பேராசிரியர் அ. மார்க்ஸ் தமிழ்நாட்டின் முதன்மையான சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர். அரசுக் கல்லூரி ஆசிரியர் போராட்டச் செயல்பாடுகளுக்காக ஓராண்டு ஊதிய உயர்வு வெட்டு, பத்து ஆண்டுகளில் ஆறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் ஆகியவற்றை எதிர்கொண்டவர். எந்த ஒன்றின் மீதுமான இவரது விமர்சனப் பார்வைகள் மக்கள் நடுவே கவனம் பெற்று வருபவை ஆகும். மதச்சார்பின்மையின் பக்கம் நின்று மனித உரிமைகளுக்காக செயல்படுபவர். 2000 இல் மாநிலக் கல்லூரிக்கு பணிமாறிய பிறகும், பணி ஓய்வுக்குப் பிறகும் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறார். எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என சுறுசுறுப்பாக இருக்கும் இவருக்கு அமலா, ஞானபாரதி என்று இரண்டு மகள்கள். இவர்களில் ஞானபாரதி, இதழியலில் ஆர்வம் கொண்டவர். குறும்படங்கள் இயக்கம் தவிர விளம்பரப் படங்களையும் இயக்கி வருகிறார். தனது முதுகலைப் படிப்பில்நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சமூக களப்பணியில் இருக்கும் பேரா. அ. மார்க்ஸ் அவர்களால் தங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த முடிந்தது? குழந்தைகளாக இருக்கும்போது, தங்களிடம் பேரா. மார்க்ஸ் எந்த மாதிரியாக அக்கறை செலுத்தினார்? அவரிடம் இருந்து தாங்கள் கற்றுக் கொண்டவை என்ன என்பவை குறித்து மகிழ்ச்சியுடன் ஞானபாரதி கூறியபோது,
”அப்பாவுக்கு நான், அக்கா அமலா இரண்டு பொண்ணுங்கதான்.எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தார். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனறு கட்டுப்பாடுகள் எதையும் விதித்தது கிடையாது. அவ்வளவு அன்பாக இருப்பார். என்னுடைய படிப்புக்கு அப்பா சொல்லிக் கொடுத்து உதவினார் என்று சொல்ல முடியாது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அவரது அரசியல் ஈடுபாட்டின் மற்றும் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சார்பான போராட்டங்கள் காரணமாக அவரை பல கல்லூரிகளுக்கு இட மாற்றம் செய்து கொண்டு இருந்தார்கள். எனவே அவர் வீட்டை விட்டுப் பிரிந்து வேறுவேறு இடங்களில் இருந்து வந்தார்.
ஆனால் அவ்வப்போது படிப்பு தொடர்பாக ஊக்கப்படுத்துவார். நான் சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு மாணவியாகவே இருந்து இருக்கிறேன். நான் விரும்பும் பாடப் பிரிவை எடுத்துப் படிக்க அவர் தடை சொல்லவில்லை. அவருக்கு நான் இளங்கலையில் பொருளியலை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்த துறையைத் தேர்ந்து எடுத்து படிக்கச் சொன்னார். ஆனால் நான் ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை அவரிடம் சொன்னபோது, அதற்கு அவர் மறுப்பு சொல்லவில்லை. அப்பாவின் நோக்கம் எதுவானாலும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அதோட என் விருப்பத்தையும் மதிப்பார்.
அப்பாவிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடைய நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது, அவர்களிடமும் மகிழ்ச்சியாக் உரையாடிக் கொண்டு இருப்போம். நாங்கள் தஞ்சாவூரில் இருந்த போது, பள்ளி விடும் நேரத்தில் வந்து என்னை வந்து அழைத்துக் கொண்டு போய் குலோப்ஜாமூன், ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். அதை எல்லாம் இன்றைக்கு நினைக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அவர் கோபமாக இருக்கிறார் என்றால் அது எங்களுக்கு தெரிந்து விடும். அவருடன் விளையாடி அந்த கோபத்தை போக்கடித்து விடுவோம். அப்பா தன் பிள்ளைகளுக்கு என்ன செய்யணுமோ, அதைச் சரியாகவே செய்தார். எனக்கு ஒரு அருமையான அப்பா கிடைத்து இருக்கிறார் என்று தோன்றும்.
ஆனால் குடும்ப பொறுப்புகளை அம்மாதான் பார்த்துக் கொள்வார்கள். வீடு கட்டும் பொறுப்பைக் கூட அம்மாதான் ஏற்றுக் கொண்டார்கள். கட்டுமானப் பொருள்களை வாங்கிக் கொடுப்பது முதல் கொத்தனார்களை மேற்பார்வை செய்வது வரை அம்மா திறமையாக பார்த்தார்கள்.
