உயிர்கள் தானாக உருவாகின; கடவுளால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லி மதத்தின் ஆட்சியை ஐரோப்பாவின் பொதுத் தளத்தில் இருந்து அகற்றியவர், சார்லஸ் டார்வின். டார்வினின், ‘மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான்’ என்ற முழக்கமும் உயிர்களின் பரிணாமக் கொள்கையும் (உயிர்படி மலர்ச்சிக் கொள்கை – Evolution) பலருக்கும் தெரிந்த செய்தி. குறிப்பாக உயிரியல் படித்தவர்கள் இவற்றை நிச்சயம் அறிந்து இருப்பார்கள்.
ஆனால் அந்த அறிவியல் கொள்கைகள் உருவம் பெற்ற விதம், அந்த கொள்கைகளை அவர் வெளிப்படுத்த டார்வின் சந்தித்த சிக்கல்கள், மதத் தலைமைகள் கொடுத்த நெருக்கடிகள் பெரும்பாலானோருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. உண்மையில் அவர் கொஞ்ச காலம் பாதிரியாராகவும் இருந்தவர். 1809 ஆண்டில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த டார்வின், தனது டாக்டர் படிப்பை பாதியில் விட்டுவிட்டு கிறிஸ்தவ பாதிரியார் ஆனார்.
உலகம் சுற்றுவதில் ஆர்வமாக இருந்த டார்வின், தனது நண்பரான எச்எம்எஸ் பீகில் என்ற கப்பலின் கேப்டன் உடன் அவர் கப்பலில் பயணித்தார். இந்த கப்பல் பயணம்தான் டார்வின் ஆராய்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது. கப்பல் கேலாபகாஸ் தீவுப் பகுதிக்கு சென்றபோது டார்வின் சிந்தனை ஒரு விஷயத்தில் தரை தட்டி நின்றது.
ஃபின்ச் என்று கூறப்படும் ஒரே குருவி இனத்தின் குருவிகள் நூறு மைல் இடைவெளியில் உள்ள இரண்டு பகுதிகளில் இரண்டு விதமான அலகுகளுடன் இருந்தன. பூச்சிகள் அதிகம் இருந்த பகுதிகளில் இருந்த குருவிகளின் அலகு நீளமாக இருந்தது. கொட்டைகள்தான் முதன்மையான உணவு என்று இருந்த இடங்களில் இருந்த குருவிகளின் அலகு, கொட்டைகளை உடைக்க ஏற்றதாக நீளம் குறைந்து, அகலமாக இருந்தது. உயிரினங்களில் சூழ்நிலைக்கேற்ற மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற உண்மையை டார்வின் அறிந்து கொண்டார்.
அந்த கப்பல் பயணம் முடிந்த உடனேயே தான் கண்டு அறிந்ததை கட்டுரையாக வெளியிட்டார். அதன் பிறகு மேலும் ஆராய்ச்சியில் இறங்கினார். அதிகமான சான்றுகளை சேகரித்தார். புறா வளர்ப்பவர்கள் தாங்கள் விரும்பும் இனத்தை எப்படி கொண்டு வருகிறார்கள் என்பதை ஆராய்ந்தார். புறாக்களின் எந்த இனம் எந்த இனத்துடன் கூடினால் நாம் எதிர்பார்க்கும் இனம் கிடைக்கும் என்று கணித்து செயல்படுவதன் மூலம் அதில் மனிதனே இனத் தேர்ச்சியை செய்கிறான். ஃபின்சுக்கு அதைச் செய்வது யார் என்ற வினா அவர் மனதுக்குள் பெரிதாக எழுந்தது. தொடர்ந்து இந்த வினாவுக்கான விடை தேடும் முயற்சியில் இருந்த பொது, தாமஸ் மால்தூஸ் என்பவரின், உலக மக்கள் தொகை பெருக்கம் பற்றிய கருத்து டார்வின் ஆராய்ச்சிக்கு உதவியது.
மக்கள் தொகை அதிகம் ஆவதால் உணவுத் தட்டுப்பாடு வரும். தட்டுப்பாடு வரும்போது கிடைக்கும் உணவுக்கு போட்டி வரும். அந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள்தான் உயிரோடு இருக்க முடியும் என்ற மால்தூசின் கருத்து டார்வின் சிந்தனையைத் தூண்டியது. உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கும் இதுவே தூண்டுதாலாக இருக்கக்ககூடும் என்று கருதினார்.
