Latest Posts

வங்கி மோசடிகளை குறைக்க

- Advertisement -

மத்திய நிதி அமைச்சர் வங்கிகளை இணைப்பதற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்ட சில நாட்களிலேயே, வேறொரு செய்தி வெளியாயிற்று. அதில் ஒவ்வொரு வங்கியிலும் நிகழ்ந்துள்ள மோசடிகளின் அளவைப் புள்ளி விவரமாகத் தந்திருந்தார்கள். அதை மேலோட்டமாகப் பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறதென்றால், மிகையில்லை.

அதுவும், கணினி நுழைவுக்குப் பின்னர் வங்கிக்குப் போகாமலேயே, பற்று அட்டையைக் கொண்டு தொகையும், கைபேசியை வைத்துப் பணப் பரிமாற்றமும் செய்கிற வசதி வந்தாலும் வந்தது, புதுப் புது மோசடிகள் வந்த வண்ணமிருக்கின்றன. செல்லில் வருகிற ஏதோ ஒரு குறுஞ் செய்தியை நம்பி அட்டையின் விவரங்களைத் தெரிவிப்பது, பொருட்களை கடன் அட்டை மூலம் வாங்கும்போது, கவனக் குறைவால் மூன்றாம் நபர், அட்டையின் பிரதியை எடுக்க வாய்ப்பு தருவது போன்ற தவறுகள் வாடிக்கையாளர்களின் அலட்சியத்தாலேயே நடக்கின்றன.

மேற்சொன்ன நிகழ்வுகளில் முக்கிய அம்சம் என்னவென்றால், 24 மணி நேரத்துக்குள்ளேயே இருப்புத் தொகையில் கணிசமான அளவு இல்லாமல் போய் விடுகிறது. மேலும், இத்தகைய குற்றங்களை அலசி விசாரணை செய்து, குற்றவாளியை கண்டுபிடிக்கப் பல மாதங்கள் — ஏன் சில ஆண்டுகள் கூட ஆகி விடுகின்றன. ஓரளவு பாதுகாப்புக்காகச் சில வங்கிகள் ரூ.10000க்கு மேலான தொகையை ஏடிஎம்மில் எடுப்பதற்கு, கைபேசியில் தெரிகிற ‘ஒரு முறை கடவு எண்ணை’ (ஓடீபி) குறிப்பிடும்படி, வலியுறுத்துகின்றன.

இன்னொரு வேதனையான அம்சம் என்னவென்றால், குற்றங்களின் தன்மை. குறிப்பாக நகைக் கடன்களில் மோசடி. 20, 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நகை மதிப்பீட்டாளருடன் “கூட்டு” சேர்ந்து போலி நகையை வைக்கும் அதிகாரிகளின் மோசடி மிகவும் அரிது. இப்போது சர்வசாதாரணமாக நிகழ்வது, மேலிடத்தின் கட்டுப்பாடு இல்லாமல் போவதைத்தான் குறிக்கும். செப்டம்பர் முதல் வாரம் சோளிங்கர் ஐஓபி கிளையைத் திறக்க விடாது, வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டது “நகைகள்” பணம் செலுத்தியும் கைக்குக் கிடைக்காததால்தான். (இச்செய்தி ஒரு நாளேட்டில் வெளிவந்தது).

இது எப்படி சாத்தியம் என்பதே புரியவில்லை. நகைகள், ரொக்கப் பணம் இவற்றை உள்ளே பாதுகாப்பான அறை அலமாரியில் (டபிள் லாக்) வைப்பதற்கு இரண்டு சாவிகள் தேவைப்படும். இவ்வி தமிருக்க, அந்த நகைகள் எப்படி “மாயம்” ஆகும்? 2017ல் நிகழ்ந்த குற்றத்தை விசாரித்து வருவதாக முக்கிய அதிகாரி தெரிவித்தவுடன்தான், வாடிக்கையாளர்கள் கலைந்து போனார்களென செய்தி தெரிவிக்கிறது. இத்தகையை மோசடிகள் வங்கிகளின் மீதுள்ள நம்பகத் தன்மையை குறைக்கவே செய்யும்.

