கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் சம்பளம், வீட்டு வருமானம் என அதிக விவரங்களை ITR எனும் வருமான வரிப் படிவம்1 இல் நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக சம்பளம் வாங்குபவர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டு உள்ள படிவம்16 -இல் இவை அனைத்தும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். படிவத்தை எவ்வாறு நிரப்புவது?
முதலில் அடிப்படை சம்பளமும், அகவிலைப்படியும் சேர்த்து முழுவதற்கும் வரி செலுத்த வேண்டும். அதனால், அவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
போக்குவரத்துக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1600 அல்லது ஆண்டிற்கு ரூ.19200 இந்த தொகைக்கு மேல் பெற்று இருந்தால் அதனை வருமானமாகக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வீட்டு வாடகை. இதற்கென தனிக் கணக்கீடு உள்ளது. அதன்படி கணக்கிட்டு அதற்கு மேல் உள்ள தொகையை வருமானமாக எடுத்து கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் இருந்து பெறப்படும் விடுமுறைக்கால பயணச் செலவு முழுவதும் வருமானமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இலவச குடியிருப்பு நமக்கு வழங்கப்பட்டு இருந்தால், நம் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சேர்ந்த தொகையில் குறைந்த பட்சம் 7.5 சதவிகிதம் கணக்கிட்டு வருமானமாக கணக்கில் கொள்ளவும். நிறுவனம், தங்களின் நிறுவனப் பங்குகளை ஊழியர்களுக்கு விலை இல்லாமல் வழங்கி இருந்தால் பங்குகளின் அன்றைய சந்தை விலையைக் கணக்கிட்டு வருமானமாக எடுத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் இருந்து வட்டியில்லா கடன் பெற்று இருந்தால் அந்த கடனுக்காக வட்டி ரூ.20,000 -க்கு மேல் வந்தால் அந்த கூடுதல் தொகை வருமானமாக கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
ரூ. 5000 -க்கு மேல் மதிப்பு உள்ள பரிசுப் பொருள் கிடைத்து இருந்தால் அதை வருமானமாகக் கணக்கில் கொள்ள வேண்டும். இவ்வாறு கணக்கிட்ட மொத்த வருமானத்தில் பிரிவு 16 இன் படி அனுமதிக்கப்பட்ட கழிவுகளை கணக்கில் கொள்ளவும். முதலில் தொழில் வரியை (Professional Tax) கழித்துக் கொள்ளவும். அடுத்ததாக வருமான வரிச்சட்டம் 80சி இன்படி வருங்கால வைப்பீடு, பிடித்தங்கள், ஆயுள் காப்பீடு பிரிமியம் செலுத்துதல் போன்றவைகளை அதிக பட்சம் ரூ. 1,50,000 வரை கழித்து கொள்ளவும்.
சொந்த வீடாக இருந்தால் வீட்டு வாடகை வருமானம் 0 என எடுத்துக் கொண்டு வீட்டின் பேரில் கடன் வாங்கி இருந்தால் அதற்கான வட்டி தொகையை ரூ.2 இலட்சம் வரை சம்பள வருமா னத்தில் கழித்துக் கொள்ளலாம். வாடகைக்கு விடப்பட்டு இருந்தால் வாடகை வருமானத்தில் வீட்டு வரி போக மீதியை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கணக்கிடப்பட்ட வீட்டு வாடகை வருமானத்தில் 30 சதவிகிதம் தொகையும், வீட்டிற்கு கடன் வாங்கியிருந்தால் அதற்கான வட்டித் தொகையையும் கழித்து நிகர வருமா னத்தை கணக்கிடுங்கள்.
பணிபுரியும் ஒருவரின் மொத்த வருமானம் கழிவுகள் எல்லாம் கழித்தது போக ரூ2.5 இலட்சமாக இருந்தால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. ரூ2.5 இலட்சம் முதல் ரூ. 5 இலட்சம் வரை இருந்தால் 5 சதவிகிதம், ரூ.5 இலட்சம் முதல் ரூ10 இலட்சம் வரை இருந்தால் 20 சதவிகிதம் ரூ 10இலட்சத்திற்கு மேல் எனில் 30 சதவிகிதம் வருமானவரி செலுத்த வேண்டும்.
இந்த படிவத்தை நிரப்பி வருமானவரி செலுத்துவதாக இருந்தால் அதனை செலுத்தி, அல்லது நாம் பணிபுரியும் நிறுவனம் நம் சம்பளத்தில் பிடித்து செலுத்தியிருந்தால் அதனை படிவம் 26 ஷி இல் உள்ளவாறு குறிப்பிட்டால் நாம் செலுத்த வேண்டியது, அல்லது கூடுதலாக பிடிக்கப்பட்டு இருந்தால் நமக்கு திரும்ப வர வேண்டியது எவ்வளவு என காண்பிக்கும். Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் இதனை வருகின்ற 31.07.2018 – க்குள் வழங்க வேண்டும்.
-குப்பன்