பல ஆயிரம் கோடி புரளும் இந்திய திரைப்பட சந்தையில், தமிழ்த்திரைப்பட உலகின் பங்கு கணிசமானது. இந்தி, தெலுங்கு மொழிகளுக்கு அடுத்து அதிகமான திரைப்படங்கள் வெளியாவது தமிழில்தான். இத்துறையின் வியாபாரம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி.
தமிழ்த் திரைத்துறை வணிகம் எப்படி இருக்கிறது?
ஆரோக்கியமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். படம் முடிக்கப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றும் சுமார் நானூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இது தவிர, வெளிவருவதில் 10 சதவிகித படங்கள் மட்டுமே வருவாயை ஈட்டுகின்றன. 20 சதவிகித படங்கள் ஓரளவு வசூலை அளிக்கின்றன. மீதம் 70 சதவிகித படங்கள் போதுமான வசூலை அளிக்காமல் நட்டத்தையே ஏற்படுத்துகின்றன.
ஏன் இந்த நிலை?
முன்பு, தீபாவளிக்கு பத்து முதல் பதினைந்து திரைப்படங்கள் வெளியாகும். ஆனால் கடந்த (2019ம் ஆண்டு) தீபாவளிக்கு பிகில், கைதி என இரு படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 900 திரையரங்குகளில் 1110 திரைகள் (ஸ்கிரீன்ஸ்) உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்டவையில் பிகில் படமும், 300க்கும் மேற்பட்டவற்றில் கைதியும் வெளியாகின. ஆனால், இதர படங்களுக்கு திரையரங்கமே கிடைக்கவில்லை. இது போலவே அடிக்கடி ஏற்படுகின்றன. இதர சிறிய, மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள்தான் திரைத்துறையை வாழ வைக்கின்றன. அவற்றின் மூலமாகத்தான் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் வாய்ப்பு பெருகிறார்கள். பணச்சுழற்றியும் நடக்கிறது. அவை முடங்குவதால் திரைத்துறைக்கு இழப்புதான்.
குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவழித்து படம் எடுக்கக்கூடாது என்று வரையறை வைப்பது இதற்கு தீர்வாகுமா?
அப்படிச் செய்ய முடியாது. செலவழிப்பது அவரவர் உரிமை. அதே நேரம் அனைத்து படங்களுக்கும் வெளியாகும் வாய்ப்பை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் முன்பு 4500 திரையரங்கங்கள் இருந்தன. அப்போது வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின. ஆனால், 2010க்கு பிறகு 2017 வரை வருடத்திற்கு சுமார் 350 படங்கள் வெளியாகின. மொழிமாற்றுப் படங்களும், நேரடி வேற்றுமொழி படங்களும் வெளியாகின. கடந்த வருடமும், இந்த வருடமும் சற்று குறைவு என்றாலும் பொதுவாக நிறைய படங்கள் வெளியாகின்றன. அதே நேரம் பல படங்களுக்கு கூட்டம் வருவதில்லை. காரணம், மக்களுக்கு முன்பு திரையரங்கம் மட்டுமே பொழுதுபோக்கு இடமாக இருந்தது.
இப்போது அறிவியல் வளர்ச்சியால் இணையத்தில் படங்களைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள ஒரு வழி இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் 800 முதல் 1000 இருக்கைகள் உள்ள சுமார் 700 திரையரங்கங்கள் உள்ளன. இவற்றை 100 முதல் 200 இருக்கைகள் உள்ள சிறு திரையரங்குகளாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் பல்லாயிரம் திரையரங்குகள் உருவாகும். பல படங்களை வெளியிட வாய்ப்பு இருக்கும். இதனால் திரைத்துறையில் பணம் புரளும். ரசிகர்களுக்கும் பல படங்களை பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். திரைத்துறை செழிக்க இதுவே வழி. இதற்கு திரையரங்க உரிமையாளர்களும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், இப்படி சிறு திரையரங்குகளாக மாற்ற அரசிடம் பல்வேறு அனுமதிகளை பெற வேண்டி உள்ளது. ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கிடைத்தால் ஆயிரக்கணக்கான சிறு திரையரங்கங்கள் உருவாகும்.
