காய்கறிகளைக் கலைப்படைப்பாக்கும் இளஞ்செழியன்!

தேனியில் யாழ் காய்கறிச் சிற்பக் கலைக்கூடம் எனும் பெயரில் பயிற்சி மையம் ஒன்றினை நடத்தி வரும் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த திரு. இளஞ்செழியன் அவர்களை வளர்தொழில் இதழுக்காகச் சந்தித்த போது அவர் சொன்னார்.

“எனது பள்ளிப்படிப்பைக் கூடலூரில் முடித்துவிட்டு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு சமையல் தொழில் நுட்பக் கல்லூரியில் சமையல் தொடர்புடைய தொழில் நுட்பப் படிப்பு ஒன்றை முடித்து, சமையல் கலைஞர் பணிக்காக மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள உணவகம் ஒன்றில் பணி ஆற்றினேன். அந்த உணவகத்தின் முன்பகுதியில் இருக்கும் கண்ணாடிப் பெட்டியில் நாள்தோறும் காய்கறிகளில் கற்பனையாக ஏதாவதொரு உருவத்தைச் செய்து பார்வைக்கு வைப்பார்கள். அந்தச் சாலையின் வழியாகச் செல்லும் பலரும் உணவகத்தின் முன்பு நின்று காய்கறியிலான உருவத்தைப் பார்த்து செல்வார்கள்.

திரு. இளஞ்செழியன்
திரு. இளஞ்செழியன்

பள்ளிக் காலத்தில் ஓவியப் போட்டிகளில் பல்வேறு பரிசுகளைப் பெற்று இருந்ததால் எனக்கும் காய்கறிகளில் சிற்பம் செதுக்கும் ஆர்வமேற்பட்டது. ஓய்வு நேரங்களில் காய்கறிகளில் உருவங்களை உருவாக்கும் என் முயற்சியைத் தொடங்கினேன். காய்கறிகளில் விதவிதமான வடிவங்களை உருவாக்கினேன்.

இந்நிலையில் இந்தக் கலையை நாம் ஏன் தொழிலாக மாற்றிச் செய்யக் கூடாது என்று எனக்குள் புதிய எண்ணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் நான் பார்த்து வந்த அதிக சம்பளத்துடன் கூடிய வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினேன்.

தேனி மாவட்டத் திலிருக்கும் சில வங்கிகளின் மேலாளர்களைச் சந்தித்து எனது காய்கறிச் சிற்பக் கலைத் தொழிலுக்கு கடனுதவி அளிக்கும்படி வேண்டினேன். அவர்கள் தங்கள் படிப்பிற்கு ஏற்றபடி உணவகம் ஒன்று தொடங்குங்கள்.

நாங்கள் கடன் வழங்குகிறோம். தாங்கள் திட்டமிட்டுள்ள காய்கறிச் சிற்பக் கலைத் தொழிலுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள் குறுகிய நாட்களில் அழிந்து விடக்கூடிய அழிவுப்பொருளாக இருப்பதால் கடன் வழங்க இயலாது என்று மறுத்துவிட்டனர். இதற்காக நான் மனம் உடைந்து போய்விடவில்லை, சுயமுயற்சியுடன் இத்தொழிலில் வெற்றியைப் பெறுவதே என்னுடைய இலக்கு எனும் நிலையில் எனது அடுத்த முயற்சியைத் தொடர்ந்தேன்.

மணமக்களின் உருவத்தைக் காய்கறிகளில் செய்து கொடுக்கிறேன், மணமேடையைக் காய்கறிகளைக் கொண்டு அலங்கரித்துக் கொடுக்கிறேன், எனக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று திருமணம் நடத்தத் திட்டமிட்டிருப்பவர்களின் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாய்ப்பு கேட்டேன்.

