Latest Posts

வணிக வளர்ச்சிக்கு காந்தி சொன்ன ஆலோசனைகள்

- Advertisement -

அண்ணல் காந்தியடிகளை பொதுவாக நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர் என்றுதான் பெரும்பாலானவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் அவர் பன்முக ஆளுமை கொண்ட மாமனிதர். தனி மனித வாழ்விலும், பொது சமுதாய வாழ்விலும் அவர் தொட்டு முத்திரை பதிக்காத துறைகள் இல்லை.

அவர் ஒரு சிறந்த தொழில் முயல்வோர். தொழில்களை உருவாக்கியவர். அதற்கான முதலீட்டைக் கண்டு பிடித்தவர். வேலை வாய்ப்பை உருவாக்கியவர். உற்பத்தி செய்த பொருட்களுக்கு அங்காடியைக் கண்டு பிடித்தவர். ஒரு சிறந்த உற்பத்தியாளர், வணிகர் ஆகியோருக்கு வேண்டிய அத்தனை பண்புகளையும் பெற்று இருந்தவர் இது கற்பனை அல்ல; நாடறிந்த வரலாற்று உண்மை.

அவர் கதர், கிராமத் தொழில்களை வளர்ப்பதன் மூலம் கிராமப் பொருளாதாரத்தை வலுவான அடிப்படையில் அமைக்க முயன்றார் என்பதைப் பலர் அறிந்து இருக்கலாம். அந்த முயற்சியில் அவர் ஒரு உற்பத்தியாளராகவும், வணிகராகவும் செயல்பட்டார்.
அவர் அகில இந்திய நூற்போர் சங்கத்தையும், அகில இந்திய கிராமத் தொழில் சங்கத்தையும் நிறுவினார். அவற்றிற்கான ஊழியர்களை பயிற்சி அளித்து உருவாக்கினார். வீடுகளில் உற்பத்தி செய்த பொருட்களை விற்க கதர் கடைகளை ஏற்படுத்தினார். விற்பனைக்கு வழிகாட்டினார்.

ஆதாயமும் வளர்ச்சியும்:
கதர் கிராமக் கைத்தொழில் நிறுவனங்கள் சேவைக்காக உருவாக்கப் பெற்றவை. ஆனால் அவை தொடர்ந்து வாழ ஆதாயம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இப்பொழுது நிர்வாகத் துறையினர் நீடித்த தொடர் வளர்ச்சி (Sustainable Growth) என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர். அதாவது தொழில், வாணிக நிறுவனங்கள் எதிர்கெள்ளும் சிக்கல்களைத் தாக்குப் பிடித்து வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதுதான் சரியான வளர்ச்சி.

காந்தியடிகள் இந்தக் கருத்தினைச் செயல் படுத்திக் காட்டினார். அவர் காலத்தில், அவர் வழி காட்டுதலில் தொடங்கப் பெற்ற கதர்க் கடைகள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆலைத் தொழில்களின் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடு கொடுக்க முடிகின்றது. காரணம் அவை பின்பற்றும் நடைமுறைக் கொள்கைதான்.
வாடிக்கையாளருக்கு முதலிடம்:

அவர் கதர், கிராமத் தொழில் பொருள் வாணிபத்தில் வாடிக்கையாளருக்கு முதலிடம் கொடுத்தார். பொருட்கள் உற்பத்தியின் நோக்கம், நுகர்வோரின் தேவையை நிறைவு செய்வது. அதாவது பயன்பாடுள்ள பொருட்களை உற்பத்தி செய்வது. பயன்பாடு என்பதில் மன நிறைவு அடங்கி இருக்கின்றது. எடுத்துக் காட்டாக சேலையைக் கூறலாம். அது வெறும் துணி மட்டும் அல்ல. உடுத்துபவரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும். அதாவது உற்பத்தியிலும் நுகர்வோர்தான் நோக்கமாக இருக்கின்றார்.
விற்பனையில் நுகர்வோர் நேரிடையாக பங்கு பெறுகின்றார். ஒரு கடையில் வந்து பொருளை வாங்குபவர் அந்தக் கடைக்கு வாடிக்கையாளர் ஆதாரமாக அமைகின்றார். இதனை மிக அருமையாக அண்ணல் வலியுறுத்திக் கூறிகின்றார்.

