரவணபவன் ஹோட்டல் முதலாளி மணமான பெண்ணை திருமணம் செய்து கொண்டால் மேலும் வாழ்வில் முன்னேறலாம் என்ற சோதிடனின் பேச்சைக் கேட்டார், அனைத்து புகழையும் இழந்தார். நீதி மன்றத்தில் தண்டிக்கப்பட்டு முடிவு எய்தினார்.

ஆட்சியிலுள்ளோரும், பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளோரும், தொழில் அதிபர்களும் சோதிடர்களை நம்பத் தொடங்கினால் சமுதாயத்தையே பாதிக்கும், பொருளாதார வளர்ச்சி குன்றும், தொழில் வளர்ச்சி அற்றுப் போகும். இதனால் சோதிடர்களைத் தள்ளி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழிலும், நாடும் வளரும். உயர்நிலையை அடையும். இதற்கு நல்ல சான்று, இன்று வளர்ந்திருக்கும் நாடுகள் தான், சோதிடத்தைப் ‘பார்த்தவன் வென்றதில்லை; வென்றவன் பார்த்ததில்லை’ என்ற முதுமொழியை என்றும் நம் நினைவிற் கொள்ள வேண்டும்.

ஆ.கருணாகரன், கொச்சி

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news