அரசு உயர் அதிகாரிகளிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

திரு.எஸ். ராஜரத்தினம்

ஓர் அரசு ஊழியர் பொதுவாக ‘அதிகாரி ‘ என்றே அறியப்படுகிறார். அவருடைய பணிக் காலத்தில் அவர் வளர்த்துக் கொண்டு உள்ள தனிப் பன்புக் கூறு அவருக்கு இருக்கிறது. அவர் தன்னை இயல்புக்கு மீறிய திறமை உள்ளவராக நம்புகிறார். ஏனென்றால் அவர் ஒரு போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது மட்டும் அல்ல; அவர் யாருடன் செயல் தொடர்பு வைத்து இருக்கிறாரோ அந்த மக்களுக்கு மேலான திறமை படைத்தவராகத் தம்மைக் கருதிக் கொள்கிறார். அவருடன் பணியாற்றுவோர், அவருக்குக் கீழே உள்ள அலுவலர்கள், அவரிடம் ஏதாவது ஓர் உதவியை நாடிவரும் மக்கள் என்று இவர்கள் அனைவரையும் விடத் தம்மை மேலானவராக அவர் கருதிக் கொள்கிறார்.

அரசுப் பணியில் நுழைகின்ற போதே ஊதி உப்பிய தன்முனைப்புடனேயே அவர் உள்ளே நுழைகிறார். அரசுப் பணியில் ஓர் அரசு ஊழியராகத் தாம் சேர்ந்து உள்ளதாக அவர் கருதவில்லை. மாறாக அரசு வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிலருள் ஒருவராகத் தம்மைக் கருதிக் கொள்வார்.

பம்பாயில் என் பயிற்சிக் காலத்தில் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கபட்ட பாடம் ‘அலுவலக நடைமுறைச் செயற்பாடுகள்’ என்பதாகும்.
தூய்மையான வெண்ணிறக் கதராடை அணிந்த ஓர் அதிகாரி, பல்வேறு துறைகளின் விதிமுறைகளின் சாரத்தை விளக்கிக் கொண்டு இருந்தார். பயணப்படி பெறுவதற்கான தகுதியைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் முதல்நிலை அதிகாரிகளுக்கு ரயில் பயணத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய உரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

இரண்டாம் நிலை அதிகாரிகளாகிய எங்களைப் போன்றவர்களுக்குச் சிறப்பு இரண்டாம் வகுப்பு அளிக்கப்பட்டது. அப்போது ரயிலில் நான்கு வகுப்புகள் இருந்தன. முதல்வகுப்பு, சிறப்பு இரண்டாம் வகுப்பு, பொதுவான இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்பவை அவை.

சிறப்பு இரண்டாம் வகுப்பில் படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்து கொள்ளும் உரிமை இருந்தது. பொதுவான இரண்டாம் வகுப்பில் பயணிகள் உட்காரும் இடவசதியை மட்டும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.

முதல் வகுப்பிற்கும், சிறப்பு இரண்டாம் வகுப்பிற்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. என்னுடன் தகுதி காண் பருவத்தில் இருந்த ஓர் இளம் அதிகாரிக்கு இது எரிச்சல் ஊட்டியது. அவர் ஒரு கேள்வியை எழுப்பினார். ‘எங்களால் மதிப்பீடு செய்யப்பட்டு வரிவிதிக்கப் படுகிறவர்கள் முதல் வகுப்பிலும், அதிகாரிகளாகிய நாங்கள் இரண்டாம் வகுப்பிலும் பயணம் செய்தால், அவர்கள் எப்படி எங்களை மதிப்பார்கள்?’ என்று கேட்டார்.

