நம் நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவது கட்டடத் தொழில். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக நலிவடைந்து கொண்டிருக்கும் தொழிலும் அதுதான். அதற்கு காரணங்கள் பல உண்டு என்ற போதும் மணல் தட்டுப்பாடு ஒரு முதன்மையான காரணி. அதற்கும் மேலாக மணல் மீதான அரசின் கொள்கைகள் கட்டடத் தொழிலை பெரிய அளவில் சரியச் செய்து விட்டது.
ஆற்று மணலை அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட 2003 தொடங்கி இன்று வரை தமிழக அரசின் செயல்பாடுகளை ஆராய்ந்த வகையில் சில செய்திகளை நினைவூட்டுகிறேன்.
*2003ல் உருவவாக்கப்பட்ட மணல் அள்ளும் ஒப்பந்தம் (Lifting & loading Contract) அடிப்படையில் தமிழக ஆறுகளில் இருந்து மணல் அள்ளும் உரியை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. இதனால் பொதுப்பணித் துறை (PWD), பெயரளவில்ருக்கு ஒரு கட்டுப்படுத்தும் துறையாக, அதாவது பல் இல்லாத சிங்கமாக மாறியது.
*இயற்கை வளங்களைப் பற்றிய எவ்வித அடிப்படை புரிதலும் இன்றி கட்டுப்பாடு இன்றி மணலை அள்ள அனுமதித்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தது.
இனி கடந்த இரண்டாண்டு குழப்பத்தைப் பற்றி..
*முதல்வர் எடப்பாடி திரு. பழனிச்சாமி, ஒரு விழாவில் மதுரை வைகை ஆற்றில் மேடை போட்டு பேசுய போது இன்னும் மூன்று ஆண்டுகளில் மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்படும்;அதற்கு பதிலாக மாற்று மணல் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்றார். ஆனால் இன்று வரை அரசு தரப்பில் அதற்கான உருப்படியான எந்த செயல்பாடுகளும் நடக்கவில்லை.
*மணல் குவாரிகளுக்கு அரசு அனுமதி அளிப்பதும், நீதிமன்றங்கள் தடை செய்வதுமான கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டு உள்ளது.
*தமிழக ஆறுகள் மணல் இன்றி மட்டையான பின்பும் சவுடுமண் என்ற பெயரில் கரை ஓரங்களில் உள்ள மணலையும் சூறையாடும் செயல்களும் அரசின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்து தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
உரிய வரிகளை செலுத்திய பின்பும் அந்த மணலை விற்பனை செய்ய தமிழக அரசு தடை போட்டது. இதனை எதிர்த்து நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.
அதனை எதிர்த்து வழக்காடிய அரசு வெளிநாட்டு மணலில் 85% சிலிக்கான் இருப்பதால் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல என அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பிறகும் பலவித தடைகளை ஏற்படுத்தி அந்த மணலை விற்க விடாமல் தடுப்பதில் முனைப்புக் காட்டியது.
தற்போது நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின் காரணமாக தமிழக அரசு (தரமற்றதென அரசே கூறிய) சென்னை துறைமுகத்தில் இறக்கப் பட்ட வெளிநாட்டு மணலை ஆன்லைன் மூலம் விற்க ஆணை இட்டு உள்ளது.
ஒரு யூனிட்(100 கனஅடி) மணல் 9990 ரூபாய் என விலை நிர்ணயித்து உள்ளது.மேலும் லாரி வாடகை, ஏற்று-இறக்குக் கூலி உட்பட 13000 ரூபாய் ஆகிறது. ஆனால் “கடை விரித்தேன் கொள்வார் இல்லை”என்ற நிலையில் வாங்க ஆளில்லாமல் மீண்டும் ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டு உள்ளது.
இனி தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை கட்டடத் தொழிலில் இருப்போர் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
– வீரஜோதிமணி அங்கிடிசாமி, கட்டுமான பொறியாளர்