என் அக்கா பூப்பு எய்திய போது, வீட்டில் சில கட்டுப்பாடுகளை அவளை கடைப்பிடிக்க வைத்தார்கள். தனியே இருக்க வேண்டும்; யாரையும் தொடக்கூடாது; வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் அப்பா, கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். இதை எல்லாம் பார்த்து விட்டு, ”இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு..,எல்லா பெண்களுக்கும் பருவ வயதில இயற்கையாக நடப்பதுதானே! அதை எதற்கு சடங்காக மாத்துறீங்க” என்று கோபப்பட்டார். பிறகு எல்லோரும் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். நாங்க பெரிய பிள்ளைகள் ஆன பிறகும் கூட எங்களை மடியில் வைத்து கொஞ்சுவார்.
மார்க்சுக்கு (சில நேரங்களில் அப்பாவை மார்க்ஸ் என்று பெயர் சொல்லித்தான் குறிப்பிடுகிறார்) பெரியாரை, அம்பேத்கரை, கார்ல் மார்க்சை மிகவும் பிடிக்கும். அவர்கள் கொள்கைகளைப் பரப்புவதிலும் முன்னணியில் நிற்பார். தனிப்பட்ட முறையில் யாரையும் வெறுக்க மாட்டார். இவர் பார்ப்பன ஆதிக்கம் பற்றி பேசுகிறவர் என்றாலும் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீது வெறுப்பு காட்டி நாங்கள் பார்த்தது இல்லை. அதற்கு என் அக்கா திருமணமே ஒரு சான்று. என் அக்கா ஒரு மலையாள பார்ப்பனரை காதலித்தாள். அவரை திருமணம் செய்து கொள்ள அப்பா ஒரு எதிர்ப்பும் காட்டவில்லை. உறவினர்களிடம், அது அவளுடைய சுதந்திரம் என்று கூறி திருமணம் நடைபெற்றது. பிறப்பால் நாடார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெரியார் வழியிலேயே சுயமரியாதை, மனித நேயத்துடன் செயல்படுவோம்.
மார்க்சுக்கு பொதுவாக குழந்தைகளை ரொம்ப பிடிக்கும். பக்கத்து விட்டு குழந்தைகளை வரவழைத்து கொஞ்சிக் கொண்டு இருப்பார். மார்க்ஸ், தனக்கு ஆண் குழந்தைகள் இல்லையே என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இதற்கு அவருடைய ஆணும், பெண்ணும் சமம் என்னும் கொள்கைகள் காரணமாக இருந்து இருக்கலாம்.
அவர் எங்ககிட்ட பாசத்தை மட்டும் காட்டவில்லை. எங்கள் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுவார். எங்களை சும்மாவே இருக்க மாட்டார். அடிக்கடி எதையாவது படித்துக் கொண்டே இருங்கள் என்பார். படிக்கப் படிக்கத்தான சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும் என்பார். அவருடைய இந்த வழிகாட்டல் காரணமாகத்தான் நான் ஊடகத் துறையிலும், அக்கா வழக்கறிஞராகவும் மிளிர முடிகிறது.
அவருக்கு இசை மிகவும் பிடிக்கும். எங்களையும் இசை கற்றுக் கொள்ள அனுப்பினார். நாங்கதான் பாதியிலேயே விட்டுவிட்டு வந்து விட்டோம். ஆனா, நானும் அக்காவும் இசை நிகழ்ச்சிகளில் நிறைய நாட்டுப்புறப் பாடல்களை பாடி இருக்கிறோம். எங்களை பேன்ட், சட்டை போட்டுக் கொள்ளுங்கள், வசதியாக இருக்கும் என்பார்.
விடுமுறைக் காலங்களில் ஊட்டி, ஆனைமலை, கொடைக்கானல் என்று அழைத்துச் சென்று மகிழ வைப்பார். அவ்வப்போது நண்பர்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களை அறிமுகப்படுத்தி வைப்பார். இதனால் எங்கள் குடும்பத்தின் நட்பு வட்டம் மிகவும் பெரியது. அவர் பேசச் செல்லும் கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்வார்.
இன்றைக்கு நாங்கள் பெரியவர்களாக வளர்ந்து விட்டாலும், அவருடைய அன்பான வழிகாட்டல் எங்கள் வளர்ச்சிக்கு தொடர்ந்து துணையாக இருக்கிறது. சிக்கல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றலையும் பெற்று இருக்கிறோம். இன்றும் மனித உரிமைகளுக்காக களமாடிக் கொண்டிருக்கும் அவரை நினைக்கும் போதெல்லாம் எங்களுக்கு பெருமிதம் ஊற்றெடுக்கிறது” என்கிறார்.
– பவளக்கொடி