Wednesday, March 22, 2023

Latest Posts

சீனாவிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?

- Advertisement -

 

இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்து உள்ளது. மற்றொரு புறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சி எல்லாம் தேவை இல்லை; இந்துத்துவாவும், சங்பரிவாரும் மெய்யறு அரசியலும் மட்டுமே போதுமானவை எனக் கருதுவோர் உண்டு.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு நாடு விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய இரு வழிகளில் பயணிக்கலாம். ஒரு வழி, மேலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, விலை உயர்ந்த பொருட்களை (மதிப்பு அதிகம் கூட்டப்பட்டவை) உற்பத்தி செய்வதன் வாயிலாக விரைவான வளர்ச்சியை அடையலாம். இதை ஹை ரோடு (High Road) என்பார்கள். மாறாக, ஆரம்ப கட்டத் தொழில் நுட்பம் கொண்டு அதற்குப் பதிலாக நம்மிடம் பெரும் அளவில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குறைவான அளவில் மதிப்புக் கூட்டல் (Value Addition) கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யலாம். ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

நம் நாட்டில் இருந்து பெரும் அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி ஆகின்றன. திருப்பூர் நகரத்தில் இருந்து மட்டுமே ஆண்டுக்கு ரூ. 25,000 கோடிக்குப் பின்னலாடைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். குறைவான கூலிக்குக் கிடைக்கும் தொழிலாளர்களைக் கொண்டு சிறிய தொழில் நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி பின்னலாடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். இதன் விளைவாக, திருப்பூர் நகரில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களின் மதிப்பு தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது.

இதை யூனிட் வேல்யூ (Unit Value 1) டாலர் என்ற அளவிலேயே தொடர்கிறது. இதையே உயர் தொழில் நுட்பம் கொண்டு தயாரித்தால் யூனிட் வேல்யூ உயரும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் மென்பொருட்களின் சாஃப்ட்வேர் (Software) மதிப்பும் மிகவும் குறைவானதே.

மாறாக, அயர்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் மென்பொருள்களின் யூனிட் வேல்யூ மிகவும் கூடுதல். இதே போன்றவைதான் பொறியியல் பொருட்களும். லோ ரோடிலிருந்து(Low Road) ஹை ரோடுக்கு (High Road)மாற உயர் தொழில் நுட்பம் தேவை. உயர் தொழில் நுட்பம் எவ்வாறு உருவாகும்? அடிப்படை ஆராய்ச்சிகள் வாயிலாக மட்டுமே இது சாத்தியமாகும்.

அதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பொருளாதாரங்கள் உயர் தொழில் நுட்பத்தை உருவாக்கிப் பெரும் செல்வம் ஈட்டுகின்றன. அந்தத் தொழில் நுட்பத்தை வழங்கி சீனா போன்ற நாடுகளில் பொருளை உற்பத்தி செய்து பெரும் லாபம் பார்க்கின்றனர். அமெரிக்கா மைக்ரோ சிப்களை (Micro chip) வடிவமைப்பதும் சீனம் அதைத் தயாரிப்பதும் தொடர்கிறது.

மேற்கு உலக நாடுகளின் தொழில் நுட்பத்தைக் கொண்டு அந்நாடுகளுக்குப் பொருள் உற்பத்தி செய்வதால் ஈட்டும் லாபத்துக்கு ஓர் எல்லை உண்டு. இதை நன்கு உணர்ந்த சீனம் தனது தொழில் நுட்பத் துறையை வளர்த்தெடுக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை மின்ட் பத்திரிகையில் நாராயண் ராமச்சந்திரன் என்பவர் 05.03.2018 அன்று கட்டுரையாக எழுதி உள்ளார்.

சீனம் தற்போது அறிவியல், பொறியியல், தொழில் நுட்பத் துறையில் பெரும் கவனம் செலுத்துகிறது. தொலைத் தொடர்பு, உயிரியல், விண்வெளி, கணினி, செயற்கை நுண்ணறிவு, நானோ டெக்னாலஜி போன்ற துறைகளில் ஆராய்ச்சியை முடுக்கி விட்டு உள்ளனர்.

சென்ற ஜனவரி மாதம் அமெரிக்காவின் National Science Foundation ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கை சீனத்தின் பொரும் பாய்ச்சலைப் படம் பிடிக்கிறது. 2016 ஆம் ஆண்டு சரித்திரத்திலேயே முதன் முறையாகச் சீனத்தில் இருந்து வெளியான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, அமெரிக்காவில் இருந்து வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கையை விஞ்சியது என்கிறது அந்த அறிக்கை. 2016 ஆம் ஆண்டு சீனம் 4,26,000 கட்டுரைகள் வெளியிட்ட போது அமெரிக்கா 4,09,000 கட்டுரைகள் மட்டுமே வெளியிட்டது தெரிகிறது.

இதைச் சாதிக்கப் பெரும் முதலீடுகளையும் சீனம் செய்கிறது. ஆண்டுக்கு ஆண்டு சீனம் அறிவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிடும் தொகை 279 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இத்தொகை அமெரிக்கா ஆண்டுக்கு ஆண்டு செலவழிப்பதை விட சற்றே குறைவாகும். அறிவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிடுவதில் சீனா அமெரிக்காவைப் பின்தள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது புலப்படுகிறது.

