இதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்?
இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக,
ஆசிரியர் (எடிட்டர்)
தலைமை துணை ஆசிரியர்
துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்)
செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்)
ஃபோட்டோகிராஃபர்கள்
செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி ஆப்பரேட்டர்கள்)
பக்க வடிவமைப்பாளர்கள் (லே அவுட் ஆர்ட்டிஸ்ட்கள்) என்றபடி இருக்கும்.
ஆசிரியராகவும், துணை ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படுகிறவர்கள் மொழிவளம் மிக்கவர்களாகவும், செய்திப் பார்வை உள்ளவர்களாகவும், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனித்து அதற்கேற்ப எவற்றை எல்லாம் செய்திகள் ஆக்கலாம் என்பதில் குறியாக இருப்பவர்களாகவும் இருப்பார்கள். ரிப்போர்ட்டர்கள் யாரிடமும் எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், கேள்விகள் கேட்பதற்குத் தயங்காதவர்களாகவும் இருப்பார்கள். அரசியல்வாதிகள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை அனைத்து ஆட்களையும் தெரிந்து வைத்தும் இருப்பார்கள்.
இவர்கள் பெரும்பாலும் ஆசிரியர், துணை ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படியே செயல்படுவார்கள்.
செய்தியாளர்கள் கொண்டு தரும் அத்தனை செய்திகளையும் பதப்படுத்தி, நேர்த்தியாக்கி வாசகர்களிடம் வழங்குபவர்கள், சப் எடிட்டர்கள், மற்றும் எடிட்டர்கள்தான். வார, மாத இதழ்களில் ஒரு கட்டுரை அல்லது செய்திக்குக் கீழ் அதை எழுதியவர்களின் பெயர்களைப் போட்டு இருப்பார்கள். அவை மொத்தமும் அவர்கள் மட்டும் எழுதியதாக இருக்காது. அவற்றில் வாசகர்களின் கண்களுக்குத் தெரியாத துணை ஆசிரியர்களின் பங்களிப்பும் இருக்கிறது.
ஒரு செய்தி கைக்கு வந்த உடன், அந்த செய்தி தங்கள் இதழில் வெளியிட ஏற்றதுதானா என்பதை ஆசிரியர் குழுவினர் முடிவு செய்வார்கள். ஒவ்வொரு இதழுக்கும் எடிட்டோரியல் பாலிசி என்று இருக்கும். சான்றாக ஆளும் கட்சிக்கு எதிரான செய்திகளை வெளியிடுவது இல்லை என்று அவர்கள் கொள்கை இருந்தால், அத்தகைய செய்திகளை தவிர்த்து விடுவார்கள் அல்லது மிகவும் சிறியதாக வெளியிடுவார்கள். எதிர்க்கட்சிகளை ஆதரிப்பது என்று கொள்கை வைத்து இருந்தால், ஆளும் கட்சி செய்யும் தவறுகளை பெரிதாக வெளியிடுவார்கள். ஆதரவான செய்திகளை சிறியதாக வெளியிடுவார்கள், அல்லது வெளியிடாமலே தவிர்த்து விடுவார்கள். இந்த பாலிசிக்கு ஏற்ப செய்திகளை எடிட் செய்ய வேண்டும்.
அரசியல் சார்ந்த செய்திகளை வெளியிடும்போது, பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசுவதை அல்லது பேட்டிகளின்போது சொல்வதை அப்படியே எழுதி அல்லது தட்டச்சு செய்து கொடுப்பார்கள். இந்த செய்தி ஒரு எடிட்டரின் கைக்கு வந்த உடன் அதனை ஒரு சப் எடிட்டரிடம் கொடுத்து, இதை ஒரு காலம் செய்தியாக அல்லது இரண்டு காலம் செய்தியாக என்று எவ்வளவு அளவில் எடிட் செய்ய வேண்டும் என்று குறிப்புரை தருவார். அதனை ஏற்று சப் எடிட்டர், அதற்கேற்ப அந்த செய்தியை எடிட் செய்வார். தலைப்பு போடுவார்.
தலைப்பு போடுவதிலும் எடிட்டர்கள் மூளையைக் கசக்குவார்கள். நிறைய தலைப்புகளை சிந்தித்து பிறகே ஒரு தலைப்பை தேர்ந்து எடுப்பார்கள். ஒரு தலைப்பு என்பது அம்பு போல் பாய வேண்டும் என்று தினத்தந்தி திரு. சிவந்தி ஆதித்தன் கூறுவார்.
செய்தியை எடிட் செய்யும்போது, அந்த செய்தியுடன் தனக்குத் தெரிந்த சில செய்திகளை இணைத்தால் அந்த செய்தி இன்னும் சிறப்பாக அமையும் என்றால் அந்த செய்திகளையும் துணை ஆசிரியர் அல்லது ஆசிரியர் சேர்ப்பார். சில செய்திகளை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதினால் அவற்றை நீக்கி விடுவார்கள். இறுதியில் அந்த செய்தி எடிட்டர் விரும்பிய அளவில் நேர்த்தியாக தயாராகி விடும்.
எல்லா ரிப்போர்ட்டர்களும், எல்லா சப் எடிட்டர்களும் எல்லா செய்தித் துறைகளிலும் வல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் யார்யாருக்கு எந்த துறைகளில் நாட்டம் இருக்கிறதோ அந்த துறைகள் சார்ந்து செய்திகளுக்கு அவர்களைப் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்தும் போது செய்திகள் இன்னும் சிறப்பாக அமையும்.
