தமிழ்நாட்டில் சிறு, குறுந் தொழில்கள் நலிவடைய என்ன காரணம்? அவ்வாறு நலிவு அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஆராய்ந்து திரட்டிய சில முதன்மையான வழிகாட்டல்கள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.
தொடங்கும் முன் சந்தை ஆய்வு செய்ய வேண்டும். தொடங்கிய பின் முழுக் கவனம் செலுத்த வேண்டும். 100% கவனமும், அக்கறையும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.
பணம் இருக்கிறது; கடனாக கிடைக்கிறது; என்பதால் எந்த தொழிலையும் தொடங்கக் கூடாது. எந்த தொழிலையும் யோசித்து, பயிற்சி பெற்று, அனுபவம் கிடைத்த பின், லாபகரமானதுதான் என உறுதி செய்தபின் தொடங்க வேண்டும்.
முழு நேரத் தொழிலா? பகுதி நேரமா? பகுதி நேரத்தில் செய்தால் வெற்றி கிடைக்குமா? யாராவது அதே தொழிலைச் செய்து வெற்றி பெற்றுள்ளனரா? என ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.
தொடங்கிய உடனேயே அதிக சம்பளத்தில் ஆட்கள் பலரை நியமித்து விட்டு அவதிப்படாதீர்கள். நல்ல லாபம் வந்த பின் பணியாளர்களை நியமிப்பது நல்லது. ஆரம்பத்தில் தேவையான சிலரை மட்டும் வைத்து சமாளிக்க முயல வேண்டும்.
ஒருவரை பணியில் சேர்க்கும் முன் அவரது வரலாறு, படிப்பு, அனுபவம் இவற்றை தீரவிசாரித்து பின்புதான் சேர்க்க வேண்டும். அவரால் 1:5 என்ற விகிதத்தில் லாபம் வந்தால்தான் சேர்க்க வேண்டும். சான்றாக, ஒரு சலூன் என வைத்துக் கொண்டால் ஒருவர் 25,000/- ரூபாய் மாதம் சம்பாதித்து கொடுத்தால் தான் ரூ.5000/- சம்பளம் கொடுக்க முடியும்.
பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்குவதை தவிர்க்க முயலுங்கள். முடியாவிடில் தங்களுக்கு பல ஆண்டுகள் அறிமுகமான உறவினர்கள், நண்பர்களை கணக்கு வைத்து, தெளிவாக பேசி முடிவு செய்து சேர்க்க வேண்டும்.
இன்று பலர் முதலில் கடுமையாக உழைத்து விட்டு, சிறிது லாபம் வர ஆரம்பித்ததும், வீண் செலவு செய்வது, அதிக விலை உள்ள வாகனம் வாங்குவது, பல கிளப்களில் உறுப்பினராகி சுற்றுவது என தொடங்கி விடுகின்றனர். இந்த தவறைச் செய்யவே செய்யாதீர்கள். ஒரு ஊழியர் வரவில்லை; அந்த எந்திரத்தை இயக்க வேறு ஏற்பாடு செய்யத் தெரிய வேண்டும். ஒரு சேல்ஸ் மேன் வரவில்லை, அதற்கான மாற்று ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
மார்க்கெட்டிங் மிக கஷ்டமானது, அதுவும் கடனில் கொடுத்தால் பணம் முழுமையாக வராது. எனவே முதலி லேயே சர்வே செய்து, உடனுக்குடன் பணம் வருமா, நாணயமானவர்களா என ஆய்ந்து, அறிந்து பின் கடனுக்கு கொடுக்க வேண்டும்.
லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை உங்கள் தொழிலுக்கு ஏற்ப பல வகை விளம்பரங்களுக்கு செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
– எம். ஞானசேகர்