அது வர்த்தகப் பொருள்களைத் தயாரிக்கும் ஓர் நிறுவனம். அங்கு விற்பனை மேலாளர் பதவி காலியாக இருந்தது. அதற்காகப் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர். அந்தப் பதவிக்காக பலர் விண்ணப்பித்து இருந்தனர். அன்று நேர்முகத் தேர்வு ஏராளமானோர் வந்திருந்தனர். வந்தவர்கள் பட்டதாரிகள், விற்பனைத் துறையில் அனுபவம் நிறைந்தவர்கள். பலரும் தங்களுக்கு எப்படியாவது இந்த வேலை கிடைத்து விடாதா என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
ஒவ்வொருவரையும் அலுவலக உதவியாளர் பெயர் சொல்லி அழைத்துச் சென்றார். நேர்முகத் தேர்வில் நிறையக் கேள்விகள் கேட்டு மிகவும் திறமையானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் அந்த நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் குமார் மிகவும் கவனமாக இருந்தார். நேரம் கடந்தது. கிட்டத் தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் சொல்லி அனுப்பி வைத்தார். கடைசியாக செழியன், எழிலன், முகிலன் ஆகியோரை மட்டும் காத்திருக்குமாறு கூறி இருந்தார். சிறிது நேரம் கழித்து மூவரையும் அழைத்தனர்.
மூவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து குமார், ”இந்த நிறுவனத்தில் விற்பனை மேலாளர் பதவிக்கு உங்களில் ஒருவரை மட்டுமே தெரிந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால், இந்தத் தேர்வில் மூவருமே ஒரே மதிப்பெண் பெற்று உள்ளீர்கள். அதனால் கடைசியாக உங்களுக்கு ஒரு தேர்வு வைக்கப் போகிறேன் அதில் உங்கள் திறமை எப்படி என்பதைப் பார்த்த பிறகு தான் தேர்ந்தெடுக்க முடியும். என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
உடனே மூவரும், ”சரி சார், நீங்கள் கூறுவதைத் தாராளமாக ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர். உடனே குமார் ஒரு பெட்டியைத் திறந்து அதில் இருந்து ஒரு பொருளை எடுத்தார். அது, அந்த நிறுவனம் தயாரிக்கும் வாசனைத் திரவியம். அதை மூவரின் முன்பாகக் காட்டி, ”இது இந்த நிறுவனத்தின் தயாரிப்பாகும். நான் உங்களிடம் தலா ஐம்பது பாட்டில்களைத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, இதை இரண்டு நாள்களில் நீங்கள் விற்க வேண்டும். ஒரே நபரிடம் கொடுக்கக் கூடாது. உங்கள் உறவினர்களுக்கும் கொடுக்கக் கூடாது. அவர்களாகவே விரும்பி வாங்க வேண்டும்.
அதன் பிறகு என் முடிவைக் கூறுகிறேன்” என்றவர் அவர்களிடம் தலா ஐம்பது பாட்டில்களைக் கொடுக்குமாறு உதவியாளரிடம் கூறினார். அதைப் பெற்றுக் கொண்ட மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.
சரியாக இரண்டு நாட்கள் கழித்து மூவரும் அந்த நிறுவனத்துக்கு வந்தனர். குமார் அவர்களை தனித் தனியாக வரவழைத்தார்.
முதலில் உள்ளே சென்ற செழியன், ”சார்.. பல இடங்களில் விற்க முயற்சி செய்தேன். இதை விட விலை குறைவாக நிறைய நிறுவனத் தயாரிப்புகள் இருக்கின்றது. அதனால் விற்பனை சுமாராகத்தான் இருந்தது. ஐந்து பாட்டில்கள்தான் விற்க முடிந்தது” என்றார்.
அடுத்து சென்ற எழிலன், ‘சார்.. இன்னும் கொஞ்சம் குவாலிட்டி வேண்டும். முயற்சி செய்து விற்க வேண்டும். என்னால் பத்து பாட்டில்கள் தான் விற்க முடிந்தது” என்றார்.
கடைசியாக முகிலன் சென்றார். ”சார். நான் எல்லா பாட்டில்களையும் விற்று விட்டேன். இன்னும் ஐம்பது இருந்தால் கூட விற்று இருப்பேன்” என்று எந்த வித தயக்கமும் இல்லாமல் கூறினார். இதைக் கேட்ட குமாருக்கு அளவு கடந்த வியப்பு. ”எப்படி அனைத்து பாட்டில்களையும் விற்பனை செய்தீர்கள்?” என்றார்.
உடனே முகிலன், ”நீங்க கொடுத்த ஒவ்வொரு பாட்டில் கூடவும் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் வண்ணப்படத்தை இலவசமாகக் கொடுத்தேன். இந்த இலவச உத்தியால் என்னால் அனைத்தையும் விற்க முடிந்தது” என்றார். முகிலன் தேர்வு செய்யப்பட்டார்.
”எந்த ஒரு செயலை செய்யும் போதும் அதில் ஒரு ஈடுபாடு இருக்க வேண்டும். ஒரு தந்திரம் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும். அதை நீங்கள் சரியாக செய்து இருக்கிறீர்கள்” என்று முகிலனை பாராட்டவும் செய்தார், குமார்.
– ஆர். அருண்குமார்