ஒரு இளைஞர் மட்டும் என்னுடைய முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் மணமக்களின் உருவங்களைக் காய்கறிகளில் உருவாக்கிடவும், மணமேடை அலங்கரிப் பிற்கான காய்கறிச் செலவுகளுக்கு மட்டும் முதலில் பணம் தருவதாகவும், திருமணத் திற்கு வந்திருப்பவர்கள் அனைவரும் மணமேடை அலங்காரம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டும்தான் நான் உங்களுக்கான பணத்தைத் தருவேன் என்கிற நிபந்தனையுடன் அனுமதியளித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

அந்தத் திருமணத்தில் என் உழைப்பில் உருவாகிய மணமக்களின் காய்கறி உருவச் சிற்பங்களையும், மணமேடை அலங்காரத்தையும் பார்த்துப் பலரும் வியந்து பாராட்டினர். அவர்களில் பலர் என்னுடைய கைபேசி எண்ணையும் வாங்கிச் சென்றனர். மணமகனும் எனக்கு நான் கேட்ட பணத்தை விடக் கூடுதலான பணத்தைக் கொடுத்தார். அதன் பிறகு எனக்குத் திருமணக் காலங்களில் பல அழைப்புகள் வந்தன. இந்த முயற்சியில் ஒரு முக்கியமான விசயம் என்று சொன்னால், எனக்கு வங்கியில் கடன் அளிக்க முடியாது என்று சொன்ன ஒரு வங்கி மேலாளர் அவரது மகளின் திருமணத்திற்கு மணமக்களின் காய்கறிச் சிற்பத்திற்கும், காய்கறி மேடை அலங்காரத்திற்கும் எனக்கும் முன் பணம் கொடுத்துச் சென்றது தான். இதில் என் முயற்சியின் நான் முதல் படியில் வெற்றியைத் தொட்டேன்.

அடுத்ததாக என்னுடைய கலைப் படைப்புகளைப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் எப்படி எடுத்துச் செல்வது என்கிற முயற்சியில் இறங்கினேன். மாணவர்களுக்கு என்னுடைய காய்கறி உருவச் சிற்பப் பயிற்சியை இலவசமாக அளிப்பதென முடிவு செய்து சில பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அனுமதி கோரினேன்.சில பள்ளிகளில் எனக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொடுத்தனர். நான் அந்தக் காய்கறிகளில் காந்தி, காமராஜர், பாரதியார், அண்ணா, அப்துல்கலாம் என்று பல தலைவர்கள் முகத்திலான உருவங்களையும், சிறுவர்களுக்குப் பிடித்தமான கேலிச்சித்திரப் படங்களில் வரும் சோட்டா பீம், சுக்ரி, கிருஷ் போன்ற உருவங்களையும் உருவாக்கிக் காட்டினேன். அந்தப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களில் சிலர், என்னுடைய காய்கறிக் கலைப் படைப்பில் ஆர்வமேற்பட்டு விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வருவதாகத் தெரிவித்தனர். அவர்களுக்கு விடுமுறை நாட்களில் அந்தப் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினேன்.

