ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் தோன்றிய இப்பயிர் உலகின் வெப்ப மண்டலத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. நன்கு முற்றிப் பழுத்த பழங்களின் சதைப்பகுதி இனிமையான சுவையுடனும், அதிக சாறுடனும் இருக்கும். பாலைவனப் பகுதிகளில் தாகத்தை அடக்கும் முக்கிய பழமாக இது பயன்படுகிறது. பூசணி இனப் பயிர்களிலேயே இப்பழத்தில்தான் இரும்புச்சத்து மிக அதிகமாக இருக்கிறது.
மண்வளத் தேவை மற்றும் தட்ப வெப்ப நிலை
அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத் தன்மை குறைவாயும், நல்ல சூரிய வெளிச்சத்துடனும் உள்ள தட்ப வெப்பநிலை, இந்தப் பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்ப நிலையில் விதைகள் முளைப்பு குறைவாக இருக்கும். காய்கள் முதிர்ச்சியடையும் பருவத் தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங் களின் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைப் படும்.
மணல் கலந்த இருமண்பாட்டு நிலம் மிகவும் உகந்தது. மண்ணின் கார – அமில நிலை 6.5-7.0 என்ற அளவில் இருப்பது மிகவும் நல்லது. இருப்பினும் அமிலத் தன்மை 5.0 என்ற அளவு வரையிலும் கூட இப்பயிர் தாங்கி வளரும். இறைவைப் பயிராகப் பயிர் செய்யப்பட்டாலும் குளங் களில் நீர் வற்றியவுடன் கிடைக்கும் ஈரத் தைக் கொண்டே இப்பயிரைப் பயிர் செய்யலாம்.
இரகங்கள்
ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஓர் இரகம். பழங்கள் சிறியவையாயும், நீள் உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களின் சராசரி எடை 15-20 கிலோ. தோல் பசுமையான நிறத்துடன் கரும்பச்சை கோடுகளுடன் காணப்படும். சதைப்பகுதி சிவப்பு நிறம் கொண்டது.
சுகர் பேபி
இந்த இரகமும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்டதாகும். பழத்தின் எடை 4-5 கிலோ. உருண்டையான வடிவமும் கருநீலத் தோலும் கொண்டது. சதைப்பகுதி ஆழ்ந்த சிவப்புநிறம் கொண்டது. இதன் விதைகள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆஷாஹியமாடோ
இது ஜப்பான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓர் இரகம். பழங்களின் தோல் இலேசான பசுமை நிறமுடையது. மேலே மெல்லிய கோடுகள் கொண்டது. சதைப் பகுதி கருஞ்சிவப்பு, ஊதா நிறமுடையது. பழங்களின் சராசரி எடை 7-8 கிலோ.
இதுவும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தால் தருவிக்கப்பட்டு நம் நாட் டிற்கு ஏற்ற இரகம் எனத் தேர்வு செய்யப் பட்டு உள்ளது.
பெரியகுளம் 1
இது பெரியகுளத்திலுள்ள தோட் டக்கலைக் கல்லூரியில் உருவாக்கப் பட்டது. பழங்கள் உருண்டையாகவும், கரும்பச்சை நிறத்தோலுடனும், சிவப்பு நிற சதைப் பற்றுடனும் காணப்படும். எக்டருக்கு சுமார் 37 டன் மகசூல் அளிக்கும். வயது 120-135 நாட்கள்.
அர்கா மானிக்
இது இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கருஓட்டு மூலம் உருவாக்கப் பட்டு (ஐ.ஐ.எச்.ஆர். 21 ஜ் கிரிம்சன் ஸ்வீட்) தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம். பழங்கள் உருண்டையாகவும், நீள உருண்டையாகவும் இருக்கும். தோல் பசுமை நிறமாயும் கரும் பச்சைக் கோடுகளுடன் காணப்படும். சதைப் பகுதி ஆழ் ஊதா கலந்த சிவப்பு நிறம் கொண்டது. பழங்களின் சராசரி எடை 6 கிலோ. எக்டருக்கு 60 டன் வரை மகசூல் அளிக்க வல்லது. இதன் வயது 100 முதல் 110 நாட்கள் வரையாகும்.
துர்காபுரா மீதா மற்றும் துர்காபுரா கேசர்
இந்த இரண்டு இரகங்களும் இராஜஸ் தான் மாநிலத்தின் துர்காபுராவிலுள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக் கப்பட்டவை. மேலே கூறப்பட்ட இரகங் களைத்தவிர சில வீரிய ஒட்டு இரகங்களும் உள்ளன.
