நமக்கு என்னதான் இந்த கல்வி முறையின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், மன நிறைவு இல்லாவிட்டாலும் நமது குழந்தைகள் இந்த கல்வி முறையில்தான் படித்து முன்னேற வேண்டி இருக்கிறது. நமக்கு, வீட்டுப் பாடங்கள் தேவை இல்லை; மதிப்பெண்களை விட அறிவு வளர்ச்சிதான் முதன்மையானது என்ற எண்ணங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் இன்றைய சூழலில் நடைமுறைப்படுத்த முடியாது. எனவே வீட்டுப் பாடங்களை பிள்ளைகள் ஆர்வத்துடன் செய்யவும், நிறைய மதிப்பெண்கள் பெறவும் ஊக்கப்படுத்துவதே அவர்கள் நல்ல வாய்ப்புகளை, குறிப்பாக மேற்படிப்புகளில் விரும்பும் கல்வி நிறுவனங்களில், குறைந்த செலவில் இடம் பெற உதவும்.குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?
இதோ சில நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வழிகாட்டுதல்கள். இவை அப்பா, அம்மா இருவருக்குமே பயன்படும்.
- இப்போது பெரும்பாலான பெற்றோர் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, குழந்தைகளின் படிப்பு வளர்ச்சிக்கு அவர்களால் நிச்சயம் உதவ முடியும். அப்படியே நிறைய படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ”பெற்றோர் – குழந்தைகளின் உறவு முறைதான் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது. பெற்றோரின் கல்வித் தகுதி அல்ல” என்பது அனுபவசாலிகளின் கருத்தாக இருக்கிறது.
- குழந்தையின் வீட்டுப் பாடத்தில் உதவுவதற்கு, அவர்களை படிக்க வைப்பதற்கு பாடநூல், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்கள்தான் தேவை. குச்சி, பிரம்புகள் போன்றவை தேவை இல்லை. தொடையில் கிள்ளுதல், தலையில் குட்டுதல் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.
- வீட்டுப் பாடங்களைச் செய்ய உங்கள் குழந்தைக்கு உதவுங்கள். நீங்களே செய்யாதீர்கள். ”நாம இப்போ உன்னோட வீட்டுப் பாடங்களை செய்யலாமா?” என்று கேட்பதற்கு பதிலாக, ”இது உன்னுடைய வீட்டுப் பாடங்களை செய்ய வேண்டிய நேரம். வா, செய்து முடிப்போம்” என்று அழைத்து உட்கார வையுங்கள்.
- குழந்தைகளுடன் ஒரு போதும் விவாதம் செய்யாதீர்கள். அல்லது நாம் சொல்வதை அப்படியே ஏற்றாக வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். விவாதம் செய்வதற்கு பதில் விளக்கமாக எடுத்து உரைக்கப் பழகுங்கள். விவாதத்தை விடவும் புரிய வைத்தலே அதிக பயன் அளிக்கும்.
- உங்கள் குழந்தை படிப்பில் கொஞ்சம் பின்தங்கி இருந்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றங்களை குழந்தையிடம் கொஞ்சமும் காட்டாதீர்கள். விமர்சனமும் செய்யாதீர்கள். மாறாக, எப்படி எல்லாம் குழந்தையின் ஆற்றலை மேம்படுத்தலாம் என்று ஆராய்ந்து, அது குறித்த நூல்களைப் படித்து முயற்சி செய்யுங்கள். மனப்பாடம் செய்யும் ஆற்றலை வளர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுங்கள். நம்முடைய கல்வி முறை என்பது இன்றளவும் பெரும்பாலும் மனப்பாடத்தைச் சார்ந்தே உள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் பெற அதுதான் உதவுகிறது.
- குழந்தைகளுக்கு இலக்கு நிர்ணயித்துக் கொண்டு செயல்படும் நுட்பத்தைக் கற்றுக் கொடுங்கள். அந்த இலக்குகளை அடைய கால வரையரை வைத்து சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு உதவுங்கள்.