திரையரங்குகளில் அதிக விலைக்கு திண்பண்டங்கள் விற்கப்படுவது, சுகாதாரம் இன்மை. ஆகிய காரணங்களாலும் மக்கள் திரையரங்கம் வருவதைத் தவிர்க்கிறார்கள் என்று ஒரு கருத்து உள்ளதே..
ஆமாம். பல திரையரங்குகளில் சுத்தம், சுகாதாரம் இல்லை. சில திரையரங்குகள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அங்கு பார்க்கிங் கட்டணமே பல நூறு ரூபாய் வாங்குகிறார்கள். உள்ளே திண்பண்டங்களின் விலையும் பல மடங்கு அதிகம். திரைத்தொழில் நசிவடைவதற்கு இதுவும் முக்கிய காரணம்.
அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களில் படங்கள் வெளியிடுவது, திரையரங்குகளுக்கு மக்கள் வருவதைத் தடுக்கின்றதா?
அப்படிச் சொல்ல முடியாது. திரையரங்கில் படம் வெளியாகி ஒரு மாதம் கழித்தே இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் படங்கள் வெளியாகின்றன. தவிர இவற்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கிறது.
திரைத்துறையில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது?
திரைத்துறை தொழிலாளர்களுக்கு என்று சங்கம் இருக்கிறது. இவர்கள், படப்பிடிப்புக்கு தேவையில்லா விட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்களை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், தேவையின்றி தயாரிப்பாளர்களுக்கு செலவு ஏற்பட்டது. ஆகவே பல தயாரிப்பாளர்கள் படம் தயாரிப்பதில் இருந்து விலகினர். புதிதாக வரும் பலரும் பின் வாங்கினர். இதனால், அந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்தது. அச்சங்கத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களில் 10 முதல் 20 சதவிகித தொழிலாளர்களுக்கே வேலை கிடைக்கிறது. இதை உணர்ந்து அண்மையில், 4 கோடி ரூபாய்க்கு கீழ் தயாரிக்கும் படங்களுக்கு எத்தனை தொழிலாளர்கள் வேண்டும் என்பதை தயாரிப்பாளரே முடிவு எடுக்கலாம் என்று கூறி இருக்கின்றனர். ஆகவே, ஓரளவு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங், பிராசசிங், ஒலிப்பதிவு போன்ற துறைகளில் புதிதாக வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா?
நிறைய இருக்கிறது. திரைப்பட தொழிற்சங்கத்தினர் விதிக்கும் கட்டுப்பாடு திரைப்பட படப்பிடிப்புகளுக்குத்தான். ஆனால், தற்போது கார்ப்ரேட் பிலிம்ஸ், ஆர்ட் பிலிம்ஸ், சோசியல் ஈவன்ட்ஸ், குறும்படங்கள், ஆவணபடங்கள் என பல்வேறு கலைப்படைப்புகள் ஆயிரக்கணக்கின் உருவாகின்றன. திருமணம் என்பது கூட திரைப்பட படப்பிடிப்பு போல நடக்க தொடங்கி விட்டன. ஆகவே ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, மிக்சிங் எடிட்டிங் போன்ற தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
இதற்கான படிப்பு குறித்து கூறுங்களேன்..
எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் இதற்கான பாடப்பிரிவுகள் உள்ளன. சுமார் 200 தனியார் கல்லூரிகளில் திரைத்துறை சார்ந்த படிப்புகள் பல உள்ளன.
இத்துறையில் ஈடுபட படிப்பு அவசியமா.. அல்லது இத்துறை சார்ந்தவர்களிடம் உதவியாளராக சேர்ந்து பிறகு தனியே பணி புரிவது நல்லதா?
துறை சார்ந்தவர்களிடம் உதவியாளராக இருந்து பிறகு தனியே பணிபுரிவதுதான் முன்பு நடந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. ஆகவே, குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பை முடித்து சிலகாலம் ஒருவரிடம் பணி புரிவது நல்லது. படிப்பு தொழில் நுட்ப அறிவைத் தரும். உதவியாளராக பணிபுரிவது கிரியேட்டிவிட்டியை அளிக்கும். எனவே, இரண்டும் அவசியம்.
– தமிழ் இனியா