ஐந்து மணியான கருத்துக்கள்: ஒரு முறை அண்ணல் ஒரு கதர்க் கடையைத் திறந்து வைக்கின்ற பொழுது வாடிக்கையாளரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஐந்து மணிக் கருத்துகளைக் கூறியுள்ளார். அவை இன்றும், என்றும் வணிகர்கள் மனங்கொள்ள வேண்டியவை. அவற்றை விளக்கலாம்.

1.வாடிக்கையாளர் நமது இடத்திற்கு வரும் மிக முக்கியமானவர்
ஒரு கடை வைத்திருப்பது பொருட்களை விற்பனை செய்வதற்காக. கடைக்கு வருகின்றவர்களின் நோக்கம் பொருட்களை வாங்குவது; வேடிக்கை பார்ப்பது அல்ல.
கடைக்க வருபவர்களில் சிலர்தான் வந்த உடனே இந்த பொருள் வேண்டு மென்று கூறி விலையைக் கேட்டு தேவைப் பொருளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ஒரு பொருள் வாங்க பல பொருட்களைப் பார்ப்பார்கள். விலை, தரம் பற்றி பல கேள்விகள் கேட்பார்கள். வாங்கலாம். இல்லை பக்கத்துக் கடைகளைப் பார்த்து விட்டு வகுவதாகக் கூறிச் செல்லலாம். இந்த நிலையில்தான் விற்பனையாளர்.பொறுமை காப்பது கடமையாகின்றது. விற்பனையாளர் நடந்து கொள்ளும் முறையில் வாடிக்கையாளர் திரும்பத் தேடி வர வேண்டும்.கடைக்கு வருகின்ற நுகர்வோரை நமது வாடிக்கையாளராக மாற்றுவது தனிக் கலை. இதற்கு நிறையத் திறமை வேண்டும்; பொறுமை வேண்டும். அதற்கு கடைக்கு யார் வந்தாலும் அவர் முக்கியமானவரென்று கருதும் மனம் வேண்டும்.
முக்கியமானவர் என்று கருதினால், அவருக்குத் தக்க மரியாதை கொடுப்போம். சிறப்பாக உபசரிப்போம். அன்போடு பேசுவோம். இது விற்பனையைக் கூட்டும்.

2. அவர் நம்மை நம்பி இல்லை; நாம் அவரை நம்பி இருக்கின்றோம்
காந்தியடிகள் ஒரு ஆதாரமான பொருளாதாரக் கருத்தை மிக எளிமையாகக் கூறி விடுகின்றார். பொருளாதார நடவடிக்கைகளில் யார் யாரைச் சார்ந்திருக்கின்றார்கள் என்பது முக்கியம். வாடிக்கையாளர் கடையைத் தேடி வருவதால் அவர் தன்னைச் சார்ந்திருப்பதாக எண்ணக் கூடாது. அப்படி எண்ணுவது ஒரு மயக்கமான கருத்து.
இந்தக் கடை இல்லை என்றால் சந்தைக் கடை, என்று ஒரு பழமொழி கூறுவார்கள். இதுதான் நுகர்வோரின் மனநிலை. ஒரு கடைதான் இருக்கின்றது; அதை விட்டால் வேறு வழி இல்லை, என்ற முற்றுரிமை நிலை பெதும் இருப்பதில்லை. இதனைக் கடைக்காரர் உணர்ந்து செயல் பட வேண்டும்.
இதில் ‘நம்பிக்கை’ என்ற கருத்து உள்ளடக்கம். வாடிக்கையாளருக்கு கடையின் மீது, வாங்கும் பொருளின் மீது நம்பிக்கை எற்பட வேண்டும். இந்த நம்பிக்கைதான் நல்ல எண்ணமாக (Good Will) உருவாகின்றது. கடைக்கு வருகின்ற நுகர்வோர் வாடிக்கையாளராகி தொடர்ந்து வருவது விற்பனையாளரின் கையில் இருக்கின்றது.