நம்பத்தன்மையை குறைக்கிற மற்றொன்று – வாராக்கடன் வசூல். பெரும் பணக்காரர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் கடன்கள் இன்னும் வசூலாகவில்லை. கடவுச் சீட்டு பறிமுதல், சொத்துகள் முடக்கம், கோர்ட்டில் ஆஜர் போன்ற செய்தித் தலைப்புகள் படிக்க சுவை இருக்கின்றனவே தவிர, கடன் தொகையில் கொஞ்சம் கூட வசூலே ஆகவில்லை என்பதுதான் உண்மை. நிலைமை இவ்வாறு இருக்க ஓர் 20 லட்சம் கடன் வசூலில் வங்கி கெடுபிடி காட்டினால் குறிப்பிட்ட சிறு தொழிலதிபர் நிச்சயம் இழுபறி செய்யத்தான் செய்வார். “பெரிய கடன்களை, வசூல் பண்ணிவிட்டு எங்களிடம் வா” என்கிற வாதம் எடுபடாதுதான். ஆனால் வங்கிகளின் போக்கு சரியில்லை என்ற அவப்பெயர் சூழ்கிறதே?

போலி ஆவணங்களை அடமானம் வைத்துக் கடன் பெறும் தன்மைகளும் பெருகி வருகின்றன. நவீன ஜெராக்ஸ் வசதியில், அச்சு அசலாக மூலப் பத்திரம் போலவே ஆவணங்களைத் தயாரிக்க முடிந்தாலும், கையெழுத்தைக் கூர்ந்து நோக்கினால் தவறு புலப்படுமே?

ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால் எந்தக் குற்றத்துக்கும் (வாடிக்கையாளரின் அலட்சியம் நீங்கலாக) யாரோ வங்கி அதிகாரி பின்புலமாக இருக்கிறார் என்பது வெளிப்படை. பணம் புழங்கும் எந்த இடத்திலும் குற்றங்கள் நடப்பது இயல்புதான்.

தவிர்க்க இயலாதுதான். ஆனால் கோடிக் கணக்கில் பரிமாற்றம் செய்யும் பொது வங்கிகளின் மோசடிகள், சாதாரண மக்களின் நம்பிக்கையைக் குலைக்கக் காரணமாக அமைகிறது என்பதில் சந்தேகமேயில்லை.

இது போன்ற குற்றங்களைக் குறைக்க என்னதான் வழி?

முதலாவதாக ஆட்குறைப்பு என்ற பெயரில் சகட்டுமேனிக்கு கிளைகளில் ஊழியர்களை மாற்றக் கூடாது. விவசாயம், சிறு தொழில் போன்றவற்றில் டெக்னிக்கல் அம்சங்களைச் சீர் தூக்கி, ஆராய்ந்து கடன் வழங்கும் வல்லுயர்களின் எண்ணிக்கை உயர வேண்டும்.

இன்ஸ்பெக்ஷன் (ஆய்வு) துறையை, வெற்றி பெறாத மேலாளர்களின் கூடாரமாக ஆக்கக் கூடாது. இன்றைய கணினித் தன்மையை நன்கு புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படும் அதிகாரிகளை நியமித்தல் அவசியம்.

குற்றம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்டால், தொடர்புள்ள நபர்களுக்குத் தக்க தண்டனை தர வேண்டும். ஊழியர் சங்கமோ, அதிகாரிகளின் அமைப்போ குறுக்கிடக் கூடாது.

வாடிக்கையாளர்களுக்கு ‘கேஒய்சி’ இருப்பது போல ஊழியர்களுக்கும் ‘கேஒய்ஈ’ இருந்தால் நலம். நிழலான ஊழியர்களை அவ்வப்போது கண்காணிக்க வாய்ப்பு இருக்கும்.

வங்கித் துறைக்கு மிகவும் தேவையான ஒழுக்கம், நேர்மை போன்றவற்றை வலியுறுத்த சில சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யலாம்.

கணினி அறிவும், வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வும் மேலோங்கியிருக்கும் இந்த காலக் கட்டத்தில், குற்றங்களைக் குறைக்கப் பாதுகாப்பான தீவீர நடவடிக்கையை மேற்கொள்ளுவது மிக அவசியம். ரிசர்வ் வங்கியும், மைய அரசும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு தருவதும் தேவை.

– வாதூலன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news