டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த
சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக திருமதி.ஆரத்தி கிருஷ்ணா அதன் இயக்குநர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் இதுவரை அந்த நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநராகசெயல்பட்டு வந்தார். இவருடைய தங்கை திருமதி. அருந்ததி கிருஷ்ணா இணை மேலாண் இயக்குநராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
இவர் இதற்கு முன் துணை மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவர்களின் அக்கா திருமதி. ப்ரீத்தி கிருஷ்ணா. இவரும் டிவிஎஸ் குழுமத்தின் இன்னொரு நிறுவனத்தை நிர்வகிக்கிறார். மூவரும் திரு. சுரேஷ் கிருஷ்ணாவின் மகள்கள். இதுவரை சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த திரு. சுரேஷ் கிருஷ்ணா வரும் ஏப்ரல் இருபதாம் தேதி முதல் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று, சேர்மன் ஆவதைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இயக்குநர் குழுவிலும் அவர் தொடர்ந்து நீடித்து தன் அனுபவங்களையும், ஆற்றலையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவார். பொதுவாகவே வணிகர்களும், தொழில் அதிபர்களும் தங்களுக்கு மகள்கள் மட்டுமே இருந்தால், அது குறித்து சற்று சோர்வாகப் பேசுவதைப் பார்க்க முடியும். மகன்கள் மட்டுமே வாரிசுகள் என்கின்ற பொதுப் புத்தியில் இருந்தே இந்த சோர்வு உருவாகிறது. ஆனால் இந்த மனநிலையை திரு. சுரேஷ் கிருஷ்ணா உடைத்துத் தள்ளி இருக்கிறார். தனது மூன்று மகள்களையும் தங்கள் தொழிலுக்கான சரியான வாரிசுகளாக உருவாக்கி இருக்கிறார்.
இந்த வகையில் டிவிஎஸ் குழும, குடும்ப உறுப்பினர்கள் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். டிவிஎஸ் குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் டிவிஎஸ் குழுமத்தின் பல நிறுவனங்களை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். எனவே டிவிஎஸ் குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு தொழில் முனைவோரும், வணிகர்களும் தங்கள் மகள்களையும் தங்கள் தொழில்களுக்கு வாரிசுகளாக்கும் வகையில் தகுந்த படிப்பையும், பயிற்சிகளையும் அளித்து உருவாக்கி மகிழ வேண்டும். தொழில் முனைவோர் வீட்டுப் பெண்களும் அதற்குரிய தன்னம்பிக்கையைப் பெற்று செயல்பட வேண்டும்.
– க. ஜெயகிருஷ்ணன்