சென்னை, வடபழனி அருகே ஓட்டல் அம்பிகா எம்பயர் என்ற பிரபலமான ஏழு அடுக்கு மூன்று நட்சத்திர ஓட்டல் உள்ளது.
இதன் பொது மேலாளர் திரு. ஆர். காளத்திநாதன், வளர்தொழில் இதழுக்கு இன்றைய ஓட்டல் தொழில் குறித்து பேட்டி அளித்த போது,
“ஓட்டல் வர்த்தகம் மிக நன்றாகவே உள்ளது. நிறைய புதுப்புது ஓட்டல்கள் வருகையை உலகமெங்கும் பார்க்கலாம். இந்தியாவிலும் நன்றாகவே நடைபெறுகிறது. அதாவது சங்கிலித் தொடராக ஓட்டல்கள் இயங்கும் காலம், கனிந்து வெற்றி நடை போடுகின்றன.
நகரத்தின் நடுப்பகுதியில் இந்த ஓட்டல் அமைந்திருப்பதால் 10 நிமிடத்தில் தி.நகர் போய் விடலாம். 20 முதல் 25 நிமிடத்தில் ஏர்போர்ட் போய் சேரலாம். 25 நிமிடத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து விடலாம். அந்த அளவுக்கு இடவசதி சூழல் நடுவே நாங்கள் இருக்கிறோம்.
ஒரு ஓட்டல் தொழிலுக்கு முக்கியமானவை, நல்ல இடம், அந்த ஏரியாவிலே வீடுகள் நிறைய இருக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் எவ்வளவு கம்ப்யூட்டர் கம்பெனிகள் இருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ் இருக்கணும். குறிப்பாக போக்குவரத்து வசதிகள் உடனுக்குடன் கிடைக்கிற மாதிரியான சூழ்நிலையும் அவசியம்.
திருமண விழாக்கள் நடத்துவாங்க, குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடுவாங்க, அதே மாதிரி தொழில் நிறுவனங்கள் கூட்டங்களை நடத்துவார்கள்.
இது மாதிரி பல்வேறு விஷயங்களையும் முன்யோசனையுடன் சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கிறது. ஓட்டல் தொழில் ஒரு மதிப்பும், மரியாதையும் மிக்கத்
தொழிலாகப் பார்க்கிற அளவுக்கு சமுதாயக் கண்ணோட்டம் அமைந்திருக்கிறது.
பல திருமண விழாக்கள் இப்போதெல்லாம் ஓட்டல்களில் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு காது குத்துதல், வயதுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துதல் இப்படி வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் அனைத்தும் ஓட்டல்களில் நடைபெற்று வருகின்றன. நம் பண்பாட்டில் விருந்தினர்களை உபசரிப்பது என்பது நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.
நகரங்களில் பரபரப்புக்கும், வேகத்திற்கும் ஈடு கொடுக்கிற மாதிரி அமைதியான, இதமான சூழ்நிலையை ஓட்டல் அறைகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. முழு பாதுகாப்பை உணர்கின்றனர். மிக அழகான செயற்கை கலந்த இயற்கைச் சூழலில் தங்களின் வீட்டுக்குள் உறங்குவது போல தூங்குபவர், அதிகாலையில் எழுந்து ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஜாலியாக நீச்சல் அடித்துவிட்டு, பின்னர் ஷவரில் குளித்து முடித்து, நல்ல சூடான சிற்றுண்டி யோடு தம் பணிகள் நோக்கிச் சென்று, புத்துணர்ச்சியோடும், புதுதெம்போடும், சிக்கெனப்போய் ஸ்டைலாக நிற்கும்போது அவரைப் பார்த்ததும், அவர் எதிர்பார்த்தவற்றை நிர்வாகம் உடனுக்குடன் அவருக்குச் செய்துக் கொடுத்து விடுகிறது. அந்த அளவுக்கு முகமும் அகமும் மலர வைத்து அனுப்பும் வசதிகள் நிறைந்தவை எமது ஓட்டல் பிசினஸ் அறைகள்.
எங்கள் ஓட்டலில் பட்ஜெட் பயமே தேவையில்லை. எவ்வளவு செலவு பண்ண விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு பொதுவான பட்ஜெட் இருக்கு.
ஒரு அறை 4500 ரூபாய்க்கும் கிடைக்கும், 5000-க்கும் இருக்கின்றன. நமக்கு எந்த பட்ஜெட் பொருந்துமோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம். இது மாதிரியே பட்ஜெட் ஒட்டல், மீடியம் மார்க்கெட், லக்சுரியஸ் ஓட்டல்கள்-னு பிரிச்சு வெச்சிருக்கிறோம்.
ஒரு நான்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் என்னென்ன வசதிகள் கிடைக்குமோ அந்த வசதிகளை நாங்கள் இங்கேயே தருகிறோம்.
எவ்வளவு ஓட்டல்கள் வந்தாலும், நல்ல சேவை; பொறுப்புள்ள கவனிப்பு; இனிமையான உபசரிப்பு இந்த மூன்றிலும் நாங்கள் மிகவும் கவனம் செலுத்துகிறோம்.
இன்னொரு முக்கியமான விஷயம் ஓட்டலைப் பொருத்த வரையில் எப்பவுமே படுசுத்தமாக புத்தம் புதுசாக பளிச் என்று இருக்கணும். கண்களுக்கு புதிதாகத் தெரிய வேண்டும்.
மக்களின் தேவைகள் ஆய்வில் எடுத்துக் கொண்டு அந்த ஆய்வின் முடிவுப்படி ஓட்டல்களை கட்டுகிறார்கள் (நாங்களும் அப்படியே). திருபெரும்புத்தூரில் ஹுண்டாய் கார் கம்பெனி உட்பட பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்ற காரணத்தால், மதுரவாயில் பக்கமாக நிறைய ஓட்டல்கள் வரத் தொடங்கிவிட்டன.
இப்போதெல்லாம் ஓட்டல் அறைகளை ஆன்லைனில் பதிவு பண்ணுவதால் அடையாள அட்டை விசாரிப்பு, ஆராய்ச்சி எல்லாம் ஆன்லைனிலேயே முடிந்துவிடுகின்றன. காத்திருக்கத் தேவை இல்லை. அந்த அளவுக்கு தொழில் நுட்பம் பயன்படுகிறது. விமானம் தரை இறங்கும் போதே, இங்கே ஓட்டல் பதிவு தேவைகளின் வேலை முடிந்துவிடும். நேரே வந்து தங்கி விட வேண்டியது தான்!
தங்கும் அறைகளை மூடவும், திறக்கவும் எலக்ட்ரானிக் கார்டு முறை உள்ளது. இந்த கார்டை கதவு முன் உள்ள லாக்கில் தொட்டால் போதும், லாக் திறந்து விடும். இதே கார்டை அறையில் உள்ள அதற்குரிய இடத்தில் வைத்தால் எல்லா விளக்குகளும் ஆன் ஆகி விடும். கார்டை எடுத்து விட்டு, நாம் வெளியில் செல்லும் போது விளக்குகள் தானாக அணைந்துவிடும். இதனால் மின் சக்தி சேமிக்கப்படுவதோடு, விருந்தினர்கள் வசதியாகவும், சுதந்திரமாகவும் தங்கிச் செல்ல இந்த தொழில் நுட்பம் உதவுகிறது.
போகும்போதும் ஆன்லைனிலேயே விமான டிக்கட்டுகளையும் எளிதாக வாங்க வசதி செய்து கொடுத்து இருக்கிறோம்.
