Latest Posts

சமூக ஊடகங்கள்

- Advertisement -

சமூக ஊடகங்கள் நம் அனைவரின் வாழ்க்கையையும் ஒரே புரட்டாகப் புரட்டிப் போட்டு விட்டது.


ஒவ்வொரு தனி நபருக்கும் தனித் தனியான உலகத்தை அது உருவாக்கிக் கொடுத்து விட்டது. அந்த மெய்நிகர் உலகில்தான் இன்றைய புதிய தலைமுறை உலகம் சுற்றிச் சுழன்று கொண்டு உள்ளது. இந்தக் கற்பனைக் குதிரையின் காலடியோசையில் தான் இங்கு ஒவ்வொரு காலைப் பொழுதுகளும் புலர்ந்து கொண்டிருக்கின்றன…


எல்லைகளற்ற உலகம்…
தகவல் தொழில் நுட்ப உலகமானது அதன் ஒவ்வொரு மைக்ரோ நொடியிலும் தன்னை மென்மேலும் புதுப்பித்த வண்ணமாய் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. அதன் பாதையும், பயணமும் நம்முடைய வழக்கமான எட்டுத் திசைகளையும் எண்ணாயிரம் திசைகளாகப் பிரித்து விட்டது.


நமது அன்றாடப் பொழுதுகள் ஒவ்வொன்றும் அந்த எண்ணாயிரம் திசைகளின் ஊடாக மிக லாவகமாய் ஊடுருவிச் சென்று கொண்டே இருக்கின்றன. இந்த அதிநவீன மற்றும் அதிவிரைவுத் தொழில் நுட்பங்கள் கொண்ட இணைய வெளி உலகமானது, நமது வழக்கமான காலம் சார்ந்த சமன்பாடுகளை எல்லாம் ஒரு சில நிமிடச் சிமிழ்களுக்குள் சிறை பிடித்து விட்டது.


குறிப்பாக, தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்கள் நம்முடைய ஒவ்வொரு மணி நேரத்தையும் செய்திகளாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இணைய வெளி உலகமானது, நம் ஒவ்வொருடைய நொடிகளையும் செய்திகளாக மாற்றிக் கொண்டே முன் செல்கிறது. இதனால் சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் பல முரண்பாடுகள் உருவாகி வருகின்றன. அதே போன்று, இந்த அதிவிரைவுத் தன்மையானது ஒவ்வொரு தனி மனிதனையும் கடுமையாக பாதிக்கிறது.


இன்றைய தேதியில் சர்வதேச சமூகத்தையும் தலை குனிய வைத்து உள்ள ஒரே கருவி இந்த ஸ்மார்ட் ஃபோன்கள்தான். ஆம்! உலகெங்கிலும் உள்ள ஆன்ட்ராய்டு பயனாளர்கள் அனைவருமே குனிந்த தலை நிமிராமல் தங்களின் செல்போன் களுடன் தான் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்கள், போக்குவரத்து வாகனங்கள், நடக்கும் சாலைகள் – என எல்லா இடங்களிலும் இவர்களில் சிலர் தலை குனிந்த படியே செல்வதால் சில நேரங்களில் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள், அல்லது சிக்கலை உருவாக்குகிறார்கள்.


உற்பத்தித் திறன்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மனித நேரங்கள் மணிக் கணக்கில் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே பல நிறுவனங்களில் செல்பேசிகளைப் பயன் படுத்த அனுமதிப்பது இல்லை.
கல்விக் கூடங்களில் உள்ள மாணவ- மாணவியர்கள் தங்களின் படிப்புகளை எல்லாம் மறந்து விட்டு இந்த செல்ஃபோன்களே கதி எனக் கிடக்க ஆரம்பித்து விட்டார்கள்.


இன்றைய படித்த மக்கள் திரும்பப் பெற முடியாத தங்களின் நேரத்தையும், காலத்தையும் இப்படி மணிக்கணக்கில் தேய்த்து வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


அதிலும், வாட்சாப் போன்ற செயலிகளில் வெட்டி அரட்டைகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அதே போல முகநூல் பக்கங்களில், குனிந்தால் ஒன்று நிமிர்ந்தால் மற்றொன்று என நொடிக்கு ஒரு போஸ்ட்டிங்கைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.


இது போதாதென்று டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், மெசஞ்சர் என்ற ஏகப்பட்ட சிற்றரசர்கள் வேறு அவ்வப்போது இவர்கள் மீது படையெடுத்து வந்து விடுகின்றனர்.


இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இவர்களின் பொழுதுகள் எல்லாம் வீணில் வடிந்து கொண்டிருக்கின்றன. காலம் மட்டுமா வீணாகிறது? கையில் உள்ள இருப்பும் சேர்ந்தே கரைகிறது. ரீசார்ஜ், நெட் பேக், என பணம் காற்றில் கரைகின்றது. இதை எப்படிச் சமாளிப்பது என யாருக்கும் விடை தெரியவில்லை.


இப்பொழுதெல்லாம் வணிக நிறுவனங்கள் ஆட்களை வேலைக்குச் சேர்க்கும் பொழுதே ஒரு கட்டுப்பாட்டை விதித்து விடுகிறார்கள். பணி நேரத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அது.


அந்த அளவுக்கு இந்த செல்ஃபோன்களின், குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களின் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. இந்த செல்ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்களால் நமக்கு இழப்புகள் மட்டும்தான் ஏற்ப்படுகிறதா ? ஏன் இதில் எந்த வகையான நன்மைகளும் கிடையாதா? என்ற நியாயமான கேள்விக்கான பதில் இதோ –
”ஒரு நவீன கண்டுபிடிப்பின் நன்மையும், தீமையும் அதனை பயன் படுத்தும் நம் கையில்தான் உள்ளது.”

-ஷரீப். அஸ்கர் அலி, பள்ளப்பட்டி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news