தான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார் – (குறள் 722)
உலக அரசியல் உங்கள் விரல் நுனியில் இருக்கலாம், பன்பாடு, கலாச்சாரம், இந்திய வரலாறு, புவிசார் அரசியல், பொருளாதாரம், வியாபாரம் என எல்லா வற்றிலும் கைதேர்ந்தவராக இருக்கலாம். நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களில் எல்லோரும் ஏதொ ஒரு துறையில் அறிஞர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை கற்றவர்கள் என்கிறார், வள்ளுவர். மாறாக, தான் தெரிந்து கொண்ட நுணுக்கங்களை, ஆய்ந்து அறிந்தவற்றை மற்றவர்களும் பயன் பெறும் வண்ணம் விளக்கிக் கூறும் சான்றோர்களை கற்றாருள் கற்றார் என்று புகழ்கிறார்.
தொலைக்காட்சி விவாதங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கவே கலந்து கொள்கி றார்கள். ஆனால் விவாதம் தொடங்கி சிறிது நேரம் ஆனவுடன் விவாதப் பொருளில் இருந்து விலகி தத்தமது தலைமைகளின் விசுவாசிகளாக மாறி; அங்கு வெற்று இரைச்சல் பரவுவதை நாம் பார்க்க முடியும்.
எல்லோரையும் தொலைக்காட்சி விவாதங்களுக்கு நெறியாளர்கள் அழைப்பது இல்லை. தமது கருத்துகளை நயம்பட எடுத்துக் கூறவல்லவர்கள் என்று நெறியாளர்களால் கருதப்படுகிறவர்களே அழைக்கப்படுகிறார்கள்.
அந்த அரங்கத்தில் இருக்கும் அனைவருமே கற்றவர்கள்தான். ஆனால் மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தமது வாதத்தை எடுத்துக் கூறுவதில்தான் சிக்கல் இருக்கிறது. அந்த நுட்பம் அறிந்தவரே கற்றாருள் கற்றாராக அறியப்படுகின்றார். நான் அறிந்த வரையில் தோழர்.சுப. வீரபாண்டியன் அவர்களின் நேர்த்தியான வாதமும், நாகரிகமான எதிர்வினையும் அரங்கத்தில் இருப்பவர்களிடம் மட்டும் அல்ல, தொலைக் காட்சியில் அதனை பார்க்கும் பார்வையாளரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
இந்த திறமைக்கும், நமது தொழிலுக்கும், செய்யும் வேலைக்கும் என்ன தொடர்பு? இவையெல்லாம் அரசியல்வாதிகளிடமும், இயக்கங் களிடமும் இருக்க வேண்டிய ஒன்று என்று எண்ணி விட வேண்டாம். நாம் தற்போது செய்து கொண்டிருக்கும் தொழிலோ, வேலையோ சிறியதாக தெரியலாம். அதனை மேம்படுத்தும் நோக்கமும், முட்டுக் கட்டைகளை உடைத்தெறிந்து முன்னேறியே ஆக வேண்டும் என்ற கனவும் உங்களுக்கு இருக்குமானால் நாமும் கற்றாருள் கற்றாராய் இருந்தே ஆக வேண்டும்.
தொழில் முனைவோர் தங்களுக்குள் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த புரிதலில் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு களமாக தமிழர் பரிந்துரை வணிகம், தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம், பிஎன்ஐ (Business Network International) போன்றவை இருக்கின்றன. வாரம் ஒருமுறை ஒன்று கூடி தங்கள் தொழில் குறித்தும் அதன் நோக்கம், வளர்ச்சி குறித்தும் அங்கே கலந்துரையாடுவார்கள்.
சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழில் முனைவோரையும் ஒரிரு நிமிடங்கள் பேச மேடைக்கு அழைப்பார்கள். ஒரு தொழில் செய்ய வேண்டுமானால் அதன் சாதக பாதகங்களை அறிந்திருக்க வேண்டும். நீண்ட நெடு நாட்களாக ஒரு தொழிலை செய்து வருபவர் என்றால் அந்த துறை சார்ந்த நுணுக்கங்களும், எதிர்காலத் திட்டங்களும் நிச்சயம் இருக்கும்.
வள்ளுவரின் கூற்றுப்படி அவரும் ஒரு கற்றவர். இத்தகைய அமைப்புகளின் ஒவ்வொரு வாராந்திர கூட்டமும் அவ்வகையில் கற்றார் நிறைந்த அவையாகவே இருக்கும். இப்போது சொல்லுங்கள், உங்கள் தொழில் குறித்து, நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் குறித்து, நீங்கள் வழங்கிக் கொண்டி ருக்கும் சேவை குறித்து கற்றோர் நிறைந்திருக்கும் ஒரு அவையில்; அவர்களிடம் சுவைபட/செறிவாக எடுத்துரைப்பது அவசியமா, இல்லையா?