3. நம் வேலையில் அவர் குறுக்கிடவில்லை. நம் வேலைக்கு ஆதாரனமானவர்
பொதுவாக விற்பனையாளரிடம் இருக்கும் மனோபாவத்தை காந்தியடிகள் சுட்டிக் காட்டுகின்றார்.
சில வேளைகளில் கடைக்கு வருகின்ற சிலர், பொருட்களின் விலைகளை விசாரிக்கின்ற பொழுது அவர்கள் வாங்குபவர்கள் போல் தோன்றாது. அப்படிப்பட்ட சமயங்களில் விற்பனையாளர் ஏனோ தானோ வென்று ஈடுபாடின்றி பதில் கூறலாம். இதனால் விற்பனை பாதிக்கும். மாறாக, அவரை ஆதாரமானவர் என்று கருதி ஈடுபாட்டோடு அவரைக் கவனித்தால் விற்பனை கூடும்.
இது ஒர் உளவியல் அணுகுமுறை. வருகின்ற வாடிக்கையாளர் பற்றி உடன்பாட்டு அணுகு முறையைப் (Positive Approach) பின்பற்ற வேண்டுமென்று கூறுகின்றது, உளவியல். எதிர்மறை அணுகுமுறை இருந்தால் நமது செயலில் வெறுப்பு வெளிப்படும். அது வாடிக்கையாளரை நோகடிக்கும்.

4. அவர் நமது வியாபாரத்திற்கு அந்நியரல்லர்; அவர் அதன் உறுப்பாவார்
காந்தியடிகளின் இந்தக் கருத்து கதர்க்கடை போன்ற பொது நிறுவனங்களுக்குச் சரியாக இருக்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு இந்தக் கண்ணோட்டம் சரியாக இருக்குமா? என்ற கேள்வி எழலாம்.
வாணிகம் என்பது இன்று நேற்றுத் தோன்றியதல்ல. எப்பொழுது தொழில்களில் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்தார்களோ, அப்பொழுதே வாணிபம் பண்டமாற்றாகத் தொடங்கி விட்டது. பணம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் விரைந்து வளர்ந்து இருக்கின்றது.
வாடிக்கையாளர்களை தங்களவர்களாக உறவு கொண்டு பழகுவது நமது பழக்கம்; மரபு; பண்பாடு. இதனை இன்று கிராமங்களில், நகரங்களில், சிறு கடைகளில் காணலாம். ஒரு வாடிக்கையாளர் சில நாட்களாக கடைக்கு வரவில்லை என்றால், வழியில் எங்கு பார்த்தாலும் “என்ன நீங்க நம்ம கடைக்கு வரக் காணோம்?”, என்று கடைக்காரர் கேட்பார். கடைக்காரரை வயதுக்கேற்ப, அண்ணாச்சி, அக்கா, அய்யா, அம்மா என்று அழைப்பதையும், அதே போன்று வாடிக்கையாளர்களை வணிகர்கள் கூப்பிடுவதும் இன்றும் நடைமுறை. இது நமது நாகரிகத்தின் வெளிப்பாடு.
இதன் அடிப்படை, வணிகர்கள் வாடிக்கையாளர்களை உற்றார், உறவினர்களாகக் கருதுவதுதான். குடும்ப நிகழ்வுகளுக்குக் கூட அழைப்பதைக் காணலாம்.
இந்த மனோபாவம் இருந்தால் வாணிபம் விரைந்து வளரும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வணிகர்கள் வாடிக்கையாளர்களைப் போற்றிக் கவனிப்பார்கள்.

