மினிமலிசத்தைப் பரப்பும் ஜோஷுவா, ரயான்
இன்றைய தலைமுறையினர் எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ரி அபார்ட்மென்ட் எனஎல்லாம் இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சியை அவர்கள் அடைகிறார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை அடைய முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர்தான் ஜோஷுவா ஃபீல்ட்சும் (Joshua Fields), ரயான் நிகோடெமெசும் (Ryan Nicodemus). வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில்,எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்த்துகிறார்கள்.
மகிழ்ச்சி என்பது தேவை அற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதிலும், தேவை அற்ற செலவுகளைச் செய்வதிலும் இல்லை என்பதை புரிந்து கொண்ட நொடியில் `மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.
இன்று நம்மைச் சுற்றி கண்ணை மூடிக் கொண்டு செலவுகளைச் செய்யும் பழக்கம் பெருகி விட்டது.கிரடிட் கார்டுகளும், டெபிட் கார்டுகளும் இந்த எரியும் தீயில் எண்ணெய் வார்க்கின்றன. தமிழ் நாட்டில் பணவியல் வல்லுநர் திரு. ஆனந்த சீனிவாசன் மினிமலிச வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார ஆலோசனைகளை தொடர்ந்து கூறி வருகிறார். கடனுக்காவது பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்தை உடைக்க முயன்று வருகிறார்.
2009 தொடங்கி மினிமலிச (Minimalism) வாழ்வை வாழும் ஜோஷூவாவும், ரியானும், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிச வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். நூல்கள், ஆவணப்படங்கள், வலைப்பதிவுகள் என மினிமலிசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி!
மினிமலிசம் என்றால் மிகவும் சிக்கனமாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள்.எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை.
‘மினிமலிசம்’ என்பது தேவையானவற்றுடன் அளவாக வாழ்வது. அப்படி என்றால் தேவை அற்ற நுகர்வு இருக்கிறதா? அது என்ன தேவை இல்லா நுகர்வு?
நடந்து போகிற தூரத்திற்கு காரில் செல்வது! , எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து ஐஃபோன் வாங்குவது!, இரண்டு பேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக் கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என தேவை இல்லாமல் வாங்கிக் குவிக்கிற, பயன்படுத்துகிற எல்லாமே தேவை இல்லா நுகர்வுதான்!
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும் கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல எடுத்திக்காட்டு. கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்று வரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். `தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’ என்கிறார் பஃபெட். அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிச வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும்.
மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன?
ஜோஷுவாவே 5 விஷயங்களை எழுதி இருக்கிறார்.
1 – பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல்
மினிமலிச வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
2 – குறைவான பொருள்களில் வாழ்வது வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்.அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும். 3 வருங்காலத்திற்குத் திட்டமிடல் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டு வைப்பது. 4 ஒவ்வொரு பர்ச்சேசையும் கேள்வி கேட்பது எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்கு முன், இது எனக்கு இப்போது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும் வாங்குவது 5 அடுத்தவர்களுக்கு வழங்குவது உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர்களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா. பள்ளிக் கூடங்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது, உரியவர்களின் கல்விக்கு உதவுவது போன்றவற்றைச் செய்யலாம். இங்கே நடிகர் திரு.சூர்யா அப்படிச் செய்து கொண்டு இருக்கிறார்.
இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும். கூடவே குறைந்த செலவில் மனநிறைவான வாழ்வை வாழவும் உதவும்.
குறைந்த தேவைகளுடன் ஆன வாழ்க்கை என்றால் என்ன?
ஒருவர் எதை அடைய விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது இது. ஆனால் முதன்மை குறிக்கோள் அனைத்து இன்றி அமையாத தேவைகளுடன் மட்டுமே வாழ்வது ஆகும். மினிமலிச மனநிலையை அடைய நீங்கள் தயாரா?
ஒரு மினிமலிஸ்ட்டைப் போல சிந்திக்கத் தொடங்க நீங்கள் செய்ய வேண்டியவற்றின் பட்டியல் முடிவற்றது. விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
– த. செந்தமிழ்ச் செல்வன்