இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 7.1 விழுக்காடாக இருந்ததாக அரசு அறிக்கையில் காண்கிறோம். IMF World Economic outlook (october-2016) அறிக்கை, 2016-17 -ல் மிக வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. சராசரி ஆண்டு வளர்ச்சி 1980-2016 ஆண்டுகளில் 6.3% என்றும், 2010 -ல் மிக உயர்ந்து 10.3% என்றும், மற்றும் மிகத் தாழ்வாக 1991-ல் 1.1.% எனவும் வளர்ச்சி இருந்தது என்று இவ்வறிக்கை கூறுகிறது.
இதற்கு எதிர்மாறாக, ஏப்ரல் – ஜுன் 2017 காலாண்டில் பொருள் உற்பத்தி உயர்வு 5.7% என வீழ்ச்சி அடைந்து உள்ளது.
பொதுவாக அரசும், அரசியல்வாதிகளும், மற்றும் பொருளாதாரம் தெரியும் என்பவர்களும், பொருள் உற்பத்தி உயர்வு, மக்கள் நலன் உயர்வுக்கு சான்று என்பர்; ஆகவே பொருள் உற்பத்தி உயர்வு நல்ல அரசாட்சியைக் குறிக்கிறது என மனநிறைவு அடைவதையும் பார்க்கிறோம்.
மக்கள் நலன்
நாட்டின் உற்பத்தி உயர்ந்து வருவதால் மாத்திரமே மக்கள் நலன் மேம்படுகிறது என்று கூறுவது சரி அல்ல. ஏழை மக்களுக்கு மேலும் மேலும் இலவசங்களை கொடுப்பதை “மக்கள் நல திட்டங்கள்” என்று கூறினால் கூட, மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்த அவை உதவாது.
அடிப்படையில், பொருளாதார நல உயர்வு என்பது, ஒரு தனி நபர் வேலை வாய்ப்பு மூலமாக உண்டாகும் நிதி சார்ந்து தேவைகள் சந்திக்கப்படும் நிலை உயர்வைக் குறிக்கிறது.
பொதுவாக, நாட்டின் பொருள் உற்பத்தி, எழுத்தறிவு, மருத்துவர்கள் எண்ணிக்கை, சுற்றுச்சூழல் தூய்மை, போன்றவற்றின் உயர்வை வைத்தும் மக்கள் நலன் நன்றாக இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும், வேலை இன்மை குறைந்து மக்களின் வருவாய் உயர்வின் உறுதிப்பாடு மூலமாக வாங்கும் திறன் அதிகரிப்பதும், அரசு மக்களுக்குத் தேவையான பொது நல வசதிகளை ஏற்படுத்துவதும்தான் மக்கள் நலன் (அல்லது வாழ்க்கைத்தரம்) உயர வழி வகுக்கும்.
அதிக வருவாய் உள்ளவர்களுக்கும், சொற்ப வருவாய் உள்ளவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமானால் பொருள் உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி மக்கள் நலனை உயர்த்தவில்லை என்பதைக் குறிக்கிறது.
வறுமைக்கோடு மாயை
மத்திய திட்டக் கமிஷன், மற்றும் பொருளாதார வல்லுநர் குழுக்கள் கணித்து இருக்கும் இந்தியாவின் வறுமையில் இருப்போர் தொகை ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக இருக்கிறது. மக்கள் தொகையில் (2010), வறுமையில் இருப்போர் 37% என டெண்டுல்கர் குழுவும், 50% என்று சாக்சனா குழுவும், 77% என அர்ஜுன் சென்குப்தா கமிஷனும் கணித்து இருக்கின்றன. ரங்கராஜன் கமிட்டி (2014), நாள் வருமானம் ரூ.47 க்கு குறைவாக ஆகப் பெறுபவர்கள் வறுமையில் இருப்போர் எனவும், இதன்படி 30% மக்கள் வறுமையில் இருப்பதாகவும் கணக்கு இட்டிருக்கிறார்கள்.
இவை எல்லாமே மாயையான அல்லது உண்மை நிலைக்கு முரணான கணிப்புகள் ஆகும். ஒருவருக்கு வேண்டிய வீடு, உணவு, உடை, சுகாதாரத் தேவை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வருமான அளவுக்குக் கீழே உள்ளவர்கள் எல்லாருமே ஏழைகள்தான் என்று கூறுவதுதான் சரியானதாகும். இதன்படி, நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
வறுமை வளையம்
பொருளாதார மேதை ரக்னர் நர்க்ஸ், “ஒரு ஏழை நாடு தொடர்ந்து ஏழை நாடாகவே இருக்கும்” (A country is poor because it is poor) என்றார். இக்கூற்று, ஒரு ஏழை நாடு “வறுமை வளையம்” என்பதற்குள் சிக்கிக் கொண்டு இருப்பதைக் குறிக்கிறது.
ஏழை நாடுகள், “வருமானம் குறைவு, சேமிப்புக் குறைவு, மூலதனம் குறைவு, உற்பத்திக் குறைவு வருமானம் குறைவு” என்ற பொருளாதார சுழற்சியிலேயே சிக்கி இருப்பதுதான், வறுமை வளையத்துக்குள் சிக்கி இருக்கும் நிலையாகும்.
வள உயர்வு?