- வாழ்க்கை என்பது தெரிந்தோ, தெரியாமலோ ஒப்பிட்டுப் பார்த்தலிலும், நம்முடைய அளவு கோலுக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது. நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒரு போதும் ஒப்பிடாதீர்கள். அந்த இனியாவைப் பார், இளங்கோவைப் பார் என்கிற மாதிரி பேசவே பேசாதீர்கள். அது குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்பதோடு அந்த குழந்தைகளுடன் ஆன உறவிலும் உளவியல் சார்ந்த சிக்கலை ஏற்படுத்தும்.
- குழந்தை மீதான உங்கள் எதிர்பார்ப்பு நியாயமானதாக இருக்கட்டும். ஏனெனில் உங்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து, குழந்தையின் செயல்பாடு அதை விடக் குறைவாக இருந்தால் ஏமாற்றம் ஏற்படக் கூடும்.
- சட்டாம்பிள்ளை மாதிரி அடிக்கடி கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டே இருக்காதீர்கள். கட்டுப்பாடுகளுக்கு உள்ளேயே இருந்தால் அவர்களின் படைப்பாற்றலும், சொந்தமாக சிந்தித்து செயல்படும் ஆற்றலும் வளராது. அவர்களால் தனித்தே இயங்க முடியும் என்பது போன்ற செயல்களில் அதற்கான வாய்ப்பைக் கொடுங்கள். அவர்களின் தன்னம்பிக்கையை இது வளர்க்கும்.
- கல்வி தொடர்பான அவர்கள் தேவைகளை நிறைவேற்ற தயங்காதீர்கள். ஒரு பேனாவையோ, பென்சிலையோ தொலைத்து விட்டால், அதை சற்றும் பெரிது படுத்தாதீர்கள். அலப்பறை செய்யாமல் அன்புடன் மீண்டும் வாங்கிக் கொடுங்கள், தொலைக்காமல் பார்த்துக் கொள் என்று நட்புடன் சொல்லுங்கள்.
- குழந்தையின் முதல் நண்பர்கள் அப்பாவும், அம்மாவும்தான். அதைத் தவிர நல்ல நண்பர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். ஆண், பெண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர ஊக்கப் படுத்துங்கள். அவர்களிடம் நீங்களும் நன்றாகப் பழகுங்கள். காலம் முழுவதும் அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்களாகத் தொடரும் வாய்ப்பு உருவாகும்.
- பிள்ளைகள் வளர வளர அவர்களை நீங்கள் வேலை பார்க்கும் பணி இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் பார்க்கும் வேலை அல்லது தொழில் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுங்கள். வங்கிக்கு அழைத்துச் செல்லுங்கள். வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுங்கள். சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். பணத்தின் அருமை பற்றிக் கற்றுக் கொடுங்கள்.
- கொஞ்சம் வளர்ந்த உடன், அதாவது எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு வரும்போது சமுதாய நிலவரம் பற்றிப் பேசுங்கள். நாட்டில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வு பற்றிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமக்கு மேலானவர்களும் யாரும் இல்லை; நமக்கு கீழானவர்களும் யாரும் இல்லை என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையின் நியாயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
- உங்கள் நல்ல நண்பர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். அவர்கள் வீடுகளுக்கு வாய்ப்பு நேரும்போது அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைகள் ஏதாவது ஆலோசனை வேண்டுமானால் அவர்களிடமும் பேசலாம் என்று நம்பிக்கை ஊட்டி வையுங்கள். உறவினர்கள் வீடுகளுக்கும் அவ்வப்போது அழைத்துச் செல்லுங்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா அழைத்துச் செல்ல மறக்காதீர்கள்.
மிகவும் இன்றியமையாத ஒன்று, பாடப் புத்தகங்கள் தவிர அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் பிற புத்தகங்களையும் படிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே ஏற்படுத்துங்கள். இதற்கு புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும்படியான நூல்களை வாங்கிக் கொடுங்கள். புத்தகக் காட்சிகள் நடைபெறும்போது, தவறாமல் அங்கே அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பகுதியில் நூலகங்கள் இருந்தால், அங்கே சென்று நூல்களைப் படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
– காத்தவராயன்