மனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து..
ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில் மட்டும் இல்லாமல் பொருள்களிலும் சொந்தம் ஏற்பட்டது. வாரிசு உருவானது. சமூகம் ஏற்பட்டது.
அனைத்திலும் மனிதன் சிறந்தவன்; மேலானவன் என்றும் அனைத்தும் இவன் கட்டுப்பாட்டின் கீழ் என்று நினைத்தான். வலியவன் எளியவனைத் துன்புறுத்தினான்; இருப்பவன் இல்லாதவனைக் கொடுமைப்படுத்தினான். இம் மனிதனை யார் கட்டுப்படுத்துவது? மனிதனைக் கட்டுக்குள் வைக்க அனைத்து வல்லமையும் படைத்தவன் தேவைப்பட்டான். கட்டுக்கு அடங்காத, கட்டுப்படுத்த முடியாத மனிதனுக்கு உள்ளேயே கட்டுப்பாட்டை வளர்க்க முடிவு செய்தான். இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கினான். அனைத்து வல்லமையும் படைத்தது என்று கூறினான். எல்லோரையும் கண்காணிக்கும் என்று உருவகம் செய்தான். இவ்வாறாக மனிதனால் கடவுள் உருவாக்கப்பட்டார்.
பின் மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளிடம் சரணடைந்தான். தன்னிடம் இருந்த அனைத்து சக்திகளையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதி அடைந்தான். அனைத்துப் பொறுப்பும் கடவுளுக்கே என்று ஆகியது. இல்லாதது என்றும் வர முடியாது. வராவிட்டால் நம்பிக்கை ஏற்படாது. வராது என்பது உறுதி ஆனால் பயம் போய்விடும். எனவே எப்படி கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது என்று மீண்டும் சிந்தித்தான். மனசாட்சி உருவானது; உருவாக்கப்பட்டது. இவ்வாறாக மனம், மனசாட்சி இரண்டும் செயல்பட தொடங்கின.
ஒன்றைச் செய்பவனுக்கும் மனசாட்சி உண்டு; செய்யத் தூண்டுபவனுக்கும் மனசாட்சி உண்டு; கண்டிப்பவனுக்கும் மனசாட்சி உண்டு; கண்டிக்கப் படுபவனுக்கும் மனசாட்சி உண்டு. எனவே அனைவருக்கும் மனசாட்சி உண்டு. ஒரு செயல் நடக்கிறது என்றாலும், நடக்கவில்லை என்றாலும் அனைவரின் மனசாட்சியும் தொடர்பு கொண்டு இருக்கிறது.
கடவுள் உருவானார்; அனைத்து வல்லமையும் பெற்றார். காலச் சக்கரம் சுழன்றது. நான், எனது, பந்தம், பாசம், விருப்பு, வெறுப்பு, காழ்ப்பு, கோபம், பகை, துரோகம், ஏளனம், நம்பிக்கை, ஏமாற்றம், விரக்தி, இழப்பு, வெற்றி, தோல்வி, லாபம்,நட்டம், ஆத்திரம், சாமர்த்தியம், பலம், பலவீனம் என்று பலப்பல உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. அனைவரும் அனைத்தையும் அப்போதே பெறத் துடித்தார்கள். போட்டி, போராட்டம் ஏற்பட்டது. மீண்டும் உறுதி இன்மை தலை தூக்கியது. கடவுள் உதவிக்கு வரவில்லை. நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அஞ்சினான். புத்திசாலியான் மனிதன் விடுவானா? தன்னால் தோற்றுவிக்கப்பட்டது அழிவதை ஏற்றுக் கொள்வானா? மாட்டான். பயத்தை உண்டு பண்ணினான்.
சடங்குகளை ஏற்படுத்தினான். சடங்குகளை நடத்தி வைப்பவர்கள் தோன்றினார்கள். அவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால் விபரீதங்கள் எற்படும் என்று அச்சுறுத்தினான். மூட நம்பிக்கைகள் பரப்பப்பட்டன. பீதி கிளப்பப்பட்டது. இன்று தப்பித்தாலும் நாளை அனுபவிப்பாய் என்றான். நாளை தப்பித்தால் நாளை மறுநாள் என்றான். அப்படியும் தப்பித்தால் என்றாவது ஒருநாள் என்றான். இந்த பிறவி விட்டால் அடுத்த பிறவியில் அனுபவிப்பாய் என்றான். உன் சந்ததிக்குப் போய்ச் சேரும் என்றான்.
கூட்டம் என்பது சமூகமாக மாறியது. இடம் ஊராக மாறியது. என் இனம், என் ஊர் என்றான். அடையாளம் தேவைப்பட்டது. மதம் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை, வழிபடும் முறைகளை, சடங்குகளைப் பின்பற்றுகிறவர்கள் குறிப்பிட்ட மதமானார்கள். அவனால் ஏற்படுத்தப்பட்டது, அவனை விட முதன்மை ஆக்கப்பட்டது. காலச் சக்கரம் மேலும் சுழன்றது. சிற்சில மாற்றங்களுடன் புதிய மதங்கள் தோன்றின. புதிய கடவுள்கள் தோற்றுவிக்கப்பட்டன. மனிதனிடம் உள்ள இந்த புத்திசாலித்தனம்தான், புத்திசாலித்தனத்தின் தொடர்ச்சிதான் கடவுள் உருவாக்கங்கள் ஆகும். அந்த கடவுள்தான் அவனை கட்டுக்குள் வைத்து இருக்கிறது. எது ஒன்று கட்டுக்குள் வைத்து வாழ வைக்கிறதோ அதை கடவுள் என்று சொல்கிறான். எனவே கடவுள் என்பது மனிதனிடம்தான் இருக்கிறது.
கடவுளின் படைப்பிலேயே சிறந்தது, மனிதன் என்று நம்பிக்கையாளர்கள், மத குருமார்கள் கூறுகிறார்கள். ஆனால் மனிதனின் படைப்பிலேயே சிறந்தது, கடவுள் என்பேன் நான்.
– மனநல மருத்துவர் மா. திருநாவுக்கரசு