யுனைட்டட் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின் சென்னை, மயிலாப்பூர், லஸ் கிளை மேலாளர் திரு.வி.ஆர். ரவிக்குமாரை சந்தித்து வளர் தொழில் இதழுக்காக பேட்டி கண்டோம்.
வணிக நிறுவனங்களுக்குத் ‘தீ’ காப்பீட்டு (Fire Insurance) மிக மிக அவசியமான ஒன்று என்று கூறிய அவர் அதற்கான காரணங்களை விவரித்தார். அவருடைய பேட்டியில் இருந்து…
எதிர்பாராத வகையில் ஏற்படும் தீ விபத்தில், அசையும் சொத்து-அசையா சொத்து இரண்டுமே பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு வணிகர், மேற்கூறப்பட்ட இரண்டு வகை சொத்துக்களுக்கும் ‘தீ’ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அசையும் சொத்து என்றால், கம்ப்யூட்டர், ஜிராக்ஸ் எந்திரம் உள்ளிட்ட தளவாடங்கள், மூலப்பொருட்கள், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் போன்றவை அடங்கும்.
அசையா சொத்துக்கள் என்றால் தொழில் செய்யும் இடம் (கட்டிடம்), இக்கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் (Interiors) ஆகியவற்றைக் குறிக்கும்.
காப்பீடு என்றாலே ஒரு பொருளுக்காக அதன் உரிமையாளர் எடுத்துக் கொள்வதுதான். ஆனால், தீ காப்பீட்டுத் திட்டத்தில் வணிகர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் தொழில் நிமித்தமாக வேறு நபருக்குச் சொந்தமான பொருட்களை தற்காலிகமாக தம்மிடம் வைத்திருக்க நேரிடலாம். அப்போது தீ விபத்து ஏற்பட்டு இந்தப்பொருட்களும் சேதமடையும். இது போன்ற சமயங்களில், இந்தப் பொருட்களுக்கு உரிமையாளர் இவர்கள் இல்லாவிட்டாலும் பொருளுக்காக தீ காப்பீடு எடுத்துக் கொள்ள இவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சான்றாக, ஒரு லட்சம் ஆயத்த உடைகளை ஒரு நிறுவனம் தயாரித்து அதில் குறிப்பிட்ட வடிவமைப்பு (Design). செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயத்தில் இந்த ஆடைகளுக்கும் ‘தீ’ காப்பீடு எடுத்துக் கொள்ள அந்த வடிவமைப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இப்படி எடுக்கப்படும் தீ காப்பீட்டு திட்டத்தில் புயல், மழை, வெள்ளம், மின்னல்-இடி தாக்கும் நிகழ்வுகளும் அடங்கிவிடும். பூகம்பம், பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற அசாதாரண நிகழ்வுகள் மட்டும் இதில் அடங்காது. இவற்றிற்கும் சேர்த்துதான் காப்பீடு வேண்டும் என்றால் வழக்கமான பிரிமியத்துடன் கூடுதல் தொகை சிறிது செலுத்த வேண்டியிருக்கும்.
‘தீ’ காப்பீடு திட்டத்தை எந்தவொரு வணிகரும், மிகச்சிறிய கடையாக இருந்தாலும் பெரிய நிறுவனமாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். காப்பீடு எடுப்போர் தம்முடைய சொத்து விவரங்களை அன்றைய சந்தை மதிப்புப்படி குறிப்பிட வேண்டும். அப்போதுதான் காப்பீடு எடுப்பதன் நோக்கம் சரியானதாக இருக்கும். ஒரு சிலர் தவறான புரிதல் காரணமாக, பிரிமியம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மதிப்பைக் குறைத்துப் போட்டு விடுவார்கள். அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் பட்சத்தில் மிகவும் வருந்துவார்கள். எனவே விண்ணப்பத்தில் அன்றைய சந்தை மதிப்பைக் குறிப்பிடுவதுதான் சரியான செயல்பாடு.
எதிர்பாராக வகையில் தீ விபத்து நடந்துவிட்டால், அன்றைய தினத்தில் இருந்து 7 நாட்களுக்குள் தொடர்புள்ள காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுத்து மூலமாக காப்பீடு எடுத்தவர் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து இழப்பீட்டுக்காக தரப்பட்ட விண்ணப்பத்தின் மீது விசாரணை நடைபெறும். காப்பீட்டு நிறுவனத்தின் ‘சர்வேயர்’ நிகழ்வு இடத்துக்கு வந்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிக்கை தருவார். அந்த அறிக்கையில், தீ விபத்துக்கான காரணம், இழப்பீட்டின் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
தீ விபத்து உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், இழப்பீடு கிடைக்காது. எனவே உண்மையாக நடந்து கொள்வது மிக மிக இன்றியமையாதது.
‘தீ’ காப்பீட்டுக்கான ‘பிரிமியம்’ தொகை பெரிய அளவுக்கு இருக்காது. ஒவ்வொரு வணிகரும் மிக எளிதாக செலுத்தும் வகையில்தான் இருக்கும்.
வணிகர் அல்லாத தனிநபர் வீடுகளுக்கும் தீ காப்பீட்டு திட்டம் உண்டு. வணிக நிறுவனமாக இருந்தால் ஆண்டுதோறும் பிரிமியம் தொகை செலுத்த வேண்டும். தனிநபர் வீடுகளுக்கு 3, 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரிமியம் கட்டினால் போதும் என்ற காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன.
‘தீ’ காப்பீடு கோரும் தொழில் நிறுவனங்களுக்கு அவை வைத்திருக்கும் பொருள் மற்றும் அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப பிரிமியம் நிர்ணயிக்கப் படுகிறது, என்றார் திரு.வி.ஆர்.ரவிகுமார்.
-ம.வி.ராஜதுரை
Join our list
Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.