உள்நாட்டு அரசியல், வெளிநாட்டு அரசியல், தமிழ்நாட்டு அரசியல், வடநாட்டு அரசியல், சினிமா, உடல்நலம், அறிவியல், விளையாட்டு, உளவியல், மருத்துவம், பங்குச் சந்தை, நிதியியல், வணிகம் என்று உள்ள பல்வேறு துறைகள் சார்ந்த செய்திகளை தொடர்ந்து இதழ்களில் வெளியிட வேண்டி இருக்கும். அந்த அந்த துறைகளில் ஈடுபாடு காட்டும், அந்த செய்திகளை நிறைய தெரிந்து வைத்து இருக்கும் சப் எடிட்டர்களிடம் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆன செய்திகள் எடிட்டிங் செய்ய தரப்படும்.
நாளிதழ்கள் சார்ந்த செய்திகளை எடிட் செய்வதற்கும், வார, மாத இதழ்களுக்கான செய்திகளை எடிட் செய்வதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. வார, மாத இதழ்களில் சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், சிரிப்புத் துணுக்குகள், அறிவியல் சார்ந்த செய்திகள், சமுதாய சிக்கல்கள் தொடர்பான அலசல்கள், வாசகர் பகுதிகள் என்ற வகையில் செய்திகள் இடம் பெறும்.
கதைகளை எடிட் செய்யும்பொது இன்னும் விறுவிறுப்பாக்கும் வகையில் மாற்றங்களை செய்வார்கள். தலைப்புகளை மாற்றுவார்கள். நான்கு பக்க கதையாக இருந்தாலும், ஒரு பக்கம் போதும் என்றால் ஒரு பக்கம் ஆக சுருக்கி விடுவார்கள்.
ஒரு செய்தியை அல்லது கட்டுரையை எடிட் செய்யும்போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். எழுத்துப் பிழைகள், நிறுத்தற் குறிகள் சரியாக உள்ளனவா என்று பார்த்தல், ஒருமையில் தொடங்கினால் ஒருமையில் முடிந்து இருக்கிறதா; பன்மையில் தொடங்கினால் பன்மையில் முடிந்து இருக்கிறதா என்பதை கவனிப்பது, பாரா பிரித்தல் போன்றவை அடிப்படையானவை. அதற்கு அடுத்ததாக செய்திகளில் பிழைகள் இல்லாமல் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். எடுத்துக் காட்டாக தி. மு. க. தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர், தி. மு. க. வின் இளைஞர் அணி செயலாளர். அதற்கேற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
ஒரு இதழின் கொள்கை, தங்கள் இதழில் அறிவியலுக்குப் புறம்பான செய்திகள் இடம் பெறக் கூடாது என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு செய்தியாளர், தொழில் அதிபர் ஒருவரிடம் பேட்டி எடுத்து எழுதித் தரும்போது, என்னுடைய அதிர்ஷ்டத்தால் நான் முன்னேறினேன் என்று அவர் சொன்னதை எழுதித் தருவார். இங்கே ஒரு சப் எடிட்டர் அந்த சொற்களை, நான் என் உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறினேன் என்று மாற்ற வேண்டும்.
சில கோயில்களில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கிறார்கள். இது பல இதழ்களிலும் செய்தியாக வருவதைப் பார்த்து இருக்கிறோம். இதை ஒரு கட்டுரையாக எழுதும் போது, அந்த பழக்கம் எத்தனை காலமாக இருக்கிறது; என்றைக்கு நடைபெறுகிறது; இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளை செய்தியாளர் எழுதித் தருவார். இந்த செய்தியை மட்டும் வெளியிட்டால் கட்டுரை முழுமை அடையாது. தலையில் தேங்காய்களை உடைத்ததைத் தொடர்ந்து எத்தனை பக்தர்கள் தலையில் காயம் எற்பட்டது; இப்படி தலையில் தேங்காய் உடைப்பதால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்த மருத்துவர்களின் கருத்துகளையும் சேர்த்தால்தான் கட்டுரை முழுமை பெறும். இப்படி கட்டுரையை முழுமை ஆக்குவதும் எடிட்டிங்கில் உள்ள ஒரு நுட்பம் ஆகும்.
செய்தி நன்றாக இருக்கும். ஆனால், எழுதிய முறை சரியாக இருக்காது. இந்த நிலையில் துணை ஆசிரியர் அந்த செய்திகளை அடிப்படையாக வைத்து, தானே புதிதாக எழுதி விடுவார். அதை ஆங்கிலத்தில் ரீரைட்டிங் என்று கூறப்படுகிறது.
மொழி பெயர்க்கத் தெரிந்து இருப்பதும் துணை ஆசிரியர்களின் தனித் திறமை ஆகும். மொழி பெயர்க்க வேண்டிய செய்தியை ஒரு முறைக்கு இருமுறை படித்து முழுவதும் புரிந்து கொண்டு, மொழி ஆக்கம் செய்வார்கள். சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இவர்களுக்கு உள்ள அனுபவம் அந்த மொழி ஆக்கத்தை சிறப்பானதாகச் செய்யும்.
எடிட்டிங் என்பது ஒரு சுவையான, மனதுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பணியாகும். இதில் மேலும் மேலும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் அதிகம். முன்பு எல்லாம் செய்திகளை கையால் எழுதி திருத்திக் கொண்டு இருந்த காலம் மாறி அனைவருமே கணினியில் தட்டச்சு செய்து உள்ளிட்டு விடுகிறார்கள். இப்படி எங்கு இருந்தும் அனுப்பப்படும் செய்திகளை கணினியில் அமர்ந்தபடியே எடிட்டோரியலில் உள்ள துணை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் அழகாக எடிட் செய்து விடுகிறார்கள். வாசக எழுத்தாளர்களும் கூட தங்கள் படைப்புகளை தட்டச்சு செய்து மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
– க. ஜெயகிருஷ்ணன்