ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்து வரி செலுத்தும் ஒவ்வொரு வணிகரும் (சில குறிப்பிட்டவர்கள் தவிர) சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 44-ன் படி தங்களின் ஒரு ஆண்டுக்கான மாதம்தோறுமான மற்றும் காலாண்டு விற்பனை தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து படிவம் ஜிஎஸ்டிஆர் – 9 -ல் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஒரு ஆண்டுக்கான ரிட்டர்ன் படிவ மாதிரியை (Annual Return) அறிக்கை எண் – 39/2018 (மத்திய வரி) மூலமாக 04-09-2018 அன்று நடுவண் அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த படிவம் யாருக்கு பொருந்தாது?
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற பின்வருபவர்கள் ஆண்டுப் படிவம் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.
1. வரி உள்ள வெளி வழங்கல் செய்யும் தற்செயல் வணிகர்கள்.
2. உள்ளீட்டு சேவை வழங்கும் விநியோகிப்பாளர்கள்.
3. வரி விதிக்கத்தக்க வெளிவழங்கல் செய்யும் இந்தியாவில் வசிக்காத வணிகர்கள்.
4. பிரிவு 51 -ன் படி வரிப் பிடித்தம் செய்து வரி செலுத்தும் வணிகர்கள் அல்லது சேவை வழங்குநர்கள். இது நடுவண் அரசின் அறிக்கை எண் – 51 (மத்திய வரி) 13-09-2018 படி 01-10-2018 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
5. பிரிவு 52 -ன் படி வரி சேகரித்து (டிசிஎஸ்) வரி செலுத்தும் இ-காமர்ஸ் ஆப்பரேட்டர்கள் ஆண்டு ரிட்டர்னை படிவம் ஜிஎஸ்டிஆர் -9 – ஙி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த படிவத்தை இதுவரை நடுவண் அரசு வெளியிடவில்லை.
பிரிவு – 52 நடுவண் அரசு அறிக்கை எண் : 51 (மத்திய வரி) 13-09-2018 படி 01-10-2018 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?
ஒரு நிதி ஆண்டுக்கான ரிட்டர்ன் படிவம் அடுத்த ஆண்டுக்குள்ளோ அல்லது டிசம்பர் 31 அன்றோ தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, 2017-18 நிதி ஆண்டுக்கான (01-07-2017 முதல் 31-03-2018 வரை) ஆண்டு ரிட்டர்ன் படிவம் 31-12-2018 அன்றோ அதற்கு முன்ன தாகவோ தாக்கல் செய்யப்பட வேண்டும். 01-04-2017 முதல் 30-06-2017 வரை உள்ள விற்பனை விவரத்தை இந்த ஆண்டு ரிட்டர்ன் படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.
ஆண்டு ரிட்டர்ன் படிவங்களின் வகைகள்:
படிவம் ஜிஎஸ்டிஆர் – 9
படிவம் ஜிஎஸ்டிஆர்-1,2,3 தாக்கல் செய்து வரி செலுத்தும் வணிகர்கள் அனைவரும் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் 9-A
இணக்க வரி (காம்போசிசன் வரி) செலுத்தும் எல்லா வணிகர்களும் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் 9-B
ஒரு நிதி ஆண்டில் படிவம் ஜிஎஸ்டிஆர் – 8 தாக்கல் செய்த இ காமர்ஸ் ஆப்பரேட்டர்கள் அனைவரும் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் 9-C
ஒரு நிதி ஆண்டின் விற்பனை இரண்டு கோடி ரூபாயைத் தாண்டினால், அவர் படிவம் ஜிஎஸ்டிஆர் 9-C- ஐ தாக்கல் செய்ய வேண்டும். இவருடைய கணக்குகள் ஒரு ஆடிட்டரால் (சிஏ அல்லது ஐசிஏஐ) தணிக்கை செய்யப்பட வேண்டும். இதன் நகல் ஏற்கெனவே செலுத்தப்பட்ட வரி, தணிக்கை செய்யப்பட்ட பின் செலுத்த வேண்டிய வரி பற்றிய அறிக்கை ஆகியவற்றை படிவம் படிவம் ஜிஎஸ்டிஆர் 9-C உடன் இணைக்க வேண்டும்.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிஎஸ்டி பதிவு எண்கள் பெற்று இருந்தால், ஒவ்வொரு பதிவு எண்ணும் ஒரு தனி ஆளாக கருதப்படும். ஆகவே ஒவ்வொரு பதிவு எண்ணுக்கும் தனித்தனியாக ஆண்டு விற்பனை வருமான படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
தண்டத் தொகை
ஆண்டு விற்பனை வருமான படிவத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால், பிரிவு 46-ன் படி பதினைந்து நாட்களுக்குள் படிவத்தைத் தாக்கல் செய்யுமாறு பதிவு பெற்றவருக்கு அறிக்கை வழங்கப்படும்.