உவகில் உள்ள எல்லா நாடுகளும் செலவிடும் தொகையில் சீனம் செலவு செய்யும் தொகையின் பங்கு இருபத்தொன்று விழுக்காடாகும். ஆண்டுக்கு பதினெட்டு விழுக்காடு என்ற அளவில் இந்தச் செலவை சீனம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 2,00,000 மாணவர்கள் அறிவியல், பொறியியல் துறைகளில் பட்ட மேற்படிப்பை முடிக்கும் வேளையில் சீனத்தில் 2,00,000 மாணவர்கள் படித்து முடிக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாகவே, சீனத்தில் அறிவியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றோர் எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகம்.

அது மட்டுமல்லாது அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெறுவோர் மூவரில் ஒருவர் வெளிநாட்டு மாணவர். அவர்களில் பெரும்பாலானோர் சீனத்தவர். (இதில் இந்திய மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்).

சீனத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் உயர் படிப்புப் படித்த அறிவியல் அறிஞர்களை மீண்டும் தாய் நாட்டுக்கு ஈர்க்கச் சிறப்புத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தி வருகிறது சீனம். ஆனால், வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் இங்கு திரும்புவது இல்லை. ஒன்றிய அரசும் அவர்கள் மீண்டும் ஈர்க்க எந்தத் திட்டமும் போடவில்லை.

இந்த ஆராய்ச்சிப் பாய்ச்சலின் விளைவாகச் சீனத்தில் பிரமிக்கத் தக்க நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மரபணு ஆய்வில் உலகில் மேற்கொள்ளப்படாத ஆய்வுகள் சீனத்தில் நடந்தேறுகின்றன. நிலவுக்கு யாரும் செல்லாத பகுதிகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆக, மேற்கு உலக நாடுகளையும் விஞ்சும் தொழில் நுட்பங்களை உருவாக்க சீனம் எடுத்து வரும் முயற்சியின் பயனாக, சீனம் லோ ரோடு என்ற பாதையில் இருந்து ஹை ரோடு வளர்ச்சிப் பாதைக்கு மாறத் தோது செய்து வருகிறது. இனிமேல் அந்நாடு உலகின் தொழிற்சாலையாக மட்டுமே திகழாது; இனி அதனிடம் தொழில் நுட்பமும் இருக்கும்; தொழிற்சாலைகளும் இருக்கும். சீனத்தின் வளர்ச்சியை விஞ்சி நாங்கள் வளர்கிறோம் எனப் பீற்றிக் கொள்ளும் இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா செலவிடும் தொகை (ஆராய்ச்சிக்கு) ஆண்டுக்கு 36 பில்லியன் டாலர்கள். இந்தியா காணும் கனவுக்கு அது செலவிடும் தொகை மிகவும் சொற்பம். பணம் என்பது ஒரு சிறு சிக்கல். பல்கலைக் கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் தனித் தனியாகச் செயல்படுகின்றன. (இது அறிவியல் துறையில் மட்டுமல்ல; சமூகப் பொருளாதார ஆய்வுத் துறையிலும்தான்).

இரண்டும் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித் தீவுகளாக இயங்குகின்றன. பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பணிகள் மிகவும் சொற்பம். ஆய்வு நிறுவனங்களில் பாடம் நடத்தப்படுவது இல்லை. இதன் விளைவாகப் பல்கலைக் கழகங்கள் வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு சந்தைக் கூடமாகச் சீரழிந்துவிட்டன. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டு உள்ள போதும் அவற்றில் இருந்து செல்லிக் கொள்ளும் படியான ஆய்வுகள் வெளிவரவில்லை. இந்தப் போக்குக்குச் சில ஏவிதிவிலக்குகள் உள்ளன. Tata Institute Fundamental Research, Indian Institute of Science, National Centre for Biological Science போன்ற சில இடங்களில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அங்கு எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ள முடியும்?

தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இங்கு ஏழு கோடிப் பேர் இருக்கிறார்கள். 25க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. நூற்றுக் கணக்கான பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், உலகத் தரத்தில் ஓர் ஆய்வாவது இங்கு நடைபெறுகிறது என்று நம்மால் கூற முடியுமா? இதுவேதான் இந்தியா முழுமைக்குமான நிலை. இதில் பெரும் பேச்சுப் பேசி கனவு காண்பது மட்டும் குறையாமல் நடைபெறுகிறது. இந்தப் போக்கு தொடருமானால் சீனா அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விஞ்சி வளரும் போது ஹை ரோடு இந்தியா ஒரு மெடியோக்ரி (Mediocre) அறிவியல் தொழில் நுட்பத் துறையைக் கூட வளர்த்தெடுக்க முடியாது.

இதன் தொடர்ச்சியாகப் பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டமான ஹை ரோடு என்ற பாதை கானல் நீராகி விடும். நாட்டுக்கும் உய்வில்லை; நாட்டு மக்களுக்கு உய்வில்லை. இதை முன்னெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு செலவைக் குறைத்து பெரும் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக உருவாக்குவதில்தான் முனைப்பாக இருக்கிறது. நீண்டகாலத் திட்டமிடல் என்பதே இல்லாமல் செயல்படுகிறோம் என்பது தான் இன்றைய நிலை.

– பொருளியல் அறிஞர் திரு. ஜெ. ஜெயரஞ்சன்
எழுதிய ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள் 2018’ நூலில் இருந்து

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news