நல்ல பெயின்டர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் நாள் ஊதியத்துக்கும் பணி புரிகிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலும் பணி புரிகிறார்கள். பெயின்டர்களுக்கான தொழில் வாய்ப்பு எப்படி இருக்கிறது? சென்னை, போரூரில் பெயின்டர் ஆக இருக்கும் திரு. சையது இடம் கேட்ட போது, அவர் தன் தொழில் பற்றியும் பெயின்டிங் தொடர்பான சில நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டார்.
”நான் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்கும் முன் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பதிமூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன். தனியார் நிறுவனத்தில் நாள்தோறும் வேலை இருக்கும். தனியாகச் செய்யும் இப்போது மாதத்தில் ஒரு வாரம் அளவுக்கு வேலை இருக்காது. ஒப்பந்தப் பணிகள் கிடைத்தால் தொடர்ந்து வேலை இருக்கும். லாபமும் கூடுதலாக இருக்கும். ஆனால் கையில் தேவையான முதலீடு இருக்க வேண்டும்.
நான் பெயின்டிங் செய்ய ரோலர் பிரஷ், கையால் அடிக்கும் பிரஷ், ஏர் கம்ப்ரஷர் ஸ்ப்ரே போன்றவற்றைப் பயன்படுத்துகிறேன். பட்டி பார்த்த சுவர்களில் மட்டுமே ரோலர் பிரஷ் பயன்படுத்த முடியும். சாதாரன சுவர்கள் மேடும், பள்ளமும் ஆக இருக்கும் என்பதால் ரோலர் பிரஷ்சைப் பயன்படுத்தினால் பெயின்ட் திட்டுத்திட்டாக இருக்கும். கையால் அடிக்கும் பிரஷ்சை எல்லா சுவர்களிலும் பயன்படுத்தலாம். பட்டி பார்க்கவில்லை என்றாலும் பெரிய பரப்பளவு உள்ள சுவர்களில் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.
பட்டி பார்ப்பதற்கு தகடுகளை பயன்படுத்துகிறோம். இந்த தகடுகள் மூன்று அங்குல அகலம் முதல் பன்னிரெண்டு அங்குல அகலம் வரை கிடைக்கின்றன. சாதாபட்டி, சாதாபேஸ்ட் பட்டி, பிர்லா, ஜேகே, ஏசியன் பேஸ்ட் பட்டி என பல வகை பட்டிகள் உள்ளன. பிர்லா, ஜேகே, ஏசியன் பேஸ்ட் பட்டிகள் தரமாக இருக்கும்.
சுவர் சொரசொரப்பாக இருக்கும் போது அதிக பட்டி பிடிக்கும். அதுதான் தரமாக இருக்கும். சுவர் பளபளப்பாக இருந்தால் பட்டி குறைவாகப் பிடிக்கும். தரம் சற்று குறைவாக இருக்கும். பொதுவாக புதிய சுவர்களில் பட்டி பார்க்கும் போது ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு முறை பார்க்க வேண்டும். சுவர்களில் ஏர் கிராக் என்று சொல்லப்படும் லேசான விரிசல் இருந்தால் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கொண்டு பட்டி பார்க்க வேண்டும்.
உயரமான இடங்களில் அடிக்க ஏணி போன்ற கயிற்றால் செய்த பாய்டொக்குகளைப் பயன்படுத்துவோம். அவற்றில் ஒற்றை டொக்கு என்ற வகையும் உள்ளது.
பாய்டொக்கை பெரிய இடங்களில் பயன்படுத்தலாம். சந்துகளில் பயன்படுத்த முடியாது. ஒற்றை டொக்கு என்பதை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.
ஓரு மாடிக்கு மேல் அடிக்க வேண்டிய வேலை இருந்தால் டொக்கை பயன்படுத்துவோம். அதற்கு கீழ் இருந்தால் ஏணியை பயன்படுத்தலாம்.
புதிய வீடுகளில் சிமென்ட் பூச்சு முடிந்த மூன்று வாரத்திற்கு பின்னால் நேரடியாக சுவரை பாதுகாக்கும் பட்டி பூச வேண்டும். இது சுவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். முதலில் வெள்ளை சிமென்ட் அல்லது பிரைமர் பூசுகின்றவர்கள் உள்ளனர். இது தவறான முறை ஆகும். பிரைமர் பூசி விட்டு பட்டி பூசக் கூடாது.” என்கிறார், திரு. சையது.
– சை. நஸ்ரின்