5.அவருக்கு வேலை செய்வதன் மூலம் நாம் அவருக்கு உதவி செய்ய வில்லை. சேவை செய்ய வாம்ப்பளிப்பதன் மூலம் அவர் நமக்கு உதவி செய்கிறார்
காந்தியடிகள் கதர், கிராமத் தொழில் வளர்ச்சியை கிராம நிர்மாணப் பணியாகக் கருதியதால் “சேவை” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். கடைக்காரர்களைத் தொண்டர்களாகக் கருதினார்.
ஆனால் இந்தக் கருத்து அப்படியே வணிகத்திற்கும் எற்றதாக இருக்கக் காணலாம். எப்படி?
வணிகர்கள் வணிகத்தை ஒரு பணியாக ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஊதியத்தோடு ஓரளவு ஆதாயமும் எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் இயல்பு இலாபம் (Normal Profit) மட்டும் பெறுகின்ற வரை, அவர்கள் பணியிலும், “மக்களின் தேவையை அறிந்து நிறைவு செய்தல்”, என்ற சமுதாய நோக்கம் இருக்கும்.
மேலும் அவர்களின் தொழில் வளர்ச்சி வாடிக்கையாளர்களின் வளர்ச்சியை ஒட்டித்தான் அமையும்.
இப்பொழுது இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவிட்டு விளம்பரங்கள் செய்து வாணிபத்தைப் பெருக்கும் போக்கு வளர்ந்திருக்கின்றது. அவற்றை ஊன்றிக் கவனித்தால் மிகப் பெரிய தொழில், வாணிப நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைச் சார்ந்தே இருப்பது தெளிவாகும்.
இதில் அடிப்படையான ஒரு பொருளாதாரப் பேருண்மை அடங்கி இருக்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதார இயக்கமும், வளர்ச்சியும் ஒரு சாராரை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. ஒரு சமுதாயத்தில் உள்ள அனைவரும் அவரவர் ஆற்றலுக்கும், வளத்திற்குமேற்ப தங்களது பங்களிப்பை வழங்குகின்ற பொழுதுதான் பொருளாதாரம் முன்னேறும்.

தொலை நோக்குப் பார்வை:
அண்ணல் காந்தியடிகளின் முதன்மை நோக்கம், மக்கள் நலவாழ்வு. குறிப்பாக சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ள கடையர்கள் கடைத்தேற வேண்டுமென்று கருதினார். அதற்கு நாட்டின் விடுதலையை வழி முறையாக எண்ணினார். நாட்டு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த பொழுதே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டார். அதன் விளைவுதான் பொருளாதார வாணிப வளர்ச்சி முயற்சிகள்.
காந்தியடிகளின் நோக்கில் தொழில்களின், வாணிபத்தின் வளர்ச்சி மக்களின் நல வாழ்வின் அடிப்படையில் அமைய வேண்டும். எல்லோரும் இணைந்து வாழ்கின்ற கூட்டு வாழ்வின் நலனில் தனிமனித நலம் அடங்கி இருக்கின்றது.
இங்கு ஒரு பொருளாதார பொது உண்மையைச் சுட்டுக் காட்டலாம். ஒரு நோக்கில் அனைவருமே நுகர்வோர்தான். பொருள் உற்பத்தியாளர்களும் கூட மற்றவர்களின் உழைப்பு, மூலப்பொருட்கள், சேமிப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர்களாகவே இருக்கின்றனர். ஆதலால் நுகர்வோர் நலம் என்பது சமுதாய நலம் ஆகின்றது.
வாடிக்கையாளர்கள் நலம் பேணப்படுகின்ற பொழுது வாணிபமும், தொழில்களும் வளர்கின்றன. இதனால் சமுதாய நலமும் வளமும் காக்கப்படும்; பேணப்படும்.

– டாக்டர் மா. பா. குருசாமி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news