கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு
ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை விட்டு வரலாறும் நீங்க முடியாது. மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி வீழ்ந்தார்கள் என்பதை வரலாற்றில் இருந்து எடுத்துக் கொள்பவர்களே வளர முடியும்.
உலகத்திலேயே இந்தியாவில்தான் கல்வெட்டுகள் அதிகம். இந்தியாவிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழ்நாட்டு கல்வெட்டுகள் நிறைய அழிந்து விட்டன. குறிப்பாக கடந்த சுமார் நூறு ஆண்டுகளாக கோயில் திருப்பணி என்ற பெயரில் கல்வெட்டுகளை உடைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழர்கள் எந்த மண்ணையும் கைப்பற்றி ஆளவில்லை. ஆனால், பழங்காலத்திலேயே பல நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்து இருக்கிறார்கள். ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே உள்ள செங்கடல் பகுதியில் அமெரிக்க ஆய்வாளர்களால் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வின் போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் கிடைத்து இருக்கின்றன. இதை அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.
பிராமண மாணவர்களுக்கே எல்லாம்…
சங்க காலத்திற்குப் பிறகு, நாடு விடுதலை பெறும் வரை எந்த அரசும் தமிழில் கல்வி கற்பிப்பதற்காக கொடை அளித்ததற்கான எந்த சான்றும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் கொடை அளித்தது எல்லாம் குருகுல கல்விக்குதான். குருகுல கல்வி பிராமணர்களுக்கு மட்டும்தான். பிராமண மாணவர்களுக்கு கல்வி தருவதற்கு, எண்ணெய் தேய்ப்பதற்கு, மருத்துவத்துக்கு என் பலவாறாக பட்டியல் இட்டு கொடை கொடுத்ததைப் பற்றிய கல்வெட்டுகள்தான் கிடைத்து இருக்கின்றன. வேதங்கள், சம்பிரதாயங்கள் இவற்றை பிராமணர்களுக்கு கற்றுத் தருவதற்கு ஏராளமாக கொடைகளை வாரி வழங்கி இருக்கிறார்கள்.
ஆனால் எந்த அரசும் பள்ளிகளை நிறுவி, எல்லோருக்கும் தமிழ் இலக்கியத்தை, இலக்கணத்தை, மொழியைக் கற்றுக் கொடுக்கவில்லை. தமிழ் கல்வி என்பது தனிப்பட்ட புலவர்களின், ஆசிரியர்களின் தன்னார்வத்தைப் பொறுத்தே வளர்ந்து வந்து இருக்கிறது.
கிடா வெட்டி படையல் போட்டுத் தப்பினோம்
கல்வெட்டு ஆய்வுகளுக்குச் செல்லும் போது பல வியப்பான அனுபவங்களைச் சந்தித்து இருக்கிறேன்.
ஒரு ஊரில் நடுகல்லை தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள். அதற்கு பூ வைப்பது, பொட்டு வைப்பது, கிடா வெட்டி படையல் போடுவது என்று திருவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நடுகல் வழிபாடு, இறந்தவர்கள் நினைவாக ஒரு பெரிய கல்லை நட்டு, அவர்களை தெய்வமாக வழி படுகிற பண்டைய தமிழர் மரபில் இருந்து வந்தது. வேடியப்பன் சாமி என்கிற நடுகல் தெய்வம் தருமபுரியில் இருக்கிறது. அதை படம் எடுத்துக் கொண்டு நாங்கள் கிளம்பும் போது, யாரோ ஒருவன் இதைப் பார்த்து விட்டு, ”நம்ம சாமியின் சக்தியை எவனோ ஒருத்தன் இறக்கிக்கிட்டுப் போறான்டோய்..” என்று கத்த, கத்தி கம்புடன் அந்த பகுதியில் உள்ளவர்கள் வந்து வழிமறித்து விட்டார்கள். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ”சரி, என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னபடி கிடா வெட்டி பூசை செய்த பிறகுதான் விட்டார்கள்.
பொதுமக்களுக்கு நடுகல்லைப் பற்றியும் தெரியாது; கல்வெட்டுகள் பற்றியும் தெரியாது. இதனால் நடுகல் ஒரு ஆள் நிற்பது மாதிரி நட்டு இருக்கும். கத்தியைத் தூக்கிக்கிட்டு இருக்கிறது மாதிரி இருக்கும். அதற்கு மேலும் கீழும் கிறுக்கின மாதிரி இருக்கும் என்று அடையாளம் சொல்வோம். அங்கே உள்ள ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கண்டு வந்து எங்களுக்கு சொல்வார்கள்.
வரலாற்றுச் சிக்கலைத் தீர்த்து வைத்த கல்வெட்டு
கல்வெட்டு பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் ஒரு ஊரை எடுத்து ஆராய்ந்து ஆய்வேடு ஒன்றை எழுதித் தர வேண்டும். இதற்காக அவர்கள் அந்த ஊர் மக்களோடு கலந்து பழக வேண்டும். அப்போதுதான் அங்கு உள்ள கல்வெட்டுகள் பற்றியோ பழங்கால நினைவுச் சின்னங்கள்பற்றியோ அறிந்து எழுத முடியும். இது போல தம்பை என்ற ஊருக்கு சென்ற செல்வராஜ் என்ற மாணவருக்கு அங்கே இருந்த ஒரு கல்வெட்டைக் காட்டி இருக்கிறார்கள்.
அந்த மாணவர் சென்று பார்த்த போது, அது மிகவும் பழைய கல்வெட்டு என்பதால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதை படம் எடுத்து அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து நாங்களை சென்று பார்த்தோம். நம்முடைய வரலாற்றுக்கு ஒளி பாய்ச்சிய கல்வெட்டுகளில் ஒன்று அது.
”சதியபுதூர் அதியமான் நெடுமான் அஞ்சி நீக்கிப்பளி” – அந்த கல்வெட்டில் இருந்த இந்த சின்ன வரிதான் மிகப் பெரிய வரலாற்றுச் சிக்கலைத் தீர்த்து வைத்தது. அதியமான் பரம்பரை பற்றியோ, அவன் காலம் பற்றியோ தெரியாமல் இருந்த நிலைக்கு அந்த கல்வெட்டுதான் முற்றுப் புள்ளி வைத்தது..
– க. குழந்தைவேலன், தொல்லியல் ஆய்வாளர்