தமிழர்களிடம் ஒரு மாபெரும் குறை உண்டு. தன் திறமைகளின் மேல் உள்ள குறைந்த மதிப்பீடு. அதன் தொடர்ச்சியில் வந்து சேரும் தாழ்வு மனப்பான்மை. தெரிந்தவற்றை எனக்கு தெரியும் என்று ஒத்துக் கொள்வதற்கு கூட ஒரு விதத் தயக்கம். தாமாக முன் வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதில் பயம். வேறு யாராவது அதை செய்ய முன்வந்தால் அவருடன் முரண்பட்டு நிற்பது. இறுதியில் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டு புலம்புவது. போட்டி நிறைந்த தற்கால சூழலிலும் பெரும்பான்மை தமிழர் களிடம் இந்த குணம் காணப்படுவது வேதனை. நான் வேறு யாரையும் குறிப்பிடவில்லை. என்னை முன்னிருத்தியே இவற்றை தீர்மானமாக சொல்லி இருக்கிறேன்.
Also Read: சிறந்த உரையாடல் உருவாக்கும், நட்பு வலைப்பின்னல்!
முகநூலில் எழுதிக் கொண் டிருந்த என்னை ஆசிரியர் திரு. ஜெயகிருஷ்ணன் “நல்லா எழுதுறீங்க, உங்க துறை சார்ந்து எழுதுங்க” என்றார்.
”நானெல்லாம் என்ன சார், எழுதுவது. இந்த விளம்பரத் துறையில் மிகப் பெரிய ஆட்களெல்லாம் அமைதியாக இருக்கிறார்கள்” என்றேன்.
”அவர்கள் அமைதியாகவே இருந்து விட்டுப் போகட்டும். உங்கள் அனுபவமும், சிந்தனையும் பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றால்; அதை செய்து விடவேண்டியதுதானே?” என்றார்.
திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பாட்டு வாத்தியார் பாணப்பத்திரர் போல ஏதோ முகநூலில் கவிதை என்கின்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருக்கிறோம், நம்மால் நீண்ட கட்டுரைகளை தொடர்ந்து எழுத முடியுமா என்ற தயக்கம் இருந்தது. அதனை புரிந்து கொண்ட ஆசிரியர் “அதெல்லாம் எழுதலாம்; எழுதுங்க, நீங்க எழுத்தாளர்தாங்க” என்றார்.
பிறகு உருவானதுதான், இந்த “அச்சம் விடுவோம்; உச்சம் தொடுவோம்” தொடர் கட்டுரை.
நாளிதழ் கூட வாசிக்கக் கிடைக்காத கிராமத்தில் பிறந்த என்னால் ஒரு பத்திரிகைக்கு, அதுவும் ஒரு தொழில் வணிக இதழுக்கு தொடர்ந்து கட்டுரை எழுத முடியும் என்று என்னால் அப்போது நம்ப முடியவில்லை. அதற்கு முழு முதற்காரணம் என்னுடைய திறமை மீதான குறைந்த மதிப்பீடு.
நம்மை விட சிறப்பாக எழுதவல்ல நமது துறை சார்ந்த வல்லுநர்கள் அமைதியாக இருக்கும்போது, நாம் என்ன எழுதுவது என்ற தாழ்வு மனப்பான்மை. ”நன்றாக எழுதுகிறீர்கள்” என்று ஒரு பத்திரிகை ஆசிரியரே சொல்லும் போதும் கூட “என்னால் இது முடியும்” என்று முன் வந்து பொறுப்பேற்க ஒரு வித தயக்கம்.
இவை எல்லாவற்றையும் தாண்டி ஆசிரியர் தந்த ஊக்கமும், எங்கள் தமிழ் ஐயா திரு. ஆடியபாதம் கற்றுத் தந்த மொழிப் புலமையும், நன்மை தீமைகளை கற்றுத் தந்த அனுபவமும் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறது. அனுப வத்திலும், ஏட்டிலும் பெற்றுக் கொண்ட நல்லவைகளை வளர்தொழில் வாசகர் களோடு சுவைபட பகிர்ந்து கொண்டி ருக்கிறேன் என்று திடமாக நம்புகிறேன்.
எழுத்து என்பது அதனை வாசிக்கிற மனிதனை மாற்றாவிட்டாலும் பரவா யில்லை, குறைந்தபட்சம் அதை எழுதுகிற வனையாவது மாற்ற வேண்டும்; அது தான் உண்மையான எழுத்து என்று ஒரு நிகழ்வில் ஞானபாரதி திரு. வலம்புரி ஜான் சொன்னார். உண்மையில் இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்த எனது எண்ண ஓட்டத்துக்கும் அது பயணித்த திசைக்கும் இன்று அது பயணிக்கும் திசைக்கும் வேகத்துக்கும் நிறைய மாற்றங்கள் இருப்பதை உணர்கிறேன்.
கால்கள்
கட்டப்பட்டுள்ளதாய்
களிறுகள் எண்ணிக்கொள்கின்றன;
பாகன்களுக்கு – அது
பயனாய் விளைகிறது!
எதுவும் இங்கே
தடைகள் இல்லை;
காதறுந்த தயக்கச் செருப்பை
தூர எறிந்து விடுங்கள்
வானளாவ பறக்கும் நமக்கு
சுமை கூட்டும் செருப்பெதற்கு…?
– முற்றும்