போட்டியைத் தாங்கும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் காணும் மரபணு (ஜீன்) தான் தன்னை தனது தொடர் சந்ததிக்கு இட்டுச் செல்கிறது. ஃபின்ச் குருவியைச் சான்றாக எடுத்துக் கொண்டால் பூச்சிகளே முதன்மை உணவாக இருக்கும் இடத்தில் நீளமான அலகைப் பெற உதவும் மரபணுதான் அடுத்த தலைமுறைக்கு செல்லும். அதே போல் கொட்டைகளே முதன்மை உணவாக இருக்கும் இடத்தில் அகலமான அலகுக்கான மரபணுதான் அடுத்த தலைமுறைக்கு செல்லும். சூழ்நிலையின் தேவையை சமாளிக்க முடியாத மரபணு பின்னுக்கு போகும், அல்லது அழிந்து விடும்.
தனது பல உறுதியான ஆராய்ச்சிகள் மூலம் உயிர்கள் தானாகவே தோன்றி, காலம் காலமாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று இருக்கும் நிலைக்கு வந்து உள்ளன என்ற முடிவுக்கு வந்தார். அந்த காலக் கட்டத்தில் கிறிஸ்தவ மதத் தலைமையும், மத நம்பிக்கைகளும் அதிகாரத்தின் அத்தனை தளங்களிலும், சமூகத்திலும் வேரூன்றி இருந்ததால் அவர்களுக்கு கசப்பு அளிக்கும் இந்த உண்மையைச் சொல்ல டார்வின் அஞ்சினார். அவரே பாதிரியாராக இருந்ததால் தனக்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு வரும் என்பதை அவரால் கணிக்க முடிந்தது. இப்படியே இழுத்தடித்து இருபது ஆண்டுகளை ஓட்டினார்.
திடீரென தென் கிழக்கு ஆசியாவில் இருந்த ஆல்ஃப்ரட் ரசல் என்ற அறிஞர், உயிர்கள் தோன்றியது பற்றிய தனது கருத்துகளை வெளியிட்டார். அவை டார்வின் ஆராய்ச்சிகளை ஒட்டி இருந்தன. டார்வின் தனது ஆராய்ச்சி முடிவுகளையும், அவரது கொள்கை முடிவுகளையும் ஒரே மேடையில் வெளியிட்டார். எனினும் இருபது ஆண்டுகளாகளாக டார்வின் இது குறித்துப் பேசி வருவது பலருக்கும் தெரியும் என்பதால் இந்த கொள்கையின் பெருமை அவரையே சார வேண்டும் என்று அறிவியல் உலகம் தீர்மானித்தது.
தொடர்ந்து ஆராய்ச்சியில் மூழ்கினார், டார்வின். கிறிஸ்தவ மதக் கொள்கைகளை கேள்விக்கு உட்படுத்தும் இவருடைய ஆராய்ச்சி முடிவுகள் மதத் தளத்தில் புயல் எழுப்பிக் கொண்டு இருந்த அதே வேளையில், ‘மனிதனின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். 1871 ஆம் ஆண்டில் வெளியான அந்த புத்தகத்தில்தான், ‘மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான்’ என்ற புகழ் பெற்ற அறிவியல் கொள்கை வெளியானது.
மனிதனின் தோற்றம் பற்றிய பைபிளின் விளக்கத்தையே நம்பி இருந்தவர்களுக்கு அதிர்ச்சியும், குழப்பமும் மேலிட, மதத் தலைமைகள் இவர் மேல் பாய்ந்தன. கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த சமயத்தில் இன்னொரு பாதிரியாரான ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிரிகோரி மெண்டல் என்பவர் பட்டாணிச் செடிகளை ஆராய்ந்த கண்டு பிடித்த, குறிப்பிட்ட பண்புகள் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இவ்வாறு குறிப்பிட்ட பண்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செலுத்துவதை மரபுக் கூறுகள் என்று குறிப்பிடலாம் என்றும் அவர் கூறினார். அவர் கூறிய மரபுக் கூறுகள்தான் அதன் பின்னர் மரபணு(ஜீன்) என்று அழைக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியலும், அறிவியல் ஆய்வுகளும் பெரும் வளர்ச்சி கண்டன.1953 ஆம் ஆண்டு மரபணு பின்னல் கண்டு பிடிக்கப்பட்டது. இது டார்வின் கொள்கைகளுக்கு மேலும் வலு சேர்த்தது.
– சௌ. செந்தில்குமார்