அர்கா ஜோதி
இது ஐ.ஐ.எச்.ஆர். 20 ஜ் கிரிம்சன் ஸ்வீட் என்ற கரு ஓட்டின் முதல் தலைமுறை வீரிய ஒட்டு இரகம். பெங்களூரிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. பழங்களின் சராசரி எடை 6 முதல் 8 கிலோ வரை இருக்கும். சதைப்பற்று ஊதா கலந்த நல்ல சிவப்பு நிறத்துடன் அதிக இனிப்புத் தன்மை கொண்டது. பழங்களில் விதையின் எண் ணிக்கை குறைவு. பழத்தின் தோல் வெளிர் பச்சை நிறத்துடன் கரும்பச்சை கோடு களுடன் காணப்படும். பழங்கள் தொலை தூரத்திற்கு அனுப்பினாலும் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை பெற்றவை. சுமார் 90 நாட்களில் எக்டருக்கு 80-85 டன் வரை மகசூல் அளிக்கவல்ல இரகம் இது.
பூசா பேதனா
புது டெல்லியிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டு இரகம். பழங்களில் விதையில்லாதது இதன் சிறப்புத்தன்மை. டெட்ரா 2 ஜ் பூசா ராசல் என்ற கரு ஓட்டின் முதல் தலை முறை வீரிய ஒட்டு இந்த இரகம். சதைப் பகுதி அதிக இனிப்புச் சுவை கொண்டது.
அம்ருத்
மஹிகோ நிறுவனத்தினரால் உருவாக்கப் பட்ட வீரிய ஒட்டு இரகம். பழங்கள் சிறிது நீள் உருண்டை வடிவில் 6-8 கிலோ எடையுடன் காணப்படும். மேல் தோல் கரும்பச்சை நிறத்துடன் சதைப்பற்று ஆழ்ந்த சிவப்பு நிறத்துடனும் காணப்படும். சுமார் 94-100 நாட்களில் எக்டருக்கு 100 டன் வரை மகசூல் அளிக்கவல்து.
பருவம்
ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் விதைக்கப் படும் பயிர், கோடை காலத்தில் அறுவடைக் குத் தயாராகும். கோடை காலத்தில் அறு வடை செய்யப்படும் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதைத்தவிர ஜூன் – ஜூலை மாதங்களிலும் விதைப்பு செய்யப் படுகிறது.
நிலம் தயாரிப்பு, முன்செய் நேர்த்தி மற்றும் அடியுரமிடல்
நிலத்தை 3-4 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது எக்டருக்கு 30 டன் மக்கிய தொழு உரமிட்டு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளி யில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். இந்த வாய்க்கால்களின் உட்புறம் 1 மீட்டர் இடைவெளியில் 45, 45, 45 செ.மீ. நீள, அகல, ஆழ அளவில் குழிகள் தோண்ட வேண்டும். இக்குழிகளில் சம அளவு மேல் மண் மற்றும் தொழு உரம் ஆகியவற்றுடன் கீழே கூறப்பட்ட இரசாயன உரங்களைக் கலந்து இட வேண்டும்.
எக்டருக்குத் தேவையான இரசாயன உரங்கள்
தழைச்சத்து – 30 கிலோ (யூரியா 66 கிலோ)
மணிச்சத்து – 65 கிலோ (சூப்பர் பாஸ்பேட் – 400 கிலோ)
சாம்பல் சத்து – 85 கிலோ (மியூரியேட் ஆஃப் பொடடாஷ் – 142 கிலோ)
மொத்த குழிகள் 5000. எனவே குழி ஒன்றிற்கு 13 கிராம் யூரியா, 80 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிராம் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் கலந்து இட வேண்டும்.
விதையளவு மற்றும் விதைப்பு ஓர் எக்டர் விதைக்க சுமார் 3-4 கிலோ அளவு விதை தேவை. குழி ஒன்றுக்கு 4-5 விதைத்து பின்னர் முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடிகள் இருக்குமாறு கலைத்து விட வேண்டும்.
