நேர நிர்வாகம்

‘நேரம் சரியில்லை’ ‘நேரம் போதவில்லை’ ஆகிய இந்த இரண்டுமே முயற்சிக்காதவர்களுடைய சொற்களாகும். நேரத்தின் அருமை தெரிந்த யாருக்கும் ஒவ்வொரு நொடியும் பணம். எல்லா நாளும்,                                   எப்போதும் நல்ல நேரம்தான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலரையும் பார்த்தோமானால் அவர்கள் எல்லாருமே நேர நிர்வாகம் தெரிந்தவர்களாகவும், இருக்கின்ற நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவழிக்கிறவர்களாகவும் இருப்பது தெரியவரும். வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறவர்களுக்கான முக்கிய மூலதனம் நேர நிர்வாகம்.

ஆழ்மனதில் பதிகின்ற எந்த ஒரு செய்தியும் அத்தனை எளிதில் மறப்பதில்லை. நினைத்ததை அடைகின்ற வரைக்கும் அந்த ஆழ்மனம் விடுவதும் இல்லை. ஒவ்வொரு மணித்துளியையும் திட்டமிட்டு செலவழிக்கத் தெரிய வேண்டும். இலக்கை அடைவதற்கான அடிப்படை தகுதி இது. நேர நிர்வாகத்தைக் சில கடைப்பிடிப்பதற்கான வழிகள்:

7

வாரக் கடைசியில் நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் அதில் எத்தனை வேலைகள் உருப்படியானவை, எத்தனை வேலைகள் அனாவசியமானவை, அதற்காக நீங்கள் செலவழித்த நேரம் எவ்வளவு என்று பட்டியல் போடுங்கள். வீணான நேரம் உங்களுக்கான எச்சரிக்கை மணியாகும்.

6

ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வமான, அவசியமான வேலைகள் என்னவென்று பார்த்து அதற்கான நேரத்தை முதலில் ஒதுக்குங்கள்.

5

சின்ன சிரிப்பில் ஆரம்பிக்கின்ற அரட்டைக் கச்சேரி, மணிக்கணக்கில் பார்க்கின்ற தொலைக்காட்சி, மணிக்கணக்கில் பேசுகின்ற தொலைபேசி, ஓய்வு என்னும் பேரால் பல மணி நேரத் தூக்கம் இப்படியான செயல்களிலிருந்து கொஞ்சம் விலகியே இருப்பது நல்லது.

4

நேரந் தவறாமை, வாழ்க்கையில் மிகவும் முக்கியம். இது காலையில் எழுந்திருப்பதில் இருந்து தொடங்கி, வீட்டை விட்டு வெளியே கிளம்புவது, சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பது என்று எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும்.
வேலைக்குப் போகின்ற பெண்கள், சமையல், அடுத்தநாள் அணியப் போகின்ற உடை என்று எல்லாவற்றையும் முன் கூட்டியே பிளான் பண்ண வேண்டும். டென்ஷன் இருக்காது.

3

சிலருக்கு அதிகாலையில் எழுந்து வேலை பார்க்கப் பிடிக்கலாம். சிலருக்கு ராத்திரி நேரம் இப்படி உங்களுக்கு தோதான நேரத்தைக் கண்டுபிடித்து, அந்த நேரத்தில் வேலைகளைச் செய்யலாம்.

2

தினசரி செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல்போட்டு, அந்த நாள் முடிவில் சரி பாருங்கள். இப்படியே வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை என உங்கள் டைரியைச் சரி பாருங்கள். இலக்கை அடைவதில் நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எவ்வளவு, அதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பது தெரியும்.

1

கடைசியில், எந்த வேலையைச் செய்தாலும், விரும்பிச் செய்யுங்கள். பலருடைய கவலையும் இந்த வேலையை எப்படி முடிக்கப் போகிறோம் என்பதில் இல்லை. மாறாக அதை தள்ளிப் போவதில்தான் இருக்கின்றது. வேலையை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அதை தொடங்குவதும், முடிப்பதும் எளிது.

- தங்க. சங்கரபாண்டியன், மணலி புதுநகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here