அந்த விரிவுரையாளர், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார். வாழ்க்கைத் தரத்திலும், தகுதியிலும் வருமானவரி அதிகாரி, தன்னால் வரி விதிக்கப்படுகிறவர்களுக்கு மேம்பட்டவராக இருக்க வேண்டும் என்ற கருத்து எனக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

அந்தக் கேள்வியின் அறியாமையை நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது. பின்னர் நான் எழுந்து சொன்னேன், ‘அய்யா, என்னுடைய நண்பர் கேட்ட கேள்விக்கு துணையாக நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். மும்பையில் வரி செலுத்துவோர் பலர் பெரும் பணக்காரர்கள். அவர்கள் அனைவரும் ‘மலபார் மலை(Malabar Hill) போன்ற உயர்ந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு ‘பூத் கானா (வொர்லி என்ற இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த பழைய கட்டிடம்) வில் இடம் கொடுத்து இருக்கிறார்கள். எங்களுக்கும் ‘மலபார் மலை’ யில் வரிசெலுத்துவோர் வாழும் இடங்களுக்கு உயர்வான இடத்தில் தங்குவதற்கு இடவசதி செய்து தர வேண்டும் என்று நான் கருதுகிறேன். இதைத் கேட்டவுடன் ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்து போனார்கள்.

நான் உண்மையாகவே கேட்கிறேனா, இல்லையா என்று தெரியாமல் அவர்கள் திகைத்தார்கள். ஆனால் அந்த விரிவுரையாளர் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டுப் பின்னர் புன்முறுவல் பூத்தார். நான் கேட்ட கேள்வி அந்த நண்பரைக் கிண்டல் செய்வதற்காகவே, வரி செலுத்துவோருக்கு இணையாக ரெயில் வசதி கேட்ட அவரைக் கேலி செய்வதற்காகவே, என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

அவரைப் பார்த்துச் சொன்னார், ‘நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன். நம்முடைய வாழ்க்கைத் தரத்தில். வரிசெலுத்துகின்ற பணக்காரனை விட நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது தேவையில்லை. வரிசெலுத்தும் பலர் வளமாக இருக்கிறார்கள். ஓர் அரசு ஊழியர் வாங்கும் ஊதியத்தை விடப் பன்மடங்கு வருமானம் அவர்களுக்கு வருகிறது. நான் பேருந்தில் பயணித்து என் அலுவலகத்திற்கு வருகிறேன்; அதே நேரத்தில் என்னால் வரி விதிக்கப் பட்டவர்கள் சொந்த காரில் என் அலுவலகத்திற்கு வருகிறார். அதனால் அவர்களை விட நான் தாழ்ந்தவன் என்று என்னை ஒரு போதும் கருதியதில்லை. அவர்களைப் போல் நாம் வாழவில்லையே என்று நீங்கள் கருதினால் அது தாழ்வு மனப்பான்மை; அதனை நாம் விட்டொழிக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ‘பொதுநலப் பணியாற்றும் மதிப்பிற்கு உரியவர்கள் நாம் என்ற பெருமை நமக்கு இருக்கிறது.’

வகுப்பு முடிந்ததும் விரிவுரையாளர் என்னை தட்டிக் கொடுத்து விட்டுச் சொன்னார். ‘அந்த நண்பருக்கு பொருத்தமான பதிலைக் கொடுத்து விட்டீர்கள். இதே போன்ற சிந்தனையோடு இத்துறையில் உங்கள் நீண்ட பயணம் இனிதே தொடர்வதாக!’

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நான் உதவி ஆணையராக இருந்த போது மீண்டும் அவரைச் சந்தித்தேன். அவர் அப்போது ஆணையர். அவர் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

‘உங்களைப் பற்றி நான் அடிக்கடி கேள்விப் படுவேன்; இந்தத் துறையில் நீங்கள் நன்கு செயல்படுவீர்கள், உண்மையாக உழைப்பீர்கள் என்று நான் கணித்தது உண்மையாகி விட்டதல்லவா!’ என்று சொன்னார் அவர்.