அதற்கடுத்ததாக அரசு கண்காட்சிகளில் நம் கலைப்படைப்புகளை எப்படிக் கொண்டு சேர்ப்பது என்று முயற்சித்தேன். தமிழ்நாடு அரசு கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப் பெற்ற கண்காட்சியில் என்னுடைய காய்கறிச் சிற்பங்களைக் காட்சிப்படுத்தும் முயற்சிக்கு வாய்ப்பளிக்கும் படி வேண்டினேன்.IMG_1855
தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் அதிகாரிகளின் சந்திப்புகளுக்குப் பின்பு எனக்கு இடம் ஒதுக்கித் தரப்பட்டது. அந்தக் கண்காட்சியில் நான் அமைத்த காய்கறிச் சிற்பங்கள் அப்போதைய முதலமைச்சர் திரு. கருணாநிதி உட்பட கண்காட்சிக்கு வந்த அமைச்சர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிக்கு வந்திருந்த பல நாட்டுத் தமிழ் ஆர்வலர்களும் என்னுடைய காய்கறிக் கலைப்படைப்பைப் பாராட்டியதுடன், என்னுடனும் என் படைப்புடனும் சேர்ந்து படமெடுத்துக் கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசுத் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத்துறை மற்றும் சில துறைகள் நடத்தும் கண்காட்சிகளில் எனது கலைப்படைப்புகள் இடம் பெறத் தொடங்கின. தோட்டக்கலைத்துறைக் கண்காட்சியில் இரண்டு டன் முள்ளங்கிகளைக் கொண்டு நான் உருவாக்கிய அன்னப் பறவை, ஒரு டன் முருங்கைக்காய்களைக் கொண்டு அமைத்த ஈபிள் டவர் போன்றவைகள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது வரை பல்வேறு அரசு கண்காட்சிகளில் பங்கு பெற்று வருகிறேன். தேனி மாவட்டத்தில் பென்னிகுயிக் மண்டபத் திறப்பு விழாவில் நான் உருவாக்கிய பென்னிகுயிக் உருவத்துடனான மணிமண்டபம், முல்லைப் பெரியாறு அணை போன்றவை தமிழ் நாட்டின் அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களாலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலராலும் பாராட்டப் பெற்றன.

என்னுடைய பயிற்சி மையத் தினைச் சென்னையில் தொடங்கினால் இதை விடக் கூடுதலான வரவேற்பும் வருமானமும் கிடைக்குமே என்று என்னுடைய நண்பர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை, கணினியும் இணை யமும் வந்துவிட்ட பின்பு உலகத்தின் எல்லை மிகவும் சுருங்கிப் போய் விட்டது என்பார்கள்.

இணையத்திலிருக்கும் ஸ்கைப், டீம் வியூவர் மற்றும் பல்வேறு தொடர்பு வசதிகளைப் பயன் படுத்தி சிங்கப்பூர், சீனா, மலேசியா, கனடா, அரபு நாடுகள் என உலகில் பல நாடுகளிலிருக்கும் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை நான் அளித்து வருகிறேன். இந்தப் பயிற்சிக்குச் சீனா போன்ற நாடுகளில் அதிகமான வரவேற்பு இருக்கிறது.
இதற்காகச் சீனாவிலிருக்கும் ஒருவரிடம் ஆங்கிலம் வழியாகச் சீன மொழியையும் நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.

இருப்பினும், நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சென்னையில் ஏதாவதொரு அமைப்புடன் இணைந்து மாதத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் பயிற்சி அளிக்கலாமென திட்டமிட்டிருக்கிறேன்.

IMG_1224தற்போது, காய்கறிகளை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கும் காய்கறி மொத்த விற்பனை யகங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவைகளுக்கு அவர்களின் நிறுவனங்களுக்கான இலச்சினைகளை (Logo) குறிப்பிட்ட காய்கறிகளில் வடிவமைத்துத் தருவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துச் சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இருக்கிறேன். இந்தக் காய்கறிச் சிற்பத்திலான இலச்சினைகளைப் படமெடுத்து அதைக் கணினியில் சிறப்பாக மாற்றி அவர்கள் அதைத் தொடர்ந்து வணிகப் பயன்பாட்டில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக செய்து தரவிருக்கிறேன்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத் துறை பாடப்பிரிவில் காய்கறிச் சிற்பம் தயாரிப்பது குறித்து ஒரு பாடத் திட்டத்தினைச் சேர்க்க வேண்டுமென்று பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கோரிக்கை வைத்தேன்.

இதற்குப் பல்கலைக்கழகச் சுற்றுலாத் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர் உதவி செய்து வருவதால் கூடிய விரைவில் இப்பாடத்திட்டம் சேர்க்கப்படும் என கருதுகிறேன். அவர்களும் இதற்கான பாடப் புத்தகங்களை எழுதித் தரும்படி கேட்டிருப்பதால் அதற்கான பாடங்களையும் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

– தேனி. மு.சுப்பிரமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here