சுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது!

ஒரு நாட்டின் பொருளாதார வெற்றி என்பது திட்டமிடும் தன்மையால், அதைச் செயல்படுத்தும் திறமையால் உருவாவது ஆகும். ஆனாலும் மிக வறுமையால் போராடிக் கொண்டு இருந்த நாடு ஒன்று, இன்று உலக அளவில் சீரான நிதி முதலீடுகளை ஈர்த்து, அதைப் பாதுகாப்பாக வைத்து இருந்து, திரும்பக் கொடுப்பதற்குமான கட்டணத்தையும் தற்போது வசூலிக்கின்றது.


அத்தகைய சீரான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு சுவிட்சர்லாந்துதான். குளிர் நாடான சுவிட்சர்லாந்தில் 1934 ஆம் ஆண்டு வரை மின்சார வளர்ச்சியோ, நீர் ஆதாரங்களோ, போதிய போக்குவரத்து வசதிகளோ ஏற்படவில்லை. தாங்க முடியாத குளிரின் தாக்குதல் வேறு.


புதிய வங்கிப் பொருளாதாரம் :


1934 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில்தான் சுவிஸ் அரசு ‘வங்கி ரகசியம் பேணுதல்’ என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. முதலாம் உலகப் போர் உருவான கால கட்டமும் அதுதான். தன் நாட்டின் வறுமையுடன் போராடி அதை விரட்டுவதுதான் தலையாயப் பணி என்று இருந்த சுவிஸ் அப்போது நடுநிலை வகித்தது.


அந்த நம்பிக்கையின் பலன்தான் இன்று சுவிஸ் நாடு பெற்றுள்ள சரிவற்ற தொடர் பொருளாதார வளர்ச்சி. அப்படி அக்காலக் கட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதியை சுவிஸ் நாடு, பல புதிய முதலீடுகளில் போட்டது. சிறப்பாக நிர்வகித்தது.


திராட்சையில் இருந்து ஒயின் தயாரிப்பு குடிசைத் தொழிலாக வளர்ச்சி பெற்றது. அப்போது தொடங்கப்பட்ட சுவிஸ் கைக்கடிகாரம், ஒயின் இரண்டுமே உலகின் வரவேற்பு மிக்க சந்தையைப் பெற்றன. பற்றாக்குறை பட்ஜெட்டுகளையே பார்த்து வரும் நமக்கு இது ஒரு வியப்பான செய்தி. ஆண்டு நிதி நிலை அறிக்கையில் துண்டு விழாத நாடு சுவிஸ். பட்டதாரிகள் மூலமாக தொழில் கல்வியை அது மேம்படுத்தியது.


அத்தகைய தொழிற் கல்வியின் வழியாக, செய்முறைப் பயிற்சிகளின் மூலம் விஞ்ஞானிகள், தொழிலாளர்களை திட்டமிட்டு உருவாக்கியது. வெவ்வேறு தொழிற்சாலைகள் ஆரம்பிக்க முன்வருவோரை ஊக்குவித்தது. முதலீடுகள் தொழில்சார் முதலீடுகளாக செய்யப்படும் போது, அந்த நிதியின் விரைந்த வளர்ச்சிக்கான ஆக்கப் பூர்வமான சலுகைகள் அனைத்தையும் வழங்கியது. பின் சுவிஸ் தொழிற்சாலைகளின் நாடாக உருவெடுத்தது. தொழில் வளமும் பண வளமும் கொண்ட நாடாகவும் பரிணமித்தது.


பொருளாதாரப் பார்வை:


2009 ஆம் ஆண்டில் பணமதிப்பு அதிகரித்த போது, சீனாவைப் போல் செயற்கையாக மதிப்பைக் குறைத்தது. உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்கியது. உற்பத்தி வரியை 5% ஆகக் குறைத்து தேங்கி இருந்த உற்பத்திப் பொருட்களின் விற்பனையை உயர்த்தியது. உலகப் பொருளாதார மாநாடு நடைபெறும் இடம் சுவிசின் டாவோஸ் (Davos) நகரம் ஆகும். சந்தைப் பொருளாதார மையமாக ஜூரிச், பேசல் ஆகிய நகரங்கள் திகழ்கின்றன. இந்த நாட்டின் பொருளாதாரப் புள்ளி (SMI) அலகு மூலம் மதிப்பிடப்படுகிறது.


பெருமளவு அன்னிய செலாவணியை தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு சுவிஸ். வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படும் பணத்தில் (off shore banking) 1.3% சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்படுகின்றன. சுவிஸ் நேஷனல் வங்கி மட்டுமே அரசுடைமை வங்கி. கிரிடிட் சுவிஸ், யுபிஎஸ், நேஷனல் பேங்க் ஆகிய மூன்றுமே பெரிய வங்கிகள். கருப்புப் பண முதலீடுகளும் இதில்தான் நடக்கும். இது தவிர 200க்கும் மேற்பட்டவை தனியார் வங்கிகள். சிறப்பான நிர்வாகமும், ஊழல் அற்ற அரசும் உருவாக்கிய வளர்ச்சி சுவிஸ் நாட்டினுடையது.

-தஞ்சை. பாரதிபாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here