அண்மையில் தாய்லாந்து அரசு, தமிழ்நாட்டில் இருந்து சில செய்தியாளர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே பாங்காங்கில் உள்ள இம்பேக்ட் எக்சிபிஷன் அண்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உலக ஸ்பா மற்றும் நலவாழ்வு மாநாட்டில் (World Spa and Well being Convention) கலந்து கொள்ளச் செய்தது. வளர்தொழில் சார்பில் முனைவர். கிரி ரங்கசாமி கலந்து கொண்டார். அங்கு சென்று வந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது,
”இந்த மாநாட்டை நடத்த தாய் ஸ்பா அசோசியேஷன் ஏற்பாடு செய்து இருந்தது. அதே வர்த்தக மையத்தில் பியாண்ட் பியூட்டி ஏசியான் (Beyond Beauty Asian) என்ற இன்னொரு வர்த்தகக் காட்சியும் நடைபெற்றது. இதனை இம்பேக்ட் எக்சிபிஷன் மேனேஜ்மென்ட் நடத்தியது. உடல்நலப் பேணல் தொடர்பான தொழில்களை மேம்படுத்தும் வகையில் இந்த வர்த்தகக் காட்சிகள் நடைபெற்றன. பியாண்ட் பியூட்டி ஏசியனில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழில் முறையிலான இருபத்தொன்பது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஸ்பா மற்றும் நலவாழ்வு தொடர்பான தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கோடு இந்த வர்த்தகக் கண்காட்சியும் மாநாடும் நடத்தப்பட்டன.
மாநாடு நடைபெற்ற மூன்று நாட்களும் உடல் நலம் சார்ந்த பல பொருட்கள், கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. பல வர்த்தகப் பரிமாற்றங்கள், உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்பா அமைத்துத் தரும் நிறுவனங்கள் பல வகையான ஸ்பா மாதிரிகளை காட்சிக்கு வைத்து இருந்தன. மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட
அழகையும், உடல்நலத்தையும் பராமரிக்கும் பல தயாரிப்புகள் அங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்தன. உடல்நலப் பராமரிப்பில் இஞ்சி, எள், கடுகு, வெள்ளரிக்காய், மஞ்சள், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றின் பயன்கள்
கருத்தரங்குகளில் விரிவாக விளக்கப்பட்டன.
தாய்லாந்து சுற்றுலாவில் சிறந்து விளங்கும் நாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு அங்கே உள்ளவர்களின் கனிவான விருந்தோம்பல் பண்பு முதன்மையான காரணமாக அமைந்து இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. வெளிநாட்டினரிடம் அங்கே உள்ள அரசு ஊழியர்கள் முதல் குடிமக்கள் வரை இன்முகத்துடன் பழகுகின்றனர். நம்முடைய நாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் பணிபுரிபவர்களையும், அங்கே உள்ளவர்களையும் மனதுக்குள் ஒப்பிட்டுப் பார்த்தபோது வேறுபாட்டை உணர முடிந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தாய்லாந்துக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23.7 மில்லியன் என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்த நாட்டு தொழில் துறை அமைச்சர் அட்சகா சைபன்ருவாங்க்
(Ms. Atchaka Sibunruang), இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை அதிகரிக்க ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
ட்ராப்பிக்கல் மெடிக்கல் டெக்னாலஜி என்ற அரசு சார்ந்த அமைப்புக்கும் எங்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு யோகா, மசாஜ் ஆகியவற்றை உடல்நலனுக்கு ஏற்ற முறையில் பயன்படுத்துவது பற்றி விளக்கம் அளித்தனர். மனதையும் உடலையும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது குறித்த பயிலரங்குகள் நடைபெற்றன.
வருகை தந்த அனைவருக்கும் நறுமணம் மிக்க மூலிகைகளை கொதிக்க வைத்த, புத்துணர்ச்சி தரும் நீரைப் பருகக் கொடுத்தனர். துளசி, பிரண்டை, சிறியாநங்கை, இஞ்சி, மஞ்சள்தூள் ஆகியவை அந்த நீரில் கலந்திருப்பதாக கூறினர்.
மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மை குறித்தும் ஏடுத்துக் கூறப்பட்டதோடு, மசாஜ் செய்வது பற்றி நேரடியாக செய்தும் காட்டப்பட்டது. கால்வலி உள்ளவர்களுக்கு உரிய பாதத்துக்கான பயிற்சி குறித்தும் விளக்கப்பட்டது.. இந்த மாநாடு, உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அது தொடர்பான பொருட்களை காண்போரிடையே அறிமுகப்படுத்துவதிலும் வெற்றி பெற்று விட்டது என்று உறுதியாகக் கூறலாம்” என்றார்.
– நேர்மன்