எட்டு வழி சுங்கச் சாலையின் நோக்கம் தூரத்தையும், நேரத்தையும் குறைப்பதுதான் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே உள்ள சென்னை-சேலத்திற்கான 3 சாலைகளுக்கான தூரமும், பயணிப்பதற்கான நேரமும், மதுரவாயல் முதல் சேலம் வரை கணக்கிடப்பட்டு உள்ளது.
புதிதாக உத்தேசிக்கப்பட்டு உள்ள எட்டு வழிச்சாலைக்கான தூரமும், நேரமும் வண்டலூரை தாண்டி உள்ள புறவழிச்சாலையில் இருந்து கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் பழைய சாலைகளோடு ஒப்பிட்டு நேரமும், தூரமும் குறைவு என்று காட்டப்படுகிறது.
புதிய சாலை 277 கிலோ மீட்டர் தூரம் என்றும், பழைய சாலை 333 கி.மீ எனவும், பழைய சாலையில் செல்வதற்கு 5 மணி நேரத்திற்கு மேலாகும் என்றும், புதிய சாலையில் செல்வதற்கு 3 மணி நேரம் போதும் என்றும் இதற்கென தயாரிக்கப்பட்ட வாய்ப்பறிக்கையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் மதுரவாயலுக்கும், வண்டலூர் அருகில் தொடங்கும் சாலைக்கும் இடையே 24.89 கி.மீ தூரம் இருக்கிறது என்பதையும் அது பதிவு செய்திருக்கிறது. அதாவது பழைய சாலைக்கும், உத்தேசிக்கப்பட்டு உள்ள சாலைக்கும் இடையே 30 கி.மீ தூரம் மட்டுமே குறையும் என்பதை இந்த அறிக்கையை படிக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும்.
வண்டலூர் முதல் மதுரவாயல் வரை உள்ள போக்குவரத்து நெரிசலையும், அதனால் ஏற்படும் கால தாமதத்தையும் கணக்கிட்டால் வாகனப் போக்குவரத்து உச்சமாக இருக்கிற சமயங்களில், ஒரு மணி நேரத்தை விட அதிக நேரம் இதை கடக்க ஆகிறது. எனவே, தூரம் நேரம் குறித்து அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ள அம்சங்களும், அரசால் முன்வைக்கப்படும் வாதங்களும் மோசடியானவை, உண்மையை மறைக்கக் கூடியவை.
அஞ்சும் விவசாயிகள்
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கும், அனல்மின் நிலையத்திற்கும் நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு இன்று வரையிலும் அரசால் ஒத்துக் கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு, இழப்பீடு தரப்படவில்லை. 2009ம் ஆண்டு உளுந்தூர்ப்பேட்டை – சேலம் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இன்று வரையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இந்த அரசு, அந்த அரசு என்பதல்ல சிக்கல். இறுதியாக அரசுகளின் துணையோடு அதிகார வர்க்கமும், ஆளும் கட்சியும் இதைப்பற்றி எவ்வித கவலையும் இன்றி சாலை போட்டதோடு, தங்கள் பணி முடிந்து விட்டதாக மூட்டை கட்டி விடுகிறார்கள். நிலத்தின் வருமானமும் இழந்து, பயிரிடுவதற்கு நிலமும் இன்றி, அதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் துயரத்தை அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
காரில் போவோரும் கதறப் போகிறார்கள்
தமிழகத்தில் இயங்குகிற எந்த பேருந்தும் சராசரி 120 கி.மீ. வேகத்தில் செல்ல முடியாது. எனவே பேருந்தில் பயணம் செய்யும் சராசரி மனிதர்களுக்கு இதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவது இல்லை.
இந்த தடத்தில் அமையப் போகும் 8 சுங்கவரிச் சாவடிகள் மூலம் இழக்கப் போகும் தொகையை கணக்கில் கொண்டால் காரில் போகிறவர்களும் கதறவே போகிறார்கள்.
எது முன்னேற்றம்?