‘உங்களைப் போன்ற நல்லுள்ளம் கொண்டோர் முடிவு செய்து கூற வேண்டியது அது; நானே என்னைப் பற்றிச் சொல்லக் கூடாது. உங்கள் விரிவுரையை அன்று நான் மகிழ்ந்து விரும்பிக் கேட்டதைப் போலவே இன்று எனது பணியை அனுவித்து மகிழ்வோடு செய்து வருகிறேன்’ என்றேன். இருவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

எனக்கு முன் பணியாற்றிய ஒரு நண்பர் ஒருநாள் நெல்லூரில் நான் மிதிவண்டியில் அலுவலகத்திற்குப் போய் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டார். ஒரு விசாரணைக்காக அவர் சென்னையில் இருந்து நெல்லூருக்கு வந்து முகாமிட்டிருந்தார்.

அவர் சொன்னார், ‘நம்முடைய அதிகார (அலுவலக) மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நாம் அதைச் செய்யவில்லை என்றால் நம்மை யார் மதிப்பார்கள்?’

இந்த அறிவுரையை நான் நினைத்துப் பார்க்கிறேன். ‘நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்’ என்ற உயர்வு மனப்பான்மையை அனைத்து அதிகாரிகளும் மிக விரைவில் வளர்த்துக் கொள்கிறார்கள். ‘பொதுமக்கள் மீது ஒரு கருத்தற்ற பாராமுகம், அக்கறையின்மை ஆகிய இவை பொதுவான அறிகுறிகள்.

தங்களைப் பார்க்க வரும் அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதில் இவை வெளிப்படுகின்றன.

என் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றில் ‘நம்மைப் பார்க்க வரும் மக்களைக் காத்திருக்க வைக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்’ என்று அவர்களிடம் அறிவுறுத்தினேன்.

அவர்கள் முன்னரே நேரம் குறித்து அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருந்தாலும் இல்லையென்றாலும் பொதுமக்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது. நீண்ட நாட்களுக்கு முன்னரே வாரியம், ‘நம்முடைய வேலைகளை முறைப் படுத்திக் கொண்டு காத்திருக்க வைக்கும் நேரத்தை மிகமிகக் குறைக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதனை நான் பின்பற்றி வருகிறேன். வேறு ஏதாவது காரணத்திற்காக முன்கூட்டியே கொடுக்கப் பட்ட நேரம் சற்று அதிகமாகி விட்டால் நானே வெளியில் சென்று அல்லது பணியாளர் மூலமாக காத்திருப்போரிடம், ‘இன்னும் நீங்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்’ என்ற செய்தியைத் தெரிவித்து விடுவேன்.

காத்திருந்த மக்கள் விரும்பினால் காத்திருந்து பார்த்து விட்டுச் செல்லலாம் அல்லது இந்த வாரமோ அடுத்த வாரமோ என்னைச் சந்திப்பதற்கான நேரத்தை அலுவலக எழுத்தரிடம் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

சில அதிகாரிகள் நான் கூறியவற்றில் எந்தத் காரணமும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறினர். இது தேவையில்லாத ஒன்று என்று அவர்கள் கருதினார்கள்.

அவர்களில் ஒருவர் சொன்னார், ‘அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றால்; நான் அலுவலகத்தில் சோம்பேறிக் தனமாக உட்கார்ந்திருக்கிறேன் என்றோ, அவர்களை வேண்டுமென்றே காத்திருக்க வைத்திருக்கிறேன் என்றோ பொருளல்ல; வேலைச்சுமை அதிகம் இருப்பதால் ஓய்வில்லாமல் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆதலால் இவ்வாறு காத்திருப்பது தவிர்க்க முடியாதது’ என்றார்.

சில நேரங்களில் இது தவிர்க்க முடியாமல் போய் விடும் என்பது உண்மை தான். ஆனால் இவை வழக்கமான வேலையாகி விடுகிறது. அதற்காக அதிகாரிகள் வருந்துவது இல்லை.தேவை இல்லாமல் மக்களை நீண்ட நேரம் காக்க வைப்பதற்காக நாம் வருந்த வேண்டாமா?

ஓர் அதிகாரி, வேறு சில அதிகாரிகளும், கணக்காளர்களும் உடனிருந்த உரையாடலின் போது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, ‘அதிகாரிகள், அவர்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்கப்படுகின்ற வகையில் அவர்கள் நடந்து கொள்வது தேவையாகின்றது’ என்று சொன்னார்.