படிவம் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால், அவ்வாறு எத்தனை நாட்கள் தாமதம் ஆனதோ, அத்தனை நாட்களுக்கும் நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் (சிஜிஎஸ்டி ரூ.100+எஸ்ஜிஎஸ்டி ரூ.100) வீதம் தண்டம் விதிக்கப்படும். ஐஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தண்டம் விதிக்கப்படாது. அதிகபட்ச தண்டத் தொகையாக ஆண்டு விற்பனை வருமானத்தின் மீது 0. 50%-க்கு மிகாமல் (சிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 25% + எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 25%) தண்டம் விதிக்கப்படும். சிஜிஎஸ்டி சட்டம் பொதுப்பிரிவு 125 படி ரூ.25,000 வரை தண்டம் விதிக்க முடியும். தாமத கட்டணத்துடன் ஆண்டுக்கு 18% வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
படிவத்தை திருத்த முடியுமா?
ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 44/விதி 40 ஆகிய இரண்டிலும் ஆண்டு விற்பனை வருமான படிவம் தாக்கல் செய்த பின் அதை திருத்தம் செய்வது குறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஆகவே ஆண்டு விற்பனை வருமான படிவம் தாக்கல் செய்தால் அதுவே இறுதியானது. அதில் எந்த மாறுதலும் செய்ய முடியாது.
ஆண்டு விற்பனை வருமான தகவல்கள்
படிவம் ஜிஎஸ்டிஆர் – 9, ஆறு பகுதிகளாகவும் 19 அட்டவணை களாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த படிவத்தில் கொடுக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
பகுதி – 1 : வரி செலுத்துபவர் பற்றிய பின்வரும் அடிப்படை விவரங்களைக் கேட்கும் தன்மையில் இருக்கும்.
> நிதி ஆண்டு, ஜிஎஸ்டி பதிவு எண், பதிவு செய்துள்ளவரின் சட்டப்பூர்வமான பெயர், பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனத்தின் பெயர்.
இந்த விவரங்கள், ஏற்கெனவே பதிவு செய்து இருப்பதால், தானாகவே ஆன்லைனில் இருந்து தோன்றும்.
பகுதி- 2 : நிதி ஆண்டில் தெரிவிக்கப்பட்ட வெளி வழங்கல், உள் வழங்கல் பற்றிய விவரங்கள். இது அந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட கீழ்க்கண்ட விற்பனை வருமானங்களின் சுருக்கத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் எடுக்கப் பட்டதாக இருக்கும்.
> பதிவு பெறாத வணிகர்களுக்கு செய்யப்பட்ட வெளிவழங்கல் (B2C)
> பதிவு பெற்றவர்களுக்கு செய்யப் பட்ட வெளிவழங்கல் (B2B)
> வரி செலுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வழங்கல் (சிறப்பு பொருளாதார மண்டல வழங்கல் தவிர)
> வரி செலுத்தி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு செய்யப்பட்ட வழங்கல்
> கருதப்பட்ட ஏற்று மதிகள்(Deemed Export)
> பெறப்பட்ட முன் பணத்துக்கு வரி செலுத்திய பின்னும் விலைப் பட்டியல் (டேக்ஸ் இன்வாய்ஸ்) எழுப்பப்படாமல் இருந்தால் அதைப்பற்றிய விவரம்.
> எதிரிடை வரி (ரிவர்ஸ் சார்ஜ்) செலுத்த வேண்டிய உள்வழங்கல்.
மேற்கண்டவற்றின் மொத்த தொகையில் வரவு குறிப்பு (கிரடிட் நோட்) தொகையைக் கழித்து பற்றுக் குறிப்பு (டெபிட் நோட்) தொகையைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மாத படிவத்தில் திருத்தங்கள் (அமெண்ட்மென்ட்) இருப்பின், அதாவது வழங்கலோ அல்லது வரியோ கூட்டியோ, குறைத்தோ இருந்தால் அத்தகவலை தெரிவிக்கலாம். இறுதியாக வழங்கல் மற்றும் முன்பணத்தின் மீது செலுத்த வேண்டிய வரியைக் குறிப்பிட வேண்டும்.
Also read:காம்போசிஷன் வரிப் படிவங்கள்
வரி செலுத்தத் தேவையில்லாத வெளிவழங்கல் மற்றும் வரி பற்றி அந்த நிதி ஆண்டில் பின்வரும் தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும்-
> வரி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெளிவழங்கல்.
> வரி செலுத்தாமல் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட வழங்கல்.
> பெறுபவர் எதிரிடை வரி அடிப்படையில் செலுத்த வேண்டிய வரி.
> வரியற்ற வழங்கல், வரிவிலக்கு பெற்ற வழங்கல் மற்றும் ஜிஎஸ்டி இல்லாத வழங்கல்.
மேற்கண்டவைகளின் மொத்த தொகையில் கிரடிட் நோட் தொகையைக் கழித்து டெபிட் நோட் தொகையைக் கூட்டி தெரிவிக்க வேண்டிய தொகை.
> வரி செலுத்தத் தேவையற்ற மொத்த தொகை மற்றும் முன்பணம் உட்பட்ட மொத்த விற்பனை வருமான தொகை.
