நீங்கள் போண்டி ஆக வேண்டுமா? உங்களுக்கு கை கொடுக்கிறது, ஆன்லைன் ரம்மி

பணம் வைத்து சீட்டு விளையாடுவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும் போது, ஆன்லைன் சூதாட்டம் மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கிறது. சதுரங்க வேட்டை திரைப்படத்தில், ‘ஏமாற்றுவதற்கு முன் அவர்கள் பேராசையைத் தூண்டி விட வேண்டும்’ என்ற உரையாடலுக்கு ஏற்ப, பேராசையைத் தூண்டும் விளம்பரங்களை இணையத்திலும், தொலைக் காட்சிகளிலும் செய்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வலை வீசி வருகின்றன. அறிவுடன் சிந்திப்பவர்கள் இவர்கள் வலையில் மாட்டுவது இல்லை. சாதாரண வீட்டு இளைஞர்களை மாடலாக வைத்து, அவர்களுக்கு மேக்அப் கூட போடாமல்  ‘நான் இவ்வளவு சம்பாதித்தேன்; அவ்வளவு சம்பாதித்தேன்’ என்று போலியாக விளம்பரம் செய்து, மக்களிடம் இருக்கும் பணத்தை ஆன்லைன் மூலம் சுருட்டுவதில் கில்லாடிகளாக செயல்படுகிறார்கள். இவர்கள் யார், எந்த முகவரியில் இருந்து செயல்படுகிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல கட்சிகளும், இயக்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்களும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். அவர் இதுபற்றிக் கூறும் போது,

Advertisement

”இணையத்தின் மூலம் ஒரு விபரீதம் கொடி கட்டிப் பறக்கிறது – அதுதான் ஆன்லைன் ரம்மி என்னும் போதையூட்டும் விளையாட்டு. இதில் ஈடுபட்டு பணத்தைத் தொலைத்தவர்கள், தொலைப்பவர்கள் நாளும் அதிகரித்து வருகின்றனர்.

அனுபவக் காயம் பட்ட திருச்சியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், ‘ஒரு தடவை விளையாடிட்டீங்கன்னா…. அப்புறம் அது உங்களை உள்ள இழுத்துடும். ரம்மி ஒரு மிகப் பெரிய அடிக்‌ஷன். ஒரு நாள் அதில் அப்படி என்னதான் இருக்கிறதென பார்ப்போமே என இணைந்தேன்.   நமது கணக்கில் பணம் போட்டவுடனே வரும் முதல் ஆட்டம், நல்லா ஜெயிப்பது போல் வரும். ஆர்வத்தில் தொடர்ந்து விளையாடினால் அவ்வளவுதான். எல்லா பணமும் போய் விடும் 

இந்த விளையாட்டில் உங்களுடன் விளையாடுவது யார் என்பது உங்களுக்குத் தெரியாது.  ‘ஏதாவது ஒரு ஆட்டத்தில், நீங்க நூறோ, இருநூறோ ஜெயிச்சீங்கன்னா தொடர்ந்து வர்ற பல ஆட்டங்கள்ல உங்களுடைய பணம் போய்க் கொண்டே இருக்கும். ஜெயிக்கவே முடியாது. இது மிகவும் தந்திரமாக கம்யூட்டரால் புரோகிராம் செய்யப்பட்டு நம்மோடு விளையாடும் ஒரு மென்பொருள் ஏமாற்று வேலை ஆகும்‘’’ என்கிறார்.

இதில் சூழ்ச்சி என்னவென்றால், இதில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று போலிப் பதிவுகளை அந்த நிறுவனங்களே போட்டு பார்ப்பவர்களின் பேராசையைத் தூண்டுகிறார்கள்.  நிறைய பணத்தை அள்ளி விடலாம் என்று ஆன்லைனில் ரம்மி விளையாடத் தொடங்கியவர்கள் பலர், வாழ்நாள் சேமிப்பை இழந்தும், கடனில் சிக்கித் தவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பணம் செலுத்தி விளையாடக்கூடிய ஆன்லைன் ரம்மியால், பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியானா எனப் பல மாநிலங்களில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் மாநில அரசுகளால் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு இறுதிவரை பல மேல்முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு  தடைசெய்யப்படவில்லை.

இதனைத் தடை செய்வதுதான் மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு அடையாளம். அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் இதனை வலியுறுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தி உள்ளார். அரசு தடை செய்கிறதோ இல்லையோ, தங்கள் பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த ஆன்லைன் ரம்மியை எட்டிக் கூட பார்க்காமல் இருப்பதே புத்திசாலித் தனம் ஆகும். அல்லது நீங்கள் போண்டி ஆவது நிச்சயம்.

– இன்பக்கனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here