கோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டது! அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்! ஆனால், மூன்று நாட்களில் அதை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து,தெளிவான திட்டமிடுதலுடனும், கட்டுப்பாடுகளுடனும் திறந்து விட்டிருக்கலாமே! கொரோனா வைரஸ் என்பது ஓரிடத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் உயிர் வாழாது என்பது அனைத்து மருத்துவர்களும் கூறுவதுதானே! அதனால்தான் கொரானா வந்ததால் வீட்டை விட்டே யாரும் காலி செய்து போய்விடுவது இல்லை!
அப்படி இருக்க இரண்டரை மாதங்களுக்கும் மேலாக கோயம்பேடு சந்தையை மூடி வைக்க வேண்டிய தேவைதான் என்ன?
295 ஏக்கரில் பரந்து,விரிந்த, முறையாக திட்டமிட்டு கட்டப்பட்ட கோயம்பேட்டை மூடி விட்டு திருமழிசை, மாதவரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற இடங்களில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் அலைக்கழிப்பது நியாயம்தானா?
ஒவ்வொரு நாளும், இதனால் பத்து முதல் பதினைந்து கோடி ரூபாய் வரை பெரு நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. டன் கணக்கில் காய்கறிகளும்,பழங்களும் மலர்களும் வீணாகி குப்பையில் கொட்டப்படும் செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வருகின்றன!
இவற்றை இவ்வாறு குப்பையில் கொட்டவா விவசாயி கஷ்டப்பட்டு கடனை,உடனை வாங்கி விளைவித்தான்? பல கோடி மக்கள் வருமானம் இல்லாமல் பசித்துக் கிடக்க இப்படி யாருக்கும் பயனின்றி விரயமாவதைப் பார்த்தால் உண்மையிலேயே ரத்தம் கொதிக்கிறது..!
இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கூட சிந்திக்காத, செயலில் இறங்காத ஒரு ஆட்சியை நாம் பெற்றுள்ளோம்! கொரோனா ஏற்படுத்தும் அழிவுகளைக் காட்டிலும், ஆட்சியாளர்களால் ஏற்படும் அழிவுகள் பல மடங்காக உள்ளது!
கோயம்பேடு மார்க்கெட்டை ’கெட்ச்’ போட்டு வேறு எந்த காரணத்திற்கு பயன்படுத்தலாம் யாருக்கு தாரை வார்த்து என்ன லாபம் ஈட்டலாம் என்ற ஒரு பேச்சு அதிகார மட்டத்தில் அடிபடுவதாக அறிய வந்தேன்! இதை விட அயோக்கியத்தனம் வேறு இல்லை!
துணை முதல்வர் திரு. ஒ.பி.எஸ்சை, வணிகர் சங்கத்தினர் சந்தித்துப் பேசி வந்து நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ஆகவே சமூகத்தின் அனைத்து தளத்தினரும் கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
முதலில் ஒரு அடிப்படை செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். கோயம்பேடு சந்தை என்பது ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய, மாறுதலான சந்தை வளாகம். இதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு! 1777 ல் கொத்தவால் என்ற பிரிட்டிஷ் அதிகாரியால் சென்னை பிராட்வேயில் ஐம்பது ஏக்கரில் உருவான கொத்தவால் சாவடி 1980 களில் பிதுங்கி வழிந்து, நெருக்கடியானதைத் தொடர்ந்து 1996 ல் மிக அழகாக நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டதே கோயம்பேடு சந்தை.
எதை எடுத்து வந்தாலும் இங்கே விற்க முடியும் என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு தர முடிந்த ஒரே மார்க்கெட் இந்தியாவிலேயே கோயம்பேடு தான்!
தமிழகத்தின் மூலைமுடுக்கு மற்றும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா..என பல மாநில விவசாயிகளும் தாங்கள் விளைவித்த எதையும் அவர்கள் கோயம்பேட்டுக்கு கொண்டு வந்தால், வெறுங்கையோடு அது அவர்களை அனுப்பியதே இல்லை!
வாழைப்பழம் என்று எடுத்துக் கொண்டால் கூட சுமார் முப்பது வித வாழைப் பழங்களை வாங்க முடிந்த ஒரே சந்தை இதுதான்! இந்த நம்பிக்கையை ஒரு சந்தை பெற எடுத்துக் கொணட காலக்கட்டம் அதிகம்! அதை நொடியில் வேறு சில ஆதாயத்திற்காக சிதைத்து விடாதீர்கள்!
கோயம்பேடு மூடப்பட்டதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
முதற்காரணம், அதிரடியாக நான்கு நாட்கள் கண்டிப்பான ஊரடங்கை ஏப்ரல் 26 முதல் அரசு அறிவித்ததும், அதைத் தொடர்ந்து முந்தின தினம் கோயம்பேட்டில் நிலவிய வரலாறு காணா நெருக்கடியும்தான்! அதிலும் 18 வாயில்கள் கொண்ட மார்க்கெட்டின் 16 வாயில்களை பூட்டி விடும்படி எந்த முட்டாள் அதிகாரியோ ஆணையிட, இன்னும் கூடுதலான சிரமத்திற்கு ஆளாயினர் மக்களும்,வியாபாரிகளும்! அப்புறம் நேரக்கட்டுப்பாடுகளை திணித்ததும் நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.
கோயம்பேடு நெருக்கடியை குறைக்க நினைத்திருந்தால் அங்கு மொத்த வியாபாரத்தை மட்டும் அனுமதித்திவிட்டு சில்லறை வியாபாரத்தை முற்றிலும் தவிர்த்தல் ஒன்றே போதுமானதாக இருந்திருக்கும்!
ஏனெனில்,பாதிக்கு மேற்பட்ட கூட்டம் இதன் மூலமாகவே தடுக்கப்பட்டிருக்கும். இந்த புரிதல்கள் எல்லாம் அங்குள்ள வியாபாரிகளிடம் விலாவாரியாக பேசியதில் நான் உணர்ந்தவையே!
கோயம்பேடு மார்க்கெட்டை பலவாறாக பிரிக்க முடியாது! வேறு இடங்களில் எத்தனை புதிய சந்தைகளையும் தேவைக்கு ஏற்ப உருவாக்கட்டும்! அது பல வகையிலும் நல்லதே! ஆனால்,கோயம்பேட்டை அப்படியே விட்டுவிட வேண்டும்! அதை எக் காரணம் கொண்டும் சிதைத்துவிடக் கூடாது! ஏனெனில், இன்னொரு கோயம்பேடு உருவாக முடியாது!
ஆம்,இது கால பரிமாணாத்தில் சிறுகச் சிறுக கட்டமைக்கப்பட்டுத் தான் ஆசியாவின் மாபெரும் மார்கெட் எனும் அந்தஸ்த்தைப் பெற்றது!
ஆகவே, விரைந்து கோயம்பேடு சந்தையைத் திறந்து,விவசாயிகளும், வியாபாரிகளும் நஷ்டமடைவதையும்,உணவு பொருட்கள் வீணாவதையும் தவிர்க்க வேண்டும்.
– சாவித்திரி கண்ணன்