பத்திரிகை உலகில் திரு.சாவித்திரி கண்ணனை அறியாதவர்கள் அரிதாகவே இருப்பர். 1985-ம் ஆண்டில் இத்துறையில் கால் பதித்து கடந்த 29 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். ஊடகப் பணி தவிர, சமூக நோக்கோடு அவ்வப்போது அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்பட்டன. எழுதுவதோடு நின்றுவிடாமல், பிணியின்றி மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கில், ஏராளமான இயற்கை உணவு முகாம்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடத்தி வந்தார்.
இவர் நடத்திய இயற்கை உணவுகள் எனப்படும் தமிழ் பாரம்பரிய உணவுகள் முகாம்களில் பங்கேற்றுச் சென்ற பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக ‘தேவாமிர்தம்’ என்ற பெயரில் தமிழ் பாரம்பரிய உணவுகள் மையத்தை திரு.சாவித்திரி கண்ணன் அண்மையில் தொடங்கியுள்ளார்.
இது குறித்து, திரு.சாவித்திரி கண்ணனை சந்தித்துப் பேசுவதற்காக சென்னை, திருவான்மியூரில் உள்ள அவருடைய இல்லத்திற்குச் சென்றோம். நம்மை இன்முகத்துடன் வரவேற்று அமர வைத்தவுடன், அவருடைய துணைவியார் திருமதி.கமலம், ‘சிறுதானிய கேக்’-ஐ வழங்கினார். மைதாவைப் பயன்படுத்தாமல் தினையால் தயாரிக்கப்பட்ட அந்த ‘கேக்’ மிகவும் சுவையாக இருந்தது. “தொடர்ந்து ‘கேக்’களுக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. வெனிலா கேக், பிஸ்தா கேக், உலர்பழ கேக், கேரட் கேக், வாழைப்பழம் கேக் ஆகியவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்” என்றார் திரு.சாவித்திரி கண்ணன்.
“தமிழ் பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் எண்ணம் உங்களுக்கு ஏற்படக் காரணம் என்ன? இதில் உங்களுடைய இலக்கு எது? முதலான பல்வேறு வினாக்களை அவரிடம் எழுப்பி, விரிவாகப் பேசினோம். அவருடைய பேட்டியில் இருந்து…
“பத்திரிகைப் பணிகளுக்காக பல்வேறு சமயங்களில் வெளியில் செல்ல நேரிட்டிருக்கிறது. அப்போது நல்ல தரமான உணவு வழங்கும் ஓட்டல்களைத் தேடி அலைந்து உள்ளேன். விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை, தரமானதாக இருக்கட்டும் என்று சுற்றிச் சுற்றி வந்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் நல்ல உணவகங்கள் கிடைக்காமல் ஏமாந்து உள்ளேன். வேறு வழியின்றி கிடைக்கும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டிய நிலைமை. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட நாட்கள் பல உண்டு.
என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் மதிய உணவுக்கு ஓட்டல்களையே நம்பியுள்ளனர். இந்த ஓட்டல்களில் ஒரு நாள் இரண்டு நாள் சாப்பிடலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிட இயலாத நிலைதான் உள்ளது. பிற்காலத்தில், இந்தக் குறையை போக்கும் வகையில் பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்கும் ஓர் ஓட்டல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இயற்கை உணவு முகாம் நடத்தியபோது, இந்த எண்ணம் வலுப்பெற்று வந்தது.
நான் ஒருங்கிணைந்து நடத்திய பாரம்பரிய உணவு முகாம்களில் என்னைக் காட்டிலும் ஆர்வமாக என் துணைவியார் கமலம் பங்கேற்றார். இதில் இயல்பாகவே அவர் பெரிதும் அக்கறை காட்டியதால், என் நீண்டநாள் எண்ணத்தை செயல்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தேன்.
சிறு தானிய உணவுகளை நாம் உரிய முறையில் தயாரித்தோமே ஆனால் அவற்றின் சுவைக்கு வேறு எந்த உணவு வகைகளும் ஈடு கொடுக்காது. இவற்றை தயாரிக்க உதவும் சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை, வரகு மற்றும் தினை ஆகியவை பல்வேறு சத்துக்கள் நிரம்பியவை. இவற்றோடு மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, மூங்கில் அரிசி முதலான பாரம்பரிய அரிசி வகைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் பனை வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை போன்ற கெடுதல் இல்லாத இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்கிறோம்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இயற்கையின் கொடையான சிறுதானிய உணவுகள் இப்போதும் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்தால் கண்டிப்பாக அதற்குதான் முன்னுரிமை கொடுப்பார்கள். மக்களின் எண்ண ஓட்டத்தை, நான் நேரில் அறிந்தவன் என்பதால் இப்படிச் சொல்கிறேன். பல்வேறு, இயற்கை உணவு முகாமுக்கு வந்து பாரம்பரிய உணவு வகைகளை உண்பவர்கள், இப்படிப்பட்ட உணவுகள் தினமும் கிடைக்காதே? என்ற ஏக்கத்துடனேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். எனவே மக்கள் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள்.
சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன. எலும்புக்கு வலு சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப் பவையாகத் திகழ்கின்றன. மூட்டுவலி, சர்க்கரை நோய், மலச்சிக்கல், ரத்த அழுத்தம், கர்ப்பப்பை சிக்கல்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட நோய்களை அகற்றும் ஆற்றல் கொண்டவையாக இவை திகழ்கின்றன.
மிகவும் சுவையாக மதிய உணவு வேண்டும் என்று எங்களை அணுகுவோருக்கு, மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம், வரகு பிரியாணி, குதிரைவாலி தயிர்சாதம், சாமையில் கூட்டாஞ்சோறு, தினை சர்க்கரைப் பொங்கல் ஆகியவை அடங்கிய உணவைக் (Mini Meals) கொடுக்கிறோம். இது ஒரு வகை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் உணவு வகைகளை செய்து தருகிறோம்.
காலை, மாலை வேளைகளில் சிற்றுண்டிக்காக அணுகுவோருக்கு குதிரை வாலி வெண் பொங்கல், வரகு இட்லி, வெந்தயக்களி, ராகி புட்டு, சிறுதானிய தோசை வகைகள், சிறுதானிய சப்பாத்தி, பூரி, பூசணிகீர், கேரட்கீர் இவற்றுடன் சிறுதானியங்களால் செய்யப்படும் பல வகை சட்னி, சாம்பாரும் கொடுக்கிறோம். ஆவாரம்பூ தேநீர், தான்றி காபி, தூதுவளை சூப், மணத் தக்காளி சூப் முதலான பானங்களையும் தயாரித்துத் தருகிறோம்.
தமிழ் பாரம்பரிய உணவு வகைளை மிகவும் சுவைபட தயாரிப்பதில் நீண்ட அனுபவம் பெற்ற என் துணைவியார் கமலம், சிறுதானிய ‘கேக்’தயாரிக்கும் பயிற்சியை ஒரு வல்லுனரிடம் அண்மையில் கற்றுக் கொண்டார். எங்களுடைய ‘தேவாமிர்தம்’ பாரம்பரிய உணவு மையத்திற்கு அவர்தான் தூண் என்றால் மிகை யில்லை. மிக வேகமாக அதே சமயம், சுவையாக சமைக்கக் கூடியவர்.
பிறந்தநாள் விழா கொண்டாடும் ஏராளமானோர் எங்களை அணுகி ‘சிறுதானிய கேக்’ வாங்கிச் செல்கின்றனர். தீங்கு தரும் ‘மைதா’வை விலக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாரம்பரிய அரிசி வகைகளாலும், சிறு தானியங்களாலும் தயாராகும் உணவு வகைகள் வருங்காலத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உள்ளது. இந்த உணவு வகைகளை மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் விற்பனை செய்கிறோம். தற்போது ‘ஆர்டர்’ பெற்று அதற்கேற்ப வீட்டில் இருந்து செய்து கொடுக்கிறோம். ஆர்டருக்கு ஏற்ப பணியாளர்களை அமர்த்திக் கொள்கிறோம். விரிவாக்கத் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்துவோம்.
சிறுதானியங்கள் விலை தற்போது அதிகமாக இருப்பதற்குக் காரணம், பயன்பாடு குறைவாக இருப்பதுதான். மக்களின் ஒருமித்த பார்வை இவற்றின் மீது திரும்பி விட்டால் விவசாயிகளும் இவற்றை அதிக அளவில் பயிரிடத் தொடங்கி விடுவார்கள். அப்போது விலையும் குறைந்துவிடும். நம் மண்ணில் 90 சதவீதம் புன்செய் பயிர்கள்தான் விளைந்துள்ளன. இதற்குக் காரணம், நீர் பற்றாக்குறையே. எனவே, புன்செய் பயிர்களான சிறுதானியங்கள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார் திரு.சாவித்திரி கண்ணன். (9444427351, 9940416408). – ம.வி.ராஜதுரை