திரைப்படங்களில் எதிர்பாராத திருப்பங்கள் வந்தால் மக்கள் அந்தப் படம் விறுவிறுப்பாக இருந்தது என்று மெச்சுவார்கள். ஆனால் அரசாங்கங்களைப் பொறுத்த வரை, மக்கள், தாங்கள் எதிர்பார்க்கும் பணிகள் நடைபெற வேண்டும் என்றுதான் முதன்மையாக எதிர்பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்றால் மக்களுக்கு இடையே சமத்துவம், சம உரிமை, சம வாய்ப்பு வழங்கும் அரசுகளாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும், அனைத்து மக்களுக்கும் கல்வி அளிக்கும் அரசுகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, இடஒதுக்கீட்டுக்கு எதிரான, வருமான உச்சவரம்பு நிலையை முன்னாள் முதல்வர் திரு. எம்ஜிஆர், அதிகாரிகளின் தவறான ஆலோசனை காரணமாக ஒருமுறை எடுத்தபோது அதற்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான தோல்வியைச் சந்தித்தார். அதன்பிறகு தன் நிலைப்பாட்டை முற்றிலும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு இருந்தார். இது ஒரு சான்று.
இந்த முறை பாஜக அரசு அமைந்தபோது, உள்ளூர் தொழில்களின் வளர்ச்சி தொடர்பாக கவனம் செலுத்துவார்கள். சிறுதொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உள்ளூர் தொழில் முனைவோரின் தொழில் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் அரசாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் நிலவியது. அதற்கேற்பவே தேர்தலுக்கு முன்பு வரை பாஜக ஆதரவு பொருளியல் வல்லுநர்கள் இத்தகைய கருத்துகளை மக்களிடையே விதைத்து வந்தனர். பொருளியல் கட்டுரைகளை சலிப்பில்லாமல் தீட்டும் திரு. குருமூர்த்தி போன்றவர்கள் எழுதிய அப்போதைய கட்டுரைகளைப் படித்தால் இது தெளிவாகத் தெரியும்.
பொதுவாகவே, பாஜக வட்டாரம் தொழில் வளர்ச்சிக்கு பிற நாடுகளை ஏன் சார்ந்து இருக்க வேண்டும்? நாமே முயன்று தன்னிறைவான வளர்ச்சியைப் பெற வேண்டும். சுதேசி மணம் வீச வேண்டும் என்ற எண்ண ஓட்டத்துடனேயே இருந்தன. தமிழ்நாட்டில் கூட பாஜக ஆதரவு இதழ் ஒன்று, சுதேசி என்ற பெயரில் வெளிவருகிறது.
ஆனால் பாஜக அரசின் செயல்பாடுகள் இவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதாக இல்லை. இந்தியர்களின் உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கு பதிலாக, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களிடம், இந்தியாவுக்கு வந்து உற்பத்தி செய்யுங்கள் என்று அழைப்பு விடுப்பதிலேயே காலத்தை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கேற்ப ”மேக் இன் இந்தியா” என்ற சொற்றொடரையும் பரபரப்புடன் பரப்பி வருகிறார்கள். இந்த பரபரப்புக்கு நடுவே ”மேட் இன் இந்தியா” மங்கி வருகிறது. இதற்கிடையே இவ்வளவு கோடி ரூபாய்கள் அன்னிய முதலீட்டையும் ஈர்த்து விட்டோம் என்று பெருமையும் அடித்துக் கொள்கிறார்கள்.
இந்த எதிர்பாராத திருப்பம் குறித்து பாஜக நண்பர்களிடம் கேட்கும்போது பதில் சொல்லத் திணறும் நிலைதான் இருக்கிறது. எனவே பாஜக அரசு மக்களிடம் ஏற்கெனவே உருவாக்கிய நம் நாட்டுத் தொழில்களை, நம் நாட்டுத் தொழில் முனைவோரைக் கொண்டே வளர்ப்பதற்கான முயற்சிகளை, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு செயல்பட வேண்டும். அதுவே தொலைநோக்குப் பார்வையில் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு உதவும்.
– ஆசிரியர்