தமிழ்நாடு மின்சார வாரியம் 25 எச்பி-க்கு மேல் மின் இணைப்பு உள்ள பயனீட்டாளர்களின் மின் அளவைக் கணக்கிடும்போது பவர்ஃபேக்டர் என்கின்ற ஒன்றையும் கணக்கிட்டு, அதை மின்கட்டணத்துடன் சேர்க்கிறது. பவர்ஃபேக்டரை முன்பு எல்லாம் தனியாக குறிப்பிட்டுக் காட்டுவார்கள். இதனால் மின் பயனீட்டாளர்கள், மின்சார பயன்பாட்டுக்கான கட்டணம் சரியாக கணக்கிடப்பட்டு உள்ளதா என்பதை அறிய முடிந்தது.
ஆனால், இப்போது மீட்டர் கணக்கீட்டு அட்டையில், இதர கட்டணங்கள் என்ற தலைப்பில் மின்சார வரி, அனுமதிக்கப்பட்ட கிலோ வாட்டுக்கான(ரிகீ) கட்டணம் ஆகியவற்றுடன் பவர்ஃபேக்டர் கட்டணத்தையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக இதர கட்டணம் என்று குறிப்பிடுகிறார்கள். இது மிகவும் குழப்பத்தை விளைவிக்கிறது. இதனால் மின் பயனீட்டாளர்களுக்கு பண இழப்பும் ஏற்படுகிறது.
மின் பயனீட்டாளர்களுக்கு அவர்கள் எந்தெந்த இனத்தின் கீழ் எவ்வளவு பணம் செலுத்துகிறோம் என்பது தெளிவாக தெரிய வேண்டும். ஆகவே இனி வரும் காலங்களில் டான்ஜெட்கோ மீட்டர் அட்டையில் இதர கட்டணங்கள் என்ற தலைப்பில் குறிப்பிடும் கட்டணத்தில் மின்சார வரி, அனுமதித்த கிலோ வாட்டுக்கான கட்டணம், பவர்ஃபேக்டர் கட்டணம் போன்றவற்றை தனித்தனியே தெளிவாக குறிப்பிட்டுத் தர வேண்டும்.
தற்போது மின் பயனீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதன் கணக்கு விவரங்களை கணினி மூலம் தெரிந்து கொள்ள முடிவதும், கணினி வாயிலாகவே மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடிவதும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. ஆனால் கணினி முறையில் பணம் செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் பல தவறான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. அவை,
கணினி முறையில் இணையத்தில் கட்டணங்களை பதிவேற்றுவது, மின் கணக்கீடு எடுத்துச் சென்ற நாளில் இருந்து இத்தனை நாட்களுக்குள் பதிய வேண்டும் என்ற கணக்கு இல்லாமல், பலமுறை மிகவும் தாமதமாக பதியப்படுகிறது. இதனால் வாடிக்கையாளருக்கு மின்வாரியம் அளிக்கின்ற கருணைக் காலம் குறைகிறது. இதைத் தவிர்க்க கணக்கு எடுத்த அடுத்த நாளிலேயே கட்டண விவரங்களை இணையத்தில் பதிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
பல முறை மின் கணக்கீட்டுத் தொகை இல்லாமல் ஸ்லிப் என்ற தலைப்பில் பல்வேறு தொகைகள் பதியப் படுகின்றன. அந்த தொகை எதற்கானது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படுவது இல்லை. இது தொடர்பாக உரிய அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டால், உதவிப் பொறியாளரைக் கேளுங்கள்; கணினியில் பதிபவரைக் கேளுங்கள்; மின் கணக்காளரைக் கேளுங்கள் என அலைக்கழிக்கிறார்கள். இதற்குள் பணம் செலுத்த வேண்டிய நாட்கள் நெருங்கி விடுவதால் விவரம் தெரியாமலேயே பணத்தை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு முன்னர், மின் கட்டணத்தைத் தவிர்த்து வேறு இனங்களில் பணம் கட்ட வேண்டும் என்றால், ஒப்புகை பெறத்தக்க கடிதத்தை நேரடியாக பயனீட்டாளருக்குக் கொடுப்பார்கள். தற்போது கணினியில் எந்த ஒரு விளக்கமும் தெரிவிக்காமல் வெறும் ஸ்லிப் என்ற தலைப்பில் தொகைகளைக் குறிப்பிட்டு, அதையும் உடனடியாக செலுத்தச் சொல்வது முறையானதாக இல்லை.
எனவே, ஏற்கெனவே செய்தது போல நேரிடையாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ பயனீட்டாளருக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது மேற்படி பணம் செலுத்த வேண்டிய கடிதத்தை கணினியில் பதிவேற்றம் செய்து, பயனீட்டாளர் அதை அச்சு எடுத்துக் கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட வேண்டும். இதை தவிர்த்து வெறும் ஸ்லிப் என்ற பெயரில் தொகையை மட்டும் குறிப்பிட்டு கட்ட சொல்வது நியாயமானது அல்ல.
அண்மைக் காலமாக மின்சார வாரிய மீட்டர்கள் பழுது அடைவது அதிகரித்து உள்ளது. தொழில் முனைவோர் வாரியத்துக்கு புகார் அளித்தால், விரைவில் பழுதான மீட்டரை மாற்றி புது மீட்டரைப் பொருத்தித் தருவது இல்லை. மேலும் ஒவ்வொரு முறை மீட்டரை மாற்றும் பொழுதும், புது மீட்டருக்கு உண்டான தொகையையும் வசூலிக்கிறார்கள். கழற்றிக் கொண்டு போன பழைய மீட்டர்களே பெரும்பாலும் பழுது நீக்கி மாட்டப்படுகின்றன. அப்படி பழுது நீக்கி மாட்டப்பட்ட மீட்டர்களுக்கும் புது மீட்டருக்கான தொகையை வசூலிக்கிறார்கள்.
இன்றைய காலக் கட்டத்தில் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையேதான் தொழிலை நடத்திக் கொண்டு இருக் கின்றன. இதைப் போன்ற நிலையில் மின்சார வாரியம் தொழில் முனை வோருக்கு ஆதரவாக நடந்து கொண்டால் தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். இவற்றை எல்லாம் சிந்தித்து மின்வாரிய அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் குறைகளைக் களைந்து தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
– ஜி. சங்கரன், தலைவர், டான்பா (26692324, 26692758)