அவர்கள் அதிகாரிகளை எளிதாக நினைத்து நடத்தக் கூடாது. அவர்கள் மதிப்போடு நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓர் அரசு அதிகாரி என்ற முறையில் அவர்தம் கடமைகளைச் செய்யும்போது அவருக்கு உரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். நம்மில் சில அதிகாரிகள் மலிவான விளம்பரத்திற்காக, அரசு அதிகாரி என்ற முறையிலான உயர் தன்மையைக் கடைப் பிடிப்பதில்லை,’ என்று பேசினார்.

அது குறிப்பாக என்னைப் பற்றிக் கூறப்பட்ட கள்ளத் தனமான குறிப்பு. மேலும், அவர் தொடர்ந்தார். அவரது வரம்புக்கு உட்பட்ட பகுதியில் இருந்த ஒரு வங்கிக்கு வரைவோலை பெறுவதற்காகப் போனாராம். அங்கு நீண்ட நேரம் அவர் காக்க வைக்கப்பட்டு இருக்கிறார்.

‘அங்கிருந்த வங்கி மேலாளருக்கும், உதவியாளர்களுக்கும் நான் வருமான வரி அதிகாரி என்பது நன்கு தெரியும். விரைவில் எனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு நான் கத்தினேன். பின்னர் ஒரு வாரம் கழித்து அந்த வங்கி மேலாளருக்கு ஒரு குறிப்பாணை அனுப்பினேன். வரி செலுத்துநர் ஒருவரின் அந்த வங்கிக் கணக்கை நான் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். ஆதலால் அந்த வரி செலுத்துநரின் கணக்கேடுகளை எடுத்துக் கொண்டு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு ஆணை அனுப்பினேன். காலை பத்து மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் 12:30 மணிக்கு அவரை அழைத்தேன். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குரிய கணக்குகளின் ஒரு படியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி விட்டேன். இது அவருக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும். ஒரு வருமான வரி அதிகாரியின் மதிப்பு மிக்க நேரத்தை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் வருமான வரி அதிகாரியை மலிவாக எண்ணி நடத்தக் கூடாது என்பதை இனி அவர் புரிந்து கொள்வார்.’

இவ்வாறு அவர் தற்பெருமை பேசிக் கொண்டு போனார். அதைப் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த நாங்கள் அவரது கொடுமை தாளாமல் வியப்படைந்து போனோம். அங்கு இருந்த பட்டயக் கணக்காளர்கள் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் அந்த அதிகாரி, எங்களுடைய எதிர் வினைச் செயல்பாடுகள் அவரை ஆதரிப்பனவாக இல்லை என்பதை உணராமல், அரசு அதிகாரியின் மதிப்பையும் மாண்பையும் காப்பாற்றிக் கடைப்பிடித்தமைக்காக அவர் பாராட்டப் படுகிறார் என்று நினைத்தார்.

இரக்கமன்றி வரிª சலுத்துவோரை நீண்ட நேரம் காத்திருக்கச் செய்வது, இப்போது பொது இயல்பாகி விட்டது. ஆங்கிலேயர் ஒருவர், வரித்துறையில் இயக்குநராக இருந்த போது அனுப்பிய பழைய சுற்றறிக்கை ஒன்று மக்களிடம் அன்பு காட்டுமாறு வற்புறுத்துகிறது.

