ரிசர்வ் வங்கி துணை கவர்னராக மைக்கேல் பத்ரா நியமனம்

புதுடெல்லி

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக மைக்கேல் பத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு இவர் இந்த பொறுப்பில் இருப்பார்.

கடந்த 2017 ஜனவரியில் வீரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பொறுப்பேற்றார்.அவருடைய பணிக்காலம் முடிய 6 மாதங்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து துணை கவர்னர் பதவி காலியாக இருந்துவந்த நிலையில், தற்போது மைக்கேல் பத்ராவை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர் பணியில் சேருவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக உள்ள இவர் நிதிக் கொள்கை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். பொதுவாக இப்பொறுப்புக்கு வெளியில் இருந்து பொருளாதார நிபுணர்கள்தான் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்பு உர்ஜித் படேல் இப்பொறுப்பை வகித்தார். அதற்குப் பிறகு பத்ரா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 நிதிக் கொள்கை முடிவுகளில் ஆர்பிஐ கவர்னர் எடுத்த வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு பத்ரா ஆதரவாக வாக்களித்துள்ளார்.

துணை கவர்னர் பதவிக்கு இவரிடம் நிதி அமைச்சகம் நேர்முக தேர்வு நடத்தியது. நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமாரும் நேர்முக தேர்வை நடத்தினார். இவரது நியமனத்துக்கு பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐஐடி மும்பையில் பொருளாதாரத்துக்கான முனைவர் பட்டம் பெற்ற மைக்கேல் பத்ரா, முதுநிலை முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைகழத்தில் பெற்றார். ரிசர்வ் வங்கியில் 1985-ம்ஆண்டு இணைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here