நீர்ப்பாசனம்
பருவ மழைக்காலங்களில் இது மானாவாரியாகப் பயிர் செய்யப்படுகிறது. கோடைக்காலத்திற்கு அறுவடை செய்யப் படும் பயிர். பாசனப் பயிராகப் பயிர் செய்யப்படுகிறது. மானாவாரியில் மழை வந்தவுடன் குழிகள் தோண்டி விதைப்பு செய்ய வேண்டும். இறைவையில் விதைப்ப தற்கு முன்னர் குழிகளில் நீர் ஊற்றிப் பின்னர் விதைக்க வேண்டும். பின்பு 3-ஆம் நாளும் அதன் பின்னர் 7-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் ஊற்ற வேண்டும். விதைகள் முளைத்து வந்த பின்னரே வாய்க்கால்கள் மூலம் நீர் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாய்ச்சுதல் ஒரே சீரான இடைவெளியில் செய்ய வேண்டும். (சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை என) அதிக நாட்கள் நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவான நிலைக்குப் போன பின்னர் திடீரென்று நீர் பாய்ச்சினால் காய்கள் வெடித்துவிடும். இவ்வாறு வெடித்த காய்கள் விற்பனையில் விலை குறைந்துபோக ஏதுவாகும்.
பின்செய் நேர்த்தி மற்றும் மேலுரமிடல்
விதைத்த 15 மற்றும் 30ஆம் நாட்களில் களைக்கொத்து கொண்டு கொத்திக் களை நீக்கம் செய்ய வேண்டும். விதைத்த 15-ஆம் நாள் (பயிர் 2 இலைகளுடன் இருக்கும் போது) டிபா என்ற பயிர் ஊக்கியை 25-50 பி.பி.எம். என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். (25-50 மி.கிராம்/ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது 250 மி.கிராம் – 500 மி.கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலக்க வேண்டும்) மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து ஒருமுறை தெளிக்க வேண்டும்.
இதற்கு பதிலாக எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 4 முறை தெளிக்கலாம். (12 மி.லி. மருந்து 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து)
1. முதல் இரண்டு இலைப்பருவம்
2. ஒரு வாரம் கழித்து
3. மேலும் ஒரு வாரம் கழித்து
4. மீண்டும் ஒரு வாரம் கழித்து என 4 முறை தெளிக்க வேண்டும்.
கொடிகள் படர ஆரம்பித்தவுடன் வாய்க்கால்களிலிருந்து எடுத்து இடைப் பகுதியில் படரச் செய்ய வேண்டும். பிதைத்த 30ஆம் நாள் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு குழி ஒன்றிற்கு 13 கிராம் யூரியா இட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலை கடிக்கும் வண்டுகளைக் கட்டுப் படுத்த நனையும் செவின் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். சம்பல் நோயி னைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் பெவிஸ்டின் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் போன்ற நச்சு குறைந்த மருந்தினை பயன்படுத்தலாம். ஏனெனில் பழங்களை நாம் சமைத்தோ, வேகவைத்தோ சாப்பிடுவது இல்லை. மற்ற பூசணி இனப்பயிர்களைப் போன்றே இதற்கும் டி.டி.டீ., பி.எச்.சி. போன்ற பூச்சி மருந்துகளையும் தாமிரப் பூசணக் கொல்லி களையும் பயன்படுத்தலாகாது.
அறுவடை
பழங்கள் முற்றிப்பழுத்து அறுவடைக்குத் தயாராகும் நிலையைக் கீழ்க்குறிப்பிட்ட அடையாளங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.
நன்கு முற்றிய பழுத்த பழத்தை விரலால் தட்டிப்பார்க்கும்போது ஒரு மந்தமான ஒலி உண்டாகும். பழுக்காத காய்களைத் தட்டிப் பார்க்கும் போது மணி போன்ற ஓசை எழுப்பும்.
பழத்தில் தரையைத் தொட்டுக் கொண்டி ருக்கும் பகுதி பசுமை நிறம் மாறி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமடையும்.
கொடியில் பழத்தின் அருகிலுள்ள பற்றிப் படரும் கம்பிச்சுருள் காய்ந்துவிடும்.
பழங்களைக் கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கும்போது அப்பகுதி எளிதில் உடைந்து நொறுங்கும்.
சாதாரணமாக மலர் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடந்து சுமார் 30-40 நாட்களில் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். மேற் கூறப்பட்ட எல்லாவித அடையாளங் களையும் பயன்படுத்திப் பார்த்து அறுவடை செய்வது சாலச் சிறந்தது. எக்டருக்கு சுமார் 45-60 டன் வரை மகசூல் கிடைக்கும்.
– டாக்டர் தே. வீரராகவத்தாத்தம்
டாக்டர் மு. ஜவஹர்லால்
டாக்டர் (திருமதி) சீமந்தினி ராமதாஸ்