ஒரு நண்பர் என்னிடம்: “25 ஆண்டுகளுக்கு முன் மாதம் ரூ.500 சம்பாதித்த பொழுது வரவும் செலவும் சமமாக இருந்து மீதம் இல்லாமல் இருந்தது; இப்பொழுது மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறேன். இன்றும், வரவு முழுவதும் செலவாகி மீதி ஒன்றும் இல்லாமல்தான் இருக்கிறேன்” என்று கூறினார். ஆகவே, இவருக்கு வாழ்க்கைத் தரம் பல ஆண்டுகளாக உயரவில்லை என்பது உண்மையாகும்.
பொருளாதார வளர்ச்சி கூடி வரும் பொழுது, மக்கள் வாழ்க்கைத் தரம் உயராவிட்டால், பொருளாதார கொள்கையில் குழப்பமோ அல்லது குறைபாடோ இருக்கிறது. என்பதையே காட்டுகிறது. இந்த நிலையில், நாட்டின் வேகமான உற்பத்தி உயர்வு மக்களிடையே வருவாய் ஏற்றத் தாழ்வுகளை மிகவும் அதிகப்படுத்தி விட்டது.
விலையேற்றம்
எப்பொழுதும் இல்லாத அளவு மொத்த விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் 2.2% -ஆக இப்பொழுது குறைந்து விட்டதாகவும், இது பொருட்களின் விலை குறைவதற்கு ஏற்றதாக இருப்பதாகவும் அரசு அறிக்கை கூறுகிறது. இக்கூற்றை மக்களிடம் சொன்னால், “பல பொருட்களின் விலை குறையவில்லையே; மாறாக, விலைவாசி ஏற்றத்தால் முன்பு இருந்ததை விட எங்கள் பொருளாதார நலன் குறைந்து விட்டது” என்றுதான் சொல்கிறார்கள்.
இதற்குக் காரணம், மொத்த விலை ஏற்றத்தை விட (2.2%), அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது..
சான்றாக, கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு 2015-ல் ரூ.100 என்றிருந்து, 2016-ல் ரூ.200 என உயர்ந்து, இப்பொழுது ரூ.140-க்கு விற்கப்படுகிறது. அதாவது, இதன்படி, விலை ரூ.60 குறைந்தாலும், 2015-ல் இருந்தததை விட இப்பொழுது ரூ.40 விலை உயர்ந்து இருக்கிறது.
ஆகவே, விலை உயரும் வேகத்தில் வருமானம் உயரவில்லையானால் வாழ்கைத் தரம் பாதிக்கப்படுகிறது.
பல காரணங்கள்
மக்கள் தொகை வேக வளர்ச்சி (இந்தியா: ஆண்டுக்கு 1.7%; வளர்ந்த நாடுகள்: 0.7%),
தனி நபர் சராசரி வருமான வளர்ச்சி 2016-17ல் 5.8% ஆக (மொத்த உற்பத்தி வளர்ச்சி 2016-17-ல் 7.1%) குறைவாக உள்ளது.
2016-17-ல் நாட்டின் மொத்த வருவாயில், வேளாண் உற்பத்தி 15.1%, தொழில் உற்பத்தி 31.1%, சேவைத்துறை பங்கு 53.8%. ஆகவே, கிராமப் புறங்களில் வாழும் சுமார் 65% மக்களின் வருவாய், நாட்டின் மொத்த வருவாயில் 15% மட்டுமே ஆகும். இவை நாட்டின் விடாப்பிடியான வறுமை நிலைக்கு முக்கிய காரணங்களாகும்.
விளைவுகள்
தொடர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், பெருவாரியான மக்களை மிகவும் பாதித்துக் கொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், “சேவா” எனும் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, விலை ஏற்றத்தினால், ஏழைக் குடும்பங்கள்:
3 வேளைக்குப் பதில் 2 வேளை தான் உணவு உண்ண முடிகிறது;
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாத்திரமே செல்ல முடிகிறது;
பேருந்தில் பயணம் செய்ய பணம் இல்லாமல் நடந்து செல்கின்றனர்;
75% வருமானம் உணவுச் செலவுக்கே போய்விடுகிறது,
பொருளாதார வல்லுநரும், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருமான திரு. ரகுராம் ராஜன் கூறுகிறார்: ”’இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, 8 முதல் 10 சதவீதம் வளர்ச்சியை எட்டும் முன்பு யாரும் மார்தட்டிக் கொள்ளக் கூடாது. நாம் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு உள்ளோம் என்று கருதிக் கொள்கிறோம். ஆனால், சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட 5 மடங்கு பெரிதாக உள்ளது. ‘இந்தியா வேகமாக வளர்கிறது’ என்று கூறப்படுவது விவரம் இல்லாமல் கூறப்படுவதுதான்”, என்று.
ஆகவே, இந்தியா ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதப் பொருள் உற்பத்தியை தொடர்ந்து அடைய வேண்டுமானால் வேளாண் உற்பத்தி வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும். மேலும், நாட்டின் வேலை இல்லாத மக்களுக்கு வேலை வாய்ப்புகளை விரைவாக ஏற்படுத்துவதற்கு ஏற்ப பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைத்து செயல் படுத்துவதும் மிக அவசியமாகும்.
வறுமை வளையத்திற்குள் சிக்கி இருக்கும் பெரும்பான்மை மக்களை அவ்வளையத்தை உடைத்தெறிந்து விடுவித்து நலன் பெறச் செய்யும் விதமாக அரசு செயல்படுவது அவசரமான அவசியமாகும்.
– எஸ். ஜெ. எஸ். சுவாமிதாஸ் (9841024391)
முன்னாள் இயக்குநர், பொருளாதாரத் துறை,
இந்திய ரிசர்வ் வங்கி