வரி செலுத்துநர் ஒருவரிடம், ஓர்அதிகாரி, தான் அவரை விட உயர்ந்தவராக நடந்து கொள்ளக் கூடாது. அதிகாரி வரி செலுத்துநரின் இடத்தில் தன்னை வைத்து பார்க்க வேண்டும். அப்பொது அவரும் தனது வருமானத்தையே விரும்பியே துணிவோடு குறைத்துக் காட்டலாம்; அல்லது அவரது வணிகச் சூழல்களில் காரணமாக தனது வருமானத்தையே குறைத்துக் காட்டலாம். மதிப்பீடு செய்யப் பெற்று வரி செலுத்தும் அவர் இப்போது இரக்கமில்லாமல் நடத்தப் படுவதை போல அந்த அதிகாரி நடத்தப் பட்டால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? – இந்தக் கேள்வி தான் அதில் எழுப்பப் பட்டிருக்கிறது. நான் தகுதிகாண் பருவத்தில் இருந்த போது எங்களுக்கு அலுவலக நடைமுறைச் செயல்பாடுகளை பற்றிப் பாடம் நடத்திய வருமானவரி அதிகாரி இந்தச் சுற்றறிக்கையை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து காட்டிய போது, அந்த அறிக்கை தந்த பாடம் என்னை மிகவும் ஈர்த்துக் கொண்டது.

அதிகாரிகளின் தன் முனைப்பு, அலுவலகத்துடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. அது எல்லா இடங்களிலும் பரவி நிற்கிறது. எடுத்துக் காட்டாக அதிகாரிகள் கடை வீதிக்குச் செல்லும்போது அவர்களின் பணியாளர்களையும் உடன் அழைத்துச் செல்கின்றனர். பணியாளர்கள் தங்கள் அடையாள முத்திரையை அணிந்தவாறு அவர்களுடன் போகிறார்கள்.

விற்பனை வரித் தீர்ப்பாய உறுப்பினராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட போது, என் வீட்டில் எனது அலுவலகப் பணிகளைக் கவனிப்பதற்கு உதவியாகத் தனிப் பணியாளர் ஒருவர் நியமிக்கப்படுவதாக என்னிடம் கூறினார்கள். அது ஒர் அதிகாரிக்கு தேவையானது என்று சொன்னார்கள். அது நான் ஏற்றிருக்கும் பதவிக்காகத் தரப்பட்டது.
மாநில அரசின் உயர் அதிகாரிகள், பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது, எனக்கு அமர்த்தப்படவிருந்த அந்தப் பணியாளரின் மனத்துயரத்தை எண்ணிப் பார்த்தேன்; எனக்கு அப்படி யாரையும் பணி செய்ய அனுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

Also Read: பெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’!

இதற்காகவே- இந்த உரிமையை விட்டுக் கொடுத்தமைக்காக மாதம் ரூ.75 எனக்கு கிடைத்தது. அதிகமாக ஓர் எழுபத்தைந்து கிடைத்ததால் எனக்கு மகிழ்ச்சி. மய்ய அரசு அதிகாரிகள், கடை நிலை ஊழியர்களை (Class 4)தங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம்தான். அது பொது இயல்பாகி விட்டது. ஜூனாகத்தில் என் அனுபவங்களைப் பற்றி எழுதுகிற போது இதைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
அங்கு பார்ப்பனச் சமையல்காரர்களுக்கு ‘மகராஜ்’ என்று பெயர். அதிகாரிகளின் வீடுகளில் இவர்களைச் சமையல் வேலைக்கு அமர்த்துவார்கள். இது எழுதப் படாத ஒரு சட்டம்; இப்போது இவர்களை சமையல் வேலைக்கு அமர்த்தும் பழக்கம் இல்லை.
ஆனால் ஓர் அதிகாரி, தன் சொந்த நலன்களுக்காகத் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இன்னும் நிலைத்து இருக்கிறது.

என் பணிக் காலத்தில் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் குறைவானது என்று சொல்ல முடியாது; ஒரு வசதியான நல்ல வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான அளவு இருந்தது. என் ஓய்வூதியத்தில் உயர்த்தபட்ட தொகையில் இருந்து சம்பளம் எவ்வளவு கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

நான் பணியில் இருந்த போது கூட இவ்வளவு சம்பளம் ஒரு போதும் பெற்றது இல்லை. இவ்வளவு ஊதியம் பெறும் அவர்கள் கடமை உணர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

– வரியியல் வல்லுநர் திரு. ச. இராஜரத்தினம் எழுதிய ”என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்” நூலில் இருந்து. வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1, ஈ. வெ. கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. விலை: ரூ.600

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here