புதிதாக சீ கிரீன் (Sea Green Vizag), தர்பார் ரெஸ்டாரெண்ட் அம்பிகா ஃப் ளேவர் ஆரம்பித்து இருக்கிறோம். ஏலுரு-விஜயவாடாவில் தொடங்கி இருக்கிறோம். நடுத்தர கட்டணத்தில் பயன்படுத்தும் பட்ஜெட் ஹால் வசதி செய்து கொடுத்து இருக்கிறோம்.
சேலம் இரயில்வே ஸ்டேஷனில் மல்ட்டி ஃபங்ஷனல் ஹால் திறக்கிறோம். இது ஒரு ரெயில்வே சார்ந்த திட்டம். தொடர்வண்டியில் உட்கார்ந்துக் கொண்டே, எங்க ரெஸ்டாரன்டுக்கு போன் பண்ணி பதிவு செய்துவிட்டால் போதும். வண்டி நிலையத்துக்குள் நுழைந்து நின்ற உடனேயே இட்லி, வடை, சட்னி, சாம்பார் எல்லாம் அந்தந்த பெட்டிக்கு உள்ளேயே உங்கள் இருக்கைக்கே வந்து விடும்.
தனியார் கம்பெனிகளுக்குப் போய் அங்கேயே உணவு வகைகளை பரிமாறுகிறோம். கல்லூரிகளுக்குப் போய், ஓட்டல் இண்டஸ்ட்ரி பற்றி பாடங்களைப் போதிக்கிறோம். ஓட்டல் பற்றி நிறைய விரிவுரைகள் தருகிறோம்.
SIHRA – South Indian Hotel and Restaurant Association. இதிலே நாங்கள் உறுப்பினர்! Federation of Hotels and Restaurant Association of India. இதிலும் உறுப்பினராக இருக்கிறோம்.
இந்த அமைப்புகளின் கூட்டங்களில் ஓட்டல் தொழில் பற்றி புதுப்புது ஐடியா சொல்வாங்க. அதன் படி எங்களை மேம்படுத்திக் கொள்கிறோம்.
இன்னொரு செய்தி யாராவது ஓட்டல் ஆரம்பித்துவிட்டு நடத்த முடியாமல் கஷ்டப்பட்டால் நாங்கள் போய், நிர்வாகத்தை நடத்த உதவி செய்வோம். இதற்கு பெயர், M.C. (Management Consultancy). அதற்கு உரிய கட்டணத்தை அவர்கள் எங்களுக்கு செலுத்த வேண்டும்.
நாங்கள் பிற ஓட்டல்களை நிர்வகித்து நடத்தித் தரவும் செய்கிறோம். அவர்கள் மேனேஜ்மென்ட் கட்டணம் தந்தால் போதும். ஒரு ஓட்டலைச் சுற்றி பல துணைத் தொழில்கள் கிளை விட்டு வளர்கின்றன.
பேருந்து, கார், போக்குவரத்து துறைக்கும் இலாபம். சுற்றுலாத் துறைக்கும் இதனால் பயன். அந்நிய செலவாணிக்கு உதவி; நம் நாட்டைப் பற்றி நிறைய விளம்பரம் செய்கிறோம்.
உலகப் பயணிகளின் உள்ளத்தைக் கவருவதால், நம் நாட்டின் மதிப்பு உயர்ந்து அவர்கள் இங்கே முதலீடு செய்ய வருகிறார்கள்” என்றார் திரு. காளத்திநாதன்.
திரு.காளத்திநாதன் ஓட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான மூன்றாண்டு பயிற்சி முடித்தவர். எம்பிஏ பட்டம் பெற்ற இவர் ஓட்டல் பணிகளுக்குத் தேவையான பல்வேறு பயிற்சிகளை ஆர்வத்தோடு பெற்றவர்.
உணவு தயாரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக அரசின் விதிமுறைகளை அத்துப்படியாக அறிந்தவர். இந்தத் துறையில் விரும்பி மன மகிழ்ச்சியுடன் பணிபுரிபவர்.
– சந்திப்பு:
முனைவர் மு.அ. எழிலன்