பகுதி – 3 : நிதி ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மாதாந்திர படிவங்களில் தெரிவிக்கப்பட்ட மொத்த உள்ளீட்டு வரி விவரங்கள் –
> படிவம் ஜிஎஸ்டிஆர் – 2 கி மூலமாக பெறப்பட்டு மொத்த உள்ளீட்டு வரி வரவு (அட்டவணை 3 & 5 விவரம் தானாகத் (Auto Populated) தோன்றும்.
> 2017 – 18 நிதி ஆண்டில் உள்வழங்கல் பெறப்பட்ட ஏப்ரல் 2018 முதல் செப்டம்பர் 2018 வரை பெறப்பட்ட உள்ளீட்டு வரிவரவு. (இதில் இறுக்குமதி மற்றும் எதிரிடை உள்ளீட்டு வரி வரவு இதில் சேராது). சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட சேவை மீதான உள்ளீட்டு வரி வரவை சேர்த்துக் கொள்ளலாம்.
> மேற்கண்ட இரண்டுக்கும் உள்ள உள்ளீட்டு வரி வரவில் உள்ள வேறுபாட்டுத் தொகை.
> உள்ளீட்டு வரி வரவு இருந்து அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அதைப் பற்றிய விவரம்.
> உள்ளீட்டு வரி வரவு இருந்து, ஆனால் பெறத் தகுதியற்ற வரி வரவு.
> இறக்குமதி மீது செலுத்தப்பட்ட ஜஜிஎஸ்டி பற்றிய விவரம் (சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட உள்வழங்கல் உட்பட) இறக்குமதி மூலம் பெறப்பட்ட ஐஜிஎஸ்டி வரவு தானாகத் திரையில் தோன்றும்.
> ஐஜிஎஸ்டி செலுத்தியதற்கும், பெறப்பட்ட தொகைக்கும் உள்ள வேறுபாடு.
> இறக்குமதி செய்யப்பட்ட பொருள் மீது பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவு.
பகுதி – 4 : சென்ற நிதி ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட படிவங்கள் படி செலுத்தப்பட்ட வரி விவரம்.
> ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, செஸ், தாமதக் கட்டண வட்டி, தண்டத் தொகை, மற்றும் வேறு ஏதேனும் வரி செலுத்த வேண்டி இருந்தால், அது பற்றிய விவரம். இதில் செலுத்தப்பட்ட செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு, உள்ளீட்டு வரி மூலம் நேர் செய்யப்பட்ட சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் எவ்வளவு என்பது தொடர்பான மொத்த தொகைகளை தனித்தனியாக தெரிவிக்க வேண்டும்.
பகுதி – 5 :
> நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல், 2018 முதல் செப்டம்பர், 2018 வரை சென்ற நிதி ஆண்டுக்கான நடவடிக்கைகள் பற்றி தாக்கல் செய்து இருந்தால், அதற்குரிய வரி வருமானம், செலுத்த வேண்டிய சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் பற்றிய விவரம்.
> திருத்தம் செய்யப்பட்டதால் செலுத்த வேண்டிய வரி, செலுத்திய வரி ஆகியவற்றை சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, செஸ் மற்றும் வட்டி எவ்வளவு என்பதை தனித்தனியாக தெரிவிக்க வேண்டும்.
பகுதி – 6 : (பிற தகவல்கள்)
> திரும்பப் பெற வேண்டிய மொத்த வரி, அனுமதிக்கப்பட்ட வரித் திருப்பம் (ரீஃபண்ட்), அனுமதிக்கப்படாத வரித் திருப்பம், கிடைக்கப் பெறாமல் இருக்கும் மொத்த திருப்பத் தொகை.
> கோரப்பட்ட மொத்த வரி, செலுத்தப்பட்ட வரி, செலுத்தப்படாமல் இருக்கும் மீதி வரி.
> இணக்க வரி (காம்போசிசன் வரி) செலுத்துவோர் மூலம் பெறப்பட்ட வழங்கல், பொருள் வழங்கலாகக் கருதப்படும் (பிரிவு 143 படி). ஒப்புதல் அடிப்படையில் பொருள் வழங்கப்பட்டு, பொருள் திரும்பப் பெறாதது பற்றிய விவரம்.
> எச்எஸ்என் கோட்-படி பெறப்பட்ட உள்வழங்கல், அனுப்பப்பட்ட வெளிவழங்கல் ஆகியவற்றின் மொத்த தொகை, எண்ணிக்கை, வரி விகிதம், அதற்குரிய சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் பற்றிய விவரம்.
> சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி சட்டங் களின் கீழ் செலுத்த வேண்டிய, செலுத்திய தாமதக் கட்டணம் பற்றிய விவரம்.
இறுதி படிவம் : ஆண்டு விற்பனை வருமான படிவமும், இறுதி படிவமும் ஒன்றா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இறுதி விற்பனை வருமான படிவம் ஜிஎஸ்டிஆர் – 10 என்பது ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்தவரின் பதிவு நீக்கப்பட்டாலோ, பதிவை திரும்ப ஒப்படைத்தாலோ தாக்கல் செய்ய வேண்டும். மற்றவர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. இந்த படிவம் நீக்கம் செய்யப்பட்ட அல்லது திரும்ப ஒப்படைத்த மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
– சு. செந்தமிழ்ச்செல்வன்