தமிழர்கள் இனிப்புக்குப் பயன் படுத்தியது பனை வெல்லம் என்ற கருப்புக்கட்டி. பனையில் இருந்து கிடைக்கும் நார் மற்றும் ஓலைகளைப் பயன்படுத்தி சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தே பல்வேறு பொருட்களை மக்கள் தயாரித்து வந்தனர்.
இன்றைக்கு பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இவற்றைத் தயார் செய்யும் மூலப்பொருள்கள் எளிதாகக் கிடைக்கவில்லை.
பனம் பழச்சாற்றை வெளியில் துணியில் பரப்பிக் காயவிட்டுத் துண்டுகளாக்கி “பனாட்டு” என்ற பெயரில் இனிப்பு பண்டமாகச் சுவைத்திருக்கிறார்கள்.
பனையில் ஆண்பனை அலகுப்பனை என்றும், பெண்பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண் பனையில் நுங்கு கிடைக்கிறது.
பதநீர் உடலுக்கு பலம் தருவது. பல்லும் எலும்பும் பதநீரால் உறுதிப்படுகின்றன.
பதநீரிலிருக்கும் இரும்புச்சத்து நரம்பு மண்டலத்துக்குச் செயலூக்கத்தை அளிப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது.
பதநீரில் உள்ள தையமின் என்ற உயிர்ச் சத்து மூளையைச் சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
வைட்டமின் பி2 எனப்படும் “ரிபோ ஃபிளேவின்” என்கிற சத்து குளுக்கோமா என்கிற கண் நோய் வராமல் தடுத்துப் பாது காக்கிறது. பதநீரிலிருக்கும் நியாசின் எனும் மூலக்கூறு மனத்தடுமாற்றம் வராமலும் வாய்ப்புண் வராமலும் காக்கிறது.
பதநீரைக் காய்ச்சிப் பாகு ஆக்கி சிரட்டையில் ஊற்றி எடுப்பதைக் கருப்புக்கட்டி, கற்பகக்கட்டி என்கிறோம். பதநீரைப் பக்குவமாகக் காய்ச்சிக் கூழாக்கி சில நாட்கள் படிக வளர்ச்சிப்படி கற்கண்டாகத் தயாரிக்கலாம்.
ஒரு பனை மரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் 3000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இப்போது தமிழகமெங்கும் 3 கோடி பனைமரங்கள் நிற்பதாக வைத்துக் கொண்டால் ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய் வருமானம் பெறலாம்.
பனைப் பொருள்களின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.
பெண்களுக்கு பனைநார், பனை ஓலையின் மூலம் பயன்பாடு மிக்க பொருள் களைத் தயார் செய்யும் பயிற்சியளித்தால் அவர்களின் வருமானம் பெருகும்.
– ஜே.ஜோ.பிரகாஷ், சுற்றுச்சூழல் புதிய கல்வி