ஒரு அறிவியல் அறிஞர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆன அதிசயம், முனைவர் அபஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் ஆன போது நடந்தது. இவர் போல மக்களிடம் நெருக்கமாக இருந்த குடியரசுத் தலைவர் வேறு யாரும் இல்லை.
குறிப்பாக இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் இவர் காட்டிய அக்கறை நாடு முழுவதும் மகிழ்ச்சி அலைகளை எழுப்பியது. இவர் மாணவர்களுக்கு மட்டும் வழி காட்டவில்லை. மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்றும், பெற்றோரின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.
அண்மைக் காலமாக இவர் அளவுக்கு இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர் எவரும் இல்லை. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இவர் பேச்சைக் கேட்கவும், இவர் நூல்களைப் படிக்கவும் காட்டிய ஆர்வம் அளவிட முடியாதது. அதற்கேற்ப இவருடைய பேச்சும், எழுத்தும் ஒவ்வொருவரையும் முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளியது.
மாணவர்களை மட்டும் அல்ல தொழில் முனைவோரையும் இவருடைய நூல்கள் வழி நடத்தின. மேலாண்மைக் கல்லூரிகள் பலவும் இவரை தங்கள் கல்லூரிகளுக்கு அழைத்து மகிழ்ந்தன. அவருடைய திடீர்மறைவும் ஒரு மேலாண்மைக் கல்லூரியில், மாணவர்களுக்கு நடுவே நடந்து இருப்பது இன்னும் வியப்புக்கு உரிய ஒன்றாகும்.
அவர் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு, சாதாரண மக்களின் பிரச்சனைகள் புரிந்து இருந்தன. வளர்ச்சி எது என்பதில் உள்ள தெளிவான புரிதலை மக்களிடையே ஏற்படுத்தினார். அவருடைய கருத்துகள் சின்னஞ்சிறு கிராமங்களில் உள்ளவர்களுக்கும் எட்டியது. குடியரசுத் தலைவர் பொறுப்புக் காலம் முடிந்த பின்னரும், அவர் எப்போதும் தனக்குள்ள அதே வேகத்தோடு இயங்கிக் கொண்டு இருந்தார்.
மாணவர்களுடன் இருப்பதை, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்துவதில், அவர்களின் வளர்ச்சிக்கு பயன்படும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு இந்தியாவே வியந்தது.
தன்னுடைய கருத்துகளை எப்போதும் உறுதியுடன் கூறிய இவர், எல்லா கட்சிகளில் உள்ளவர்களுக்கும், எல்லா மாநிலங்களில் உள்ளவர்களுக்கும், எல்லா மதங்களில் உள்ளவர்களுக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் மிகமிக விருப்பமான சமுதாயத் தலைவராக விளங்கினார்.
இவருடைய பிறந்த நாளை மாணவர் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் எழுந்து உள்ளது. இந்த வேண்டுகோளை வளர்தொழில் அதன் வாசகர்கள் சார்பில் வழிமொழிகிறது. இதை அரசு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையுடன் வளர்தொழில் மக்கள் குடியரசுத் தலைவருக்கு தனது ஆழ்ந்த இதய அஞ்சலியை செலுத்துகிறது.
– ஆசிரியர்