எந்த விதமான முன்னேற்றமும் வரக் கூடாதா? இந்தியா வளரக் கூடாதா? மாட்டு வண்டியில்தான் போக வேண்டுமா? இந்தியா வல்லரசாகக் கூடாதா என்கிற கேள்வியை தேசத்தின் நலனை முன் வைப்பவர்கள் என்கிற தோற்றத்தோடு ஒரு சிலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தேசம் என்பது நில எல்லை அல்ல. அதில் இருக்கும் மக்கள் என்பதை புரிந்து கொண்டால் இந்த தமிழகத்தின் கிராமப் புறங்களில், தாங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களையும், பொருட்களையும் கொண்டு செல்ல ஒற்றையடி பாதை கூட இல்லாத – மழைக்காலங்களில் குளங்களின் நடுவே நடந்து செல்கிறவர்களைப் பற்றி தெரிந்து இருக்கும் அரசு, அங்கு உள்ள அந்த சீரற்ற சாலைகளை மேம்படுத்தினால் இதே 10000 கோடி ரூபாய் பல லட்சம் பேருக்கு அவர்கள் பொருளை விரைவாகவும், இலகுவாகவும் கொண்டு செல்ல வாய்ப்பளித்து அவர்களுடைய வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்.
ஆனால் இந்த சாலை சில விரல் விட்டு எண்ணத் தக்க பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுவதற்கு உதவலாம். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அனைவரும் அறிய வேண்டும்.
எட்டு வழி சுங்கச் சாலையில் நிற்க முடியாது, பொருட்களை ஏற்றி இறக்க முடியாது. இளைப்பாற முடியாது. அதைத் தடுக்கும் வகையில் இரு பக்கமும் சுவர் எழுப்பப்பட்டு இருக்கும். ஒருவரின் நிலத்தின் நடுவே சாலை சென்றால் நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கோ, அடுத்த பக்கம் உள்ள மற்றொரு நிலத்திற்கு செல்வதற்கோ அவர்கள் நடக்க வேண்டிய தூரத்தையோ, அதனால் அவர்கள் இழக்கும் நேரத்தையோ வாய்ப்பறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை.
தொழில் பெருகுமா?
சாலைகள் போட்டு விட்டதாலேயே தொழில் பெருகும், வேலை வாய்ப்புகள் வரும் என்றால் சென்னை – நாகர்கோவில் வழித்தடத்தில் இருக்கிற எல்லா மாவட்டங்களிலும் தொழில் செழித்தோங்கி வளர்ந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில் என்ன?.
புதிய தொழில், வேலைவாய்ப்பு வருவது இருக்கட்டும், ஏற்கெனவே இருந்த 50,000 சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு விட்டதாகவும் அதன் காரணமாக 5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறி போய் விட்டதாகவும் தமிழக அமைச்சர் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். அதற்கான காரணமாக திரு. நரேந்திர மோடி அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும்தான் என்றும் சொல்லி இருக்கிறார்.
இதைச் சொல்லிக் கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் நம் மாநிலத்தில் ஒரு ஒப்பந்தக்காரர் வீட்டில் இருந்து ரூபாய் 174 கோடி பணமும், 105 கிலோவுக்கு மேல் தங்கமும் கைப்பற்றப்பட்டு உள்ளன என்று செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. எனவே கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை பொய் நம்பிக்கை ஆகி விட்டது.
சாலைக்கு மட்டும் நிதி ஓடி வருவது ஏன்?
ஒருசாலைக்கு 10,000 கோடி ரூபாய் தரத் தயாராக இருக்கும் மத்திய அரசு, தமிழகத்தில் இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு +2க்கு மேல் வழங்கக் கூடிய கல்வி உதவித் தொகையை கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக தரவில்லை.
அண்மையில் சட்டமன்றத்தில், துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டபடி இந்த வகையில் தமிழகத்திற்கு வர வேண்டிய தொகை ரூ. 1900 கோடி. முதன் முதலாக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியபோது அது ரூ.1500 கோடியாக இருந்தது. இப்போது ரூ.1900 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
படிப்புக்கு, வர்தாபுயலுக்கு, சென்னை வெள்ளத்திற்கு நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு பணம் தராத மத்திய அரசாங்கம், சாலைக்கு ஏன் ஆயிரம் கோடிகளை கொண்டு வந்து கொட்டுகிறது? இப்போதும் கூட மத்திய அரசாங்கம் இந்த 8 வழி சுங்கச் சாலைக்கு, 10.69 கி.மீ சாலை தூரம் மலைவழி செல்வதற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைப்பு அனுமதி அளிக்கவில்லை. முதலமைச்சர் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தனது சொந்த விருப்பத்திற்குரிய திட்டம் என்று பலமுறை பேசி இருக்கிறார். அதில் காட்டாத அவசரத்தை இந்த சாலை தொடர்பாக காட்